புதுடில்லி: ''பி.எல்.ஐ., எனப்படும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை திட்டத்தால், நாட்டின் உற்பத்தி திறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 38 லட்சம் கோடி ரூபாயாகஅதிகரிக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'நிடி ஆயோக்' மற்றும் தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை சார்பில், பி.எல்.ஐ., திட்டம் பற்றிய கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீட்டிப்பு
'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்த இந்த கருத்தரங்கில், பிரதமர் மோடி பேசியதாவது: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தான், பி.எல்.ஐ., திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பல துறைகளுக்கும், இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கச் சலுகை திட்டத்தின் வாயிலாக, உலகளவிலான போட்டிகளை, நிறுவனங்கள் சமாளிக்க முடியும். பி.எல்.ஐ., திட்டத்துக்காக, 2021 - 22ம் ஆண்டு பட்ஜெட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், நாட்டின் உற்பத்தி திறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்கத் தொகை
உற்பத்தி துறைகளில் இப்போது பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கையும், ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், சராசரியாக உற்பத்தியில், 5 சதவீதம், ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
உற்பத்தி துறைக்கு இதற்கு முன் அளிக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டங்களுக்கும், இப்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊக்கத் தொகை திட்டத்துக்கும், அதிக வேறுபாடு உள்ளது. இப்போது, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்பாட்டின் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
மருந்து, மருத்துவ சேவை, மொபைல் போன்கள், மின்னணு பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட, 13 துறைகளில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடிக்கு 'செராவீக்' விருது
'செராவீக்' மாநாட்டில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு, நேற்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அமெரிக்காவில், செராவீக் எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு, கடந்த, 1ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவங்கியது. நேற்று வரை நடந்த இந்த மாநாட்டில், 'செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்' எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான விருது, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, நேற்று வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதை பெற்ற பின், பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களுமே, உலகிற்கு பெரிய சவால்களாக உள்ளன. கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வாயிலாக, இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை, 2030ம் ஆண்டுக்குள், இந்தியா அடைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'எக்ஸாம் வாரியர்ஸ்' புதிய புத்தகம்
மோடி பிரதமராக பதவியேற்ற பின், மாதந்தோறும், 'மன் கீ பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆலோசனை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சியில் ஆற்றிய உரைகளுடன், தன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகள் மற்றும் அதற்கான தீர்வுகளை, எளிய நடையில், ஆங்கிலத்தில், 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற தலைப்பில், பிரதமர் மோடி புத்தகமாக எழுதினார். இந்நிலையில், தற்போது இந்த புத்தகத்தில் மேலும் சிலவிஷயங்களை பிரதமர் சேர்த்து உள்ளார். பெற்றோருக்கான மந்திரங்கள், மன நலம், தொழில்நுட்பத்தின் பங்கு, நேர மேலாண்மை உட்பட பல விஷயங்கள் பற்றி, பிரதமர் எழுதியுள்ளார்.எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தின் புதிய பதிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளதாக, 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ்' பதிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த புத்தகம், 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்பிரதமருடன் பேச்சு
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் பிரதமர் ஸ்டீபன் லேபென்னுடன், பிரதமர் மோடி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:இந்தியாவும், ஸ்வீடனும், பல துறைகளில் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கழிவுகள் மேலாண்மை, 'ஸ்மார்ட் சிட்டி' உட்பட பல துறைகளில், இரு நாடுகளுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது; இது மேலும் வலுப்பட வேண்டும். புதிய கண்டு பிடிப்புகள், தொழில்நுட்பம், முதலீடு, ஆராய்ச்சி ஆகிய துறைகளில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு, நட்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE