புதுடில்லி : 'ரம்ஜான் பண்டிகை அன்று, சி.பி.எஸ்.இ., தேர்வு நடத்தக் கூடாது' என்ற கோரிக்கையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, மே, 13, 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், தேர்வு நடக்காத வகையில், தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மே, 14 அன்று, ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறை நாளாக, மத்திய - மாநில அரசுகள், அறிவித்துள்ளன. ஆனால், ரம்ஜான் நாள் பிறை தென்படுவதில், எப்போதுமே மாற்றங்கள் இருப்பது உண்டு. பிறை தென்படுவதை பொறுத்து, அந்த மாற்றம் இருக்கும் என்பதால், ரம்ஜான் பண்டிகை, குறிப்பிட்ட தேதிக்கு, ஒருநாள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ அமைய வாய்ப்பு உள்ளது.
ஆனால், இதை பரிசீலிக்காமல், சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, மே, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஒருவேளை, 14ம் தேதிக்கு முன்போ அல்லது பின்போ, ரம்ஜான் பண்டிகை இருக்கலாம் என்பதால், இந்த தேதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக, மதுரை லோக்சபா தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசனிடமிருந்து, மத்திய அரசுக்கு கடிதம் வந்திருந்தது. இந்த கடிதத்துக்கு, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுப்பியிருந்த பதிலில் கூறப்பட்டிருந்ததாவது: சி.பி.எஸ்.இ., தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம் மேற்கொள்வது குறித்து, தாங்கள் அனுப்பியிருந்த கடிதம் கிடைக்கப் பெற்றது. அதில் குறிப்பிட்டுள்ள கோரிக்கையின் மீது, பொருத்தமான நடவடிக்கை, மத்திய கல்வி அமைச்சகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை, சி.பி.எஸ்.இ., நிறுவனம் சார்பில், மாற்றி அமைக்கப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 13, 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், எவ்வித தேர்வுகளும் நடக்காத நிலையில், தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE