பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெயரால் நாணயவியல் கழகம்: அறிஞர்கள் யோசனை

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: நாணயவியல் மற்றும் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிகளால், தமிழின் தொன்மையை நிரூபித்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பெயரால், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாணயவியல் கழகம் துவங்க வேண்டும் என, தொல்லியல் அறிஞர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.'தினமலர்' நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு குறித்து, தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் அளித்த பேட்டி மற்றும்
Dinamalar, R Krishnamurthy, epigraphist

சென்னை: நாணயவியல் மற்றும் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிகளால், தமிழின் தொன்மையை நிரூபித்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பெயரால், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாணயவியல் கழகம் துவங்க வேண்டும் என, தொல்லியல் அறிஞர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

'தினமலர்' நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு குறித்து, தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் அளித்த பேட்டி மற்றும் இரங்கல் குறிப்புகளின் விவரம்:


பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன்:

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினருடன், 50 ஆண்டுகளுக்கும் மேல் பழகி வருகிறேன். 'தினமலர்' தரமான பத்திரிகையாக விஸ்தரித்து, மக்கள் மனதில் ஆதரவு பெருக, அய்யா கிருஷ்ணமூர்த்தியின் பங்கு முக்கியமானது. அவர் பலவிதமான நாணயங்களை வைத்து, அதன் வரலாற்றை கூறும்போது, நான் வியந்து போவேன். அவரது இறப்பு, அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் பேரிழப்பு.


துணை சபாநாயகர் ஜெயராமன்:

இந்திய நாணயவியலாளர்களின் தந்தையாக, நாணயவியல் துறையின் மூத்த முன்னோடியாக விளங்கியவர்.நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி; தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன், நெருங்கிய நட்பில் இருந்தவர். தமிழுக்கும், பத்திரிகை துறைக்கும் அவர் செய்துள்ள சேவை, என்றென்றும் மறக்க முடியாதது. மத்திய - மாநில அரசுகள், அவரை கவுரவிக்க வேண்டும்.


தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்:

கடந்த, 1999 முதல், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அய்யாவை எனக்கு தெரியும்.செய்தித் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும், முதல் முறையாக, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை, கலைவாணர் அரங்கில் துவக்கியவர். நான் மாவட்ட கலெக்டராக இருந்தபோது கூட, அவரை தொடர்பு கொண்டால், பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். அவரது இழப்பு, மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.


தே.மு.தி.க., துணை செயலர் பார்த்தசாரதி:

ஜனநாயகத்தின் ஆணிவேரான பத்திரிகை துறையில், மிகப்பெரிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர், 'தினமலர்' பெரியவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவரது மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சார்பில், ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம்.


அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை தாயம்மாள்:

நான், அய்யா அவர்களின் ஊரைச் சேர்ந்தவள். என்னுடைய தாத்தா, அய்யா அவர்களின் மாமனாரின் உப்பளத்தில், வேலை செய்தவர்.எங்கள் ஊருக்கு ரயில் வந்ததற்கு, ராமசுப்பையர் தான் காரணம். விடுதலை போராட்டத்தில் பெரும் பங்காற்றிய, ராமசுப்பையரின் மகன் தான், கிருஷ்ணமூர்த்தி.எங்கள் அறக்கட்டளை சார்பில், 48 அறிஞர்களுக்கு விருது அளித்துள்ளோம். அதில் அய்யா கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவியும் பங்கேற்று விருது பெற்றதுடன், விருதுகளை வழங்கவும் செய்துள்ளனர். துாய்மையான மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, என் ஆழ்ந்த இரங்கல்கள்.


latest tamil news
காமராஜர் தேசிய காங்., தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன்:

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 40 ஆண்டுகளுக்கும் மேல் எனக்கு பழக்கமானவர். நட்பின் சிகரமாகவும், மனித நேயத்தின் சிகரமாகவும் வாழ்ந்தார்.பத்திரிகை துறையில் தர்மத்தை நிலைநாட்டியவர். அவரது மரணம், நம் நாட்டிற்கும், பத்திரிகை உலகுக்கும் பேரிழப்பு.


வேளச்சேரி எம்.எல்.ஏ., வாகை சந்திரசேகர்:

நான் கலைத் துறையில் இருந்தது முதல், அரசியலில் முழு ஈடுபாடுடன் உள்ள இன்று வரை, 30 ஆண்டு காலமாக ஆசிரியரை, எனக்கு நன்றாக தெரியும்.பல விஷயங்களை அவருடன் நான் பேசி உள்ளேன்; அதற்கான உரிமையை எனக்கு வழங்கி இருந்தார். தமிழர்களுக்கும், வாசகர்களுக்கும் அவரது மறைவு பேரிழப்பு.


இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜுனமூர்த்தி:

தமிழகத்தில் கல்வி சிறப்பாக வளர்ச்சிடைய, பல முயற்சிகளை சமூக வலைதளங்கள் இல்லாத காலத்திற்கு முன்பே திறம்பட செய்துள்ளார்.கல்வியாளர்களுக்கு சிந்தனைகளையும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆர்வத்தையும், உருவாக்கும் வகையில், பல்வேறு பணிகளை செய்துள்ளார்.


பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்:

பத்திரிகை துறையில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அமைத்து கொடுத்த பாதையில் தான், எங்களை போன்றவர்கள் சைக்கிளில் பயணிக்கிறோம்.ஒரு பொக்கிஷம் நம்மை விட்டு சென்று விட்டதாக நினைக்கிறேன். பலர் பத்திரிகைகளை நடத்துகின்றனர்; ஆனால், வரலாற்றில் மிகப்பெரிய பதிவை செய்து வைப்பது, சாதாரண விஷயம் அல்ல.


தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு:

பத்திரிகை உலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தமிழ் மரபுகளையும், பண்புகளையும் பாதுகாத்து வந்தவர். நாணயவியல் துறையில், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இந்திய சமுதாயம் பயன் பெறும் வகையில், தன்னுடைய பங்களிப்பை கொடுத்து, அதன் வாயிலாக, எதிர்கால சந்ததியினருக்கு, உன்னதமான சூழலை ஏற்படுத்தி கொடுத்தவர் என்பதில், ஒவ்வொரு இந்தியனும், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும்.


கவிஞர் காசி முத்து மாணிக்கம்:

விளம்பரங்களை மட்டுமே தேடுகின்ற பத்திரிகை உலகில், அரசு மற்றும் தனியார் விளம்பரங்கள் இன்றி, ஒரு செய்தித்தாளை நடத்த முடியும் என, காட்டியவர்.வார இதழ்களில் மட்டுமே வெளி வந்த அரசியல் கிசுகிசுக்களை, 'டீக்கடை பெஞ்ச்' வாயிலாக கொண்டு வந்து, புரட்சி செய்தார். ரயில்களில் செல்லும்போது, கையடக்கமாக புத்தகங்கள் வேண்டும் எனக்கூறி, வார பத்திரிகை அளவுக்கு, ஒவ்வொரு இதழிலும் இணைப்பிதழை கொடுத்தவர்.


தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி:

மதிப்பிற்குரிய நாணயவியலின் தந்தை, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி என்னுடன், 30 ஆண்டுகளாக நட்பில் இருந்தவர். தற்போதுள்ள, தென்னிந்திய நாணயவியல் கழகத்தை தோற்றுவித்தவர். அவரது கண்டுபிடிப்புகள், தமிழுக்கும், தமிழர்களுக்கும் என்றென்றும் பெரிய பொக்கிஷமாக இருக்கும்.கடந்த, 1984ல் சங்க கால பெருவெழுதி நாணயங்களை, அவர் கண்டுபிடித்த பின்பு தான், தமிழ் நாணயங்களுக்கு பெருமை சேர்ந்தது.தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் அழகாக எழுதக் கூடியவர். தமிழ் தாத்தா, உ.வே.சாமிநாத அய்யரின் நுாலகம் மிகவும் மோசமாக நிலையில் இருந்தது. அப்போது, செயலராக இருந்த என்னை அழைத்து, பணத்தை பற்றி கவலைப்படாமல் நுாலகத்தை புனரமைக்க கூறி, அதற்கு உதவியும் செய்தார்.

தமிழ் நுால்களை பிரதி எடுத்து வைப்பதற்காக, 'தினமலர்' இதழில் இருந்தே, ஒரு தட்டச்சரை எங்களுக்கு வழங்கி உள்ளார். இதுபோல, அவர் தமிழ் சரித்திரத்திற்கும், தமிழர்களுக்கும் செய்த பல பெருமைகளை நினைவில் கொள்கிறேன். டி.ஏ.வி., குழும பள்ளிகள் செயலர் விகாஸ் ஆர்யா: இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு, எங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. டி.ஏ.வி., குழும பள்ளிகள் சார்பில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரின் மறைவு, ஊடகத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நாணயவியல் துறையில் அவரது பங்களிப்பு என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.இவ்வாறு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மார்-202109:36:21 IST Report Abuse
ருத்ரா இந்த யோசனை நாணயமானவருக்கு கிடைத்த கௌரவம். மிக்க மகிழ்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X