மதுரை : மதுரையில் குடும்ப பிரச்னையுடன், பணி தொடர்பான மனஅழுத்தமும் அதிகரித்ததால் தெற்குவாசல் போலீஸ்காரர் பொன்னுசெல்வம் 35, மனைவி, மாமியார் மீது குற்றம் சாட்டியும், 'வாரம் ஒருமுறை போலீசிற்கு விடுமுறை விடுங்க... அதுவே என் கடைசி ஆசை' என்று அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி முகநுாலில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அவனியாபுரம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இவர், தெற்குவாசல் சட்ட ஒழுங்கு பிரிவில் பணியாற்றகிறார். இவரது மனைவி குறிஞ்சிமலர். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. நேற்று காலை தனது முகநுாலில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், என் சாவுக்கு மனைவியும், மாமியார் மீனாவும்தான் காரணம். நான் போலீசாக இருப்பதால் என்னை மிரட்டி, என் அம்மாவிடம் செல்லக்கூடாது என்று தடுக்கின்றனர். என் தங்கையிடம் பேசக்கூடாது என மிரட்டுகிறார்கள். என் முழு சம்பளத்தையும் கேட்கிறார்கள். தரமறுத்தால் என் சட்டையை கழற்றி விடுவேன் என மிரட்டுகிறார்கள். இவர்களை போலீசார் தண்டிக்க வேண்டும்.
என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. என் கடைசி ஆசை...: போலீஸ் உயர் அதிகாரிகளையும், முதல்வர் ஐயாவையும் கேட்டுக் கொள்கிறேன். என் போன்ற அடிமட்ட போலீசார் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு கேரளா போன்று சங்கம் தர வேண்டாம். ஆந்திரா போன்று சம்பளம் தரவேண்டாம். வாரம் ஒரு நாள் விடுமுறை அறிவியுங்கள். அதுவே என் கடைசி ஆசை. இவ்வாறு தெரிவித்திருந்தார். இதை பார்த்த சக போலீசாரும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்து நேரில் சென்றபோது விஷம் குடித்திருந்தார்.
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது உடல்நலம் தேறி வருகிறார். இதற்கிடையே அவரது முகநுாலில் வெளியான கடிதம் போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுரைப்படி நீக்கப்பட்டது. போலீசாரின் மனஅழுத்தத்தை போக்க மனநலப்பயிற்சி அளிக்கப்படும் நிலையில் இந்த தற்கொலை முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE