இரா.கிருஷ்ணமூர்த்தியின் கீர்த்தி ஒளிக்கீற்றாய் எப்போதும் மின்னும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரா.கிருஷ்ணமூர்த்தியின் கீர்த்தி ஒளிக்கீற்றாய் எப்போதும் மின்னும்

Updated : மார் 07, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை :சங்க கால நாணயவியலின் தந்தை, 'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பத்திரிகையாளர் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் அளப்பரிய பணி, தமிழ் நாளிதழ்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்' என, பாராட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட்
Dinamalar, R Krishnamurthy, epigraphist

சென்னை :சங்க கால நாணயவியலின் தந்தை, 'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பத்திரிகையாளர் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் அளப்பரிய பணி, தமிழ் நாளிதழ்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்' என, பாராட்டியுள்ளனர்.


மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர், கே.பாலகிருஷ்ணன்:


தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகை ஆசிரியராக மட்டுமின்றி, சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடிப்பதில், நாணயவியல் செயல்பாட்டாளராகவும் பணியாற்றினார். அவரது மறைவு, பத்திரிகை மற்றும் நாணயவியல் துறைக்கு பெரும் இழப்பு.


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:


டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் இதழியல் துறையில் மட்டுமின்றி, தொல்லியல் துறையின் ஆராய்ச்சித் தளங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். நாணயவியல் ஆராய்ச்சியில் போற்றுதலுக்குரிய பங்களிப்பைச் செய்தவர்.
ஆராய்ச்சிகளின் வழியே தமிழினத்தின் புதைந்த, சிதைந்த வரலாற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். தமிழ் மொழி குறித்த அவரது ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்டு தான், தமிழக அரசு, தமிழுக்கு செம்மொழி தகுதி கோரியது.


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்:


'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியரும், பங்குதாரருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சங்க கால நாணயவியல் ஆராய்ச்சி செய்வதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். சிறந்த தமிழ் பற்றாளர். அவரது மறைவு, இதழியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்கு அஞ்சலி.


அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர், எஸ்.பி.தியாகராஜன்:


எங்கள் அன்பான அய்யாவின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். அவரின் ஆன்மாவுக்கு, அனைத்து ஆசிர்வாதங்களையும் கடவுள் வழங்கட்டும்.


சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:


பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக, 1998 முதல் ஆண்டுதோறும், 'தினமலர்' நடத்தி வரும், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியின் வாயிலாக, பள்ளி மாணவ - மாணவியர் ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு வித்திட்ட, இரா.கிருஷ்ணமூர்த்தியின் இழப்பு, 'தினமலர்' நிறுவனத்துக்கு பேரிழப்பு.தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா:


சமூக செய்திகளையும், அரசியல் மற்றும் வணிகம் சார்ந்த செய்திகளையும், பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், தன்னுடைய சாதுர்யத்தை மிகவும் அழுத்தத்துடன் பதிவு செய்யும் திறமை பெற்றவர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவருடைய இழப்பு, பத்திரிகை மற்றும் வணிக துறை சார்ந்த எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலர் பாரதி தமிழன்:'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, மிகச்சிறந்த பத்திரிகையாளர் மற்றும் நாணவியல் அறிஞர். செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை, தமிழக அரசு, முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.


சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன்:'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு, சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.


தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் புருஷோத்தமன்:பத்திரிகை சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர். தமிழ் ஆட்சி மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர். கணினிக்கு ஏற்ற வகையில், தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி எழுத்துருக்களை உருவாக்கியவர். அவரின் மறைவு, தமிழ் நாளிதழ் துறைக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பேரிழப்பு.


அனைத்திந்திய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் இரா.முகுந்தன்:இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு, பத்திரிகை உலகிற்கு ஒரு பேரிழப்பு. என்னுடன் மிகவும் பழகும் மாபெரும் மனிதர். டில்லியில் அவருக்கு, 'தொல்காப்பியர்' விருது கிடைத்த போது, அவரை கவுரவித்ததை நினைவுகூர்கிறோம்.புதுச்சேரி, பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவன தலைவர் கவிஞர் கோ.பாரதி:இதழியல் வாயிலாக எங்களுக்கு ஆதரவு நல்கியவர். உதவி கேட்ட பலருக்கும் உள்ளன்புடன் ஆதரவு காட்டிய நல்லுள்ளம் படைத்தவர். பல்வகை சிறப்புகளை, தம்முடைய பண்புகளால், உழைப்பால், ஆழ்ந்த ஆற்றலால் அடைந்தவர்.


தமிழக வரலாற்று பேரவை பொதுச் செயலர், பேராசிரியர் சுந்தரம்:வரலாற்றாய்வாளர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். தமிழக வரலாற்று பேரவை சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு, எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.


தமிழறிஞர் அவ்வை நடராஜன்:'தினமலர்' குடும்பத்தில் திறனாளர்கள் பலர் இருந்தாலும், 'தினமலர்' என்ற உடனேயே அறிஞர் கிருஷ்ணமூர்த்தி நினைவு தான், தமிழர் உள்ளங்களில் எப்போதும் நிலையாய் நின்றது.
கணினி வரைவு புதுமை, எழுத்துச் சீர்மை, கல்வெட்டுத்தோய்வு, நெஞ்சுரம், நாணயவியலின் முன்னோடி, நேர்மைத்திறம் கொண்ட இதழாசிரியர் என்று அவரது ஆற்றல் முகடுகளை அளவிட்டு புகழ முடியாது. கிருஷ்ணமூர்த்தி மறைந்தாலும், அவர் கீர்த்தி எப்போதும் ஒளிக்கீற்றாய் மின்னிக் கொண்டிருக்கும்.தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம்:'தினமலர்' நாளிதழின் அதிபரும், சிறந்த கல்வெட்டு தமிழ் ஆராய்ச்சியாளருமான, இரா.கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகை உலகின் ஜாம்பவான். தமிழுக்கும், தமிழ் ஆர்வலருக்கும் தொண்டு செய்து வந்த பெருமகனார் இயற்கை எய்தி விட்டார் என்ற செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது.


அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன்:சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், சேதுபதி மன்னர்கள், வேலு நாச்சியார், மருது பாண்டியர் ஆகியோரின் ஆட்சிக்கால நாணயங்களை அடையாளம் காட்டியவர். தென் மாவட்ட மன்னர்களின் வரலாற்று ஆய்வுக்கு ஆயுதமாக, இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணய ஆராய்ச்சி வலுவாக இருந்தது.


சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன்:நாளிதழில், தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை முதன் முதலில் கண்டவர் இரா.கிருஷ்ணமூர்த்தி. கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், முதன் முதலில் எழுத்துக்களை உருவாக்கியவர். ஆய்வுப் பணிகளுக்கு சிறந்த அங்கீகாரம் வேண்டும் என்ற குறிக்கோளில் வெற்றி கண்டவர்.


மைசூர் இந்திய தொல்பொருள் துறை, முன்னாள் இயக்குனர் ரவிசங்கர்:எங்களின் அன்பான மற்றும் தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் மரியாதைக்குரிய தலைவரின் திடீர் மறைவை அறிந்து, மிகவும் வருந்துகிறோம்.


தமிழ் திரைப்பட தினசரி பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலர் கே.எம்.மீரான்:பத்திரிகை ஆசிரியராக மட்டுமின்றி வரலாற்றை பதிவு செய்யும் நாணயவியல் அறிஞராகவும், தமிழ் செம்மொழியாகவும், முதல் காரணமாக இருந்தவர். மக்களின் மொழியில், மக்களுக்கு தேவையான செய்திகளை எளிமையாக தந்தவர். அவரது பணிகள், பத்திரிகை உலகுக்கு வழிகாட்டியாக இருக்கும்.


தேசிய ஊடகவியாளர் நலச்சங்க நிறுவன பொதுச் செயலர் எம்.ஆர்.ஜெயகிருஷ்ணன்:புரட்சிகரமான கருத்துக்களை வெளியிடும், 'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தமிழுக்கு மிகப் பெரிய தொண்டாற்றியுள்ளார். நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்து, புத்தகங்களையும் வெளியிட்டார். அவருக்கு, மத்திய - மாநில அரசுகளும், லண்டன் அமைப்புகளும் உயரிய விருதுகள் வழங்கி கவுரவித்தன.


நாணயவியல் அறிஞர் பீனா சரசன்:இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானது, தென்னிந்திய நாணயவியல் ஆராய்ச்சிக்கு பெரும் இழப்பு. அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.

* ஓவியர் ஜெபி: அன்புள்ளவர், பண்பாளர். பல நுாறு பண்டைய நாணயங்களை வரைவதற்கு என்னை அழைத்து, அன்போடு பேசுவார். மாமல்லபுரத்து ஓவிய கண்காட்சியை துவக்கி வைத்து பாராட்டினார். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிர மஹாஜன சங்கம் எஸ்.ஜெ.ராஜன்:


ஆர்.கே., என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பண்பாட்டு காவலர். தமிழ் இலக்கியம் மற்றும் நம் பழங்கால நாணயங்கள் குறித்தான முழு தரவுகளையும் அடுத்து வரும் தலைமுறைக்கு எளிதாக எடுத்துச் சொல்லும் அரிய ஆய்வுப் பணியை, பேராற்றலுடன் செய்து ஆவணமாக்கியவர்.


பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்:இதழ் மூடா தாமரையே, ஓய்வறியா தினமலரே. தமிழகத்தின் தேசியம் உயர்த்திய பொற்கரமே. நாணய ஆய்வின் மூர்த்தியே, நன்னடத்தையின் நாணயமே. உமக்கு பா.ஜ.,வின் இதய அஞ்சலி.


சிறுதாமூர் சீனுவாசர் அறக்கட்டளை, நிர்வாக அறங்காவலர் விஜயகிருஷ்ணன்:நாணயவியல் அறிஞர், ஆய்வாளர், மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளர் கிருஷ்ணமூர்த்தியின் அளப்பரிய பணிகள் வாயிலாக, பாரத சமூகம் பயன் பெற்று வருகிறது. மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்று வாழ்வில் வெற்றி பெற, நாளிதழ் வழியாகவும், நேரிலும் தொடர்ந்து உதவினார்.


அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா:தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை, முதன் முதலில் அறிமுகம் செய்தவர். கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், எழுத்துருக்களை உருவாக்கியவர். தமிழ் மொழி வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றிய ஒரு ஆளுமையை, தமிழகம் இழந்துள்ளது.


தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ்:


'தினமலர்' கவுரவ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியை, இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் ராயல் நாணயவியல் கழகம், கவுரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.சங்க கால நாணயங்களை தேடி, கண்டுபிடித்து, ஆராய்ந்து, தமிழர் நாகரிக வரலாற்று தொன்மையை அவர் வெளிக்கொண்டு வந்தார்.


பொட்டல்புதுார், வாசக நண்பன் நெல்லை குரலோன்:உழைப்பு திலகம் இரா.கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா சாந்தி அடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.


ஹிந்து தமிழர் கட்சி, நிறுவன தலைவர் ராம ரவிக்குமார்:பத்திரிகையாளராக மட்டும் அல்லாது, நாணயவியல் ஆராய்ச்சியில் பல புத்தகங்களை வெளியிட்டு, வருங்கால தலைமுறைகளுக்கு, பல ஆவணங்களை விட்டு சென்றவர். கல்விப் பணிகளில் பல உதவிகளை, தொண்டுகளை செய்த கல்வி கொடையாளர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி.


ஸ்ரீவில்லிபுத்துார், வி.எச்.பி., துறவியர் பேரவை, மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக்:தலைசிறந்த தேசியவாதியுமான கிருஷ்ணமூர்த்தியின் மறைவு, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவால் தவிக்கும் குடும்பத்தினருக்கும், 'தினமலர்' ஊழியர்களுக்கும் வலியை தாங்கும் வல்லமையை தரவும், அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், தாயார் ஆண்டாளிடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துறவியர் பேரவை சார்பாக பிரார்த்திக்கிறேன்.


கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர்:


'தினமலர்' கவுரவ ஆசிரியர், மூத்தவர் ஆர்.கே., என்கிற இரா.கிருஷ்ணமூர்த்தி இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன்.


'தாம்ப்ராஸ்' மாநில பொதுச் செயலர் ரமேஷ்குமார்:உலகம் போற்றும் நாணயவியல் அறிஞர், 'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியர் இரா.கிருஷ்ணமுர்த்தி. தினமலரை உலகத் தரம் வாய்ந்த பத்திரிகையாக உருவாக்கியதில் அவரது பங்கு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.


* கவிஞர் பால.இரமணி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி:அய்யா மறையவில்லை; தமிழர்கள் விடியலில் ஊடகமாக நிறைந்திருப்பார். பத்திரிகை அறமாக நிலைத்திருப்பார். குடும்ப அஞ்சலி செலுத்துகிறோம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X