புதுடில்லி : பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி, மத்திய அரசு வைத்த கோரிக்கையை, பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நிராகரித்தது.பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு, 'ஒபெக் ப்ளஸ்' என அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவலின் போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், உலகம் முழுதும் பெட்ரோலிய பொருட்களின் தேவை குறைந்தது. இதையடுத்து, பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியை தற்காலிகமாக குறைப்பதாக, ஒபெக் ப்ளஸ் தெரிவித்தது. இதை, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. தற்போது, தொற்று பரவல் குறைந்த பிறகும், பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கப்படாததால், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த வாரம் கருத்து தெரிவித்தார்.இந்நிலையில், ஒபெக் அமைப்பின் கூட்டம், நேற்று முன் தினம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.
அப்போது, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர, ஏற்கனவே உறுதி அளித்ததன் அடிப்படையில், உற்பத்தி கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி கோரிக்கை வைத்தார்.சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை பாதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த, மேற்காசிய நாடான, சவுதி அரேபிய எரிசக்தித்துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் கூறுகையில், ''இந்திய அரசு, கடந்த ஆண்டு மிக குறைவான விலையில் வாங்கி சேமித்து வைத்துள்ள கச்சா எண்ணெயை தற்போது பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும்,'' என தெரிவித்தார்.
மத்திய அரசு, கடந்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில், ஒபெக் ப்ளஸ் அமைப்பிடம் இருந்து, ஒரு பேரல், 19 அமெரிக்க டாலர் என்ற விலையில், 1.67 கோடி பேரல் கச்சா எண்ணெய் வாங்கியது. இவற்றை, ஆந்திராவின் விசாகப்பட்டினம், கர்நாடகாவின் மங்களூரு மற்றும் படூர் ஆகிய இடங்களில் சேமித்து வைத்துள்ளது. இந்த தகவலை, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராஜ்யசபாவில் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE