கூட்டணியில், பா.ஜ.,வைத் தான் தங்களுக்கு அடுத்த பிரதான கட்சியாக நினைக்கிறது, அ.தி.மு.க., அதனால் தான், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் இருந்த நிலையிலும், இரு மாதங்களுக்கு முன், சென்னை வந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முன், 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடரும்' என, அறிவித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,
அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் கட்சியின் முடிவை, அரசு விழா மேடை என்றும் பாராமல் தெரிவிக்க, அடுத்து பேசிய முதல்வர் ஈ.பி.எஸ்.,சும், வழி மொழிந்தார். ஆனால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில், பா.ஜ., தரப்பில் இன்றளவிலும் தயக்கம் தொடர்கிறது ஈ.பி.எஸ்.,சை முதல்வர் வேட்பாளராக அ.தி.மு.க., அறிவித்த பிறகும், இன்று வரை பா.ஜ., தரப்பில் பிரதமர் மோடி உட்பட எவருமே அதை அங்கீகரித்து கருத்து சொல்லவில்லை. அதையும் பெரிதுபடுத்தாமல், பா.ஜ.,வுடன் பேச்சு நடத்துகிறது அ.தி.மு.க.,
தர்ம சங்கடம்
மத்திய அமைச்சர் வி.கே.சிங், இணையமைச்சர் கிஷன் ரெட்டி, மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் அ.தி.மு.க., குழுவுடன் இரு முறை பேசினர். ஆரம்பத்திலேயே, 60, 'சீட்' கேட்டு அதிரவைத்த பா.ஜ., தரப்பு, அதற்கான பட்டியலையும் கொடுத்தது. அதில் பல தொகுதிகள் அமைச்சர்கள் மீண்டும் போட்டியிட விரும்பும் தொகுதிகள். இதனால் அ.தி.மு.க.,வுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.
''தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதே அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை,'' என, வருத்தத்துடன் நம் நிருபரிடம் சொன்னார், பேச்சு விவரங்களை அறிந்த ஓர் அமைச்சர்.''மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் அவங்க கையில இருப்பதால், தமிழ்நாட்டுக்கும் தாங்களே உரிமையாளர்கள் என்ற தோரணைல பேசுறாங்க. ''நாங்க எவ்வளவோ மரியாதையோட கருத்து சொன்னாலும், உடனே குறுக்கிட்டு, 'நாங்க சொல்றத கேளுங்க...'னு அதிகார தொனில பேசுறாங்க. அதான் முடிவு வராம இழுத்துகிட்டே போகுது,'' என்றார் அவர்.அமைச்சர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் விரும்பும் தொகுதிகளையும் பா.ஜ., கேட்கிறது.
அ.தி.மு.க., கணக்கு
ஜோலார்பேட்டை, கரூர், விருதுநகர், கோவில்பட்டி என்று பா.ஜ., குழு, 'லிஸ்ட்' வாசித்த போது, அ.தி.மு.க., தரப்பால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. 'முதலில் எண்ணிக்கையை முடிப்போம்; பிறகு தொகுதிகள் பற்றி பேசுவோம்' என, கூறியது.இதனால், அ.தி.மு.க., தலைமை மீது பா.ஜ., தரப்புக்கு கோபம். ஆனாலும், பேசி முடித்து ஒப்பந்தம் போட்ட பிறகு தான் டில்லி திரும்புவது என்ற முடிவோடு இருக்கிறார், கிஷன் ரெட்டி.
அதிகபட்சம் போனால், பா.ம.,வுக்கு கொடுத்த, 23ல் ஒன்று குறைத்து, 22 பா.ஜ.,வுக்கு கொடுக்கலாம் என்பது, அ.தி.மு.க., கணக்கு. ஆனால், பா.ம.க.,வை காட்டிலும் தங்கள் கட்சி பெரிது என பா.ஜ., நம்புவதால், 23+7=30 'கட் ஆஃப்' என்கிறது.இழுத்தடிக்க பா.ஜ., விரும்புவது தெரிந்ததும், அ.தி.மு.க., முதல் கட்டமாக, ஆறு தொகுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. அடுத்தடுத்து பட்டியலை அறிவிக்க இருப்பதால், பா.ஜ., ஓடி வந்து பேசி முடிக்கும் என அது எதிர்பார்க்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE