முன்னாள் எம்.எல்.ஏ., பேச்சாளர், நடிகர், வாசகர், எழுத்தாளர் என, பன்முகம் கொண்டவர், பழ.கருப்பையா. அவருடன் உரையாடியதிலிருந்து:
உங்களின் இளமை வாசிப்பு குறித்து சொல்லுங்கள்?
நான் சிறுவயதில், கதைகளைத்தான் அதிகமாக படித்து இருக்கிறேன். என், 27 வயதில், 'லுாயி பிஷர்' என்னும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய, 'லைப் ஆப் காந்தி' என்னும் நுாலைப் படிக்க நேர்ந்தது. அதுவரை அப்படிப்பட்ட ஒரு நுாலை, நான் படித்ததே இல்லை. அந்த நுாலில், 'மேக்கிங் ஆப் மஹாத்மா' என்ற ஒரு பகுதியில், 'காந்தி, தமது, 40வது வயதில், தன் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது என்ற முடிவெடுக்கிறார். அதை தொடர்ந்து காப்பாற்றுகிறார். அந்த முடிவில் இருந்து தான், ஒரு மஹாத்மா உருவாகிறார்' என, எழுதியுள்ளார், நுாலின் ஆசிரியர்.
இந்த வாசகம் என்னை மிகவும் பாதித்தது. சொல்லுக்கும் செயலுக்கும், வித்தியாசம் இல்லாமல் வாழ்வது எளிதானது தான். ஆனால், மஹாத்மா காந்திக்கு பின், வேறு யாராலும் அவ்வாறு வாழ இயலவில்லை.
உங்களை கவர்ந்த எழுத்தாளர்கள்?
காந்தியைப் பற்றி, பலர் எழுதிய புத்தகங்களை படித்தேன். 'சிவில் டிஸ் ஒபீடியன்ட், கடையனுக்கும் கடைத்தேற்றம்' போன்ற நுால்களை தொடர்ந்து படித்தேன். 'போரா, டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின், தஸ்தாயெவ்ஸ்கி' போன்றோரின் எழுத்துக்கள், என்னை பெரிதும் பாதித்தன.
இமானுவல் கான்ட் போன்றோர் எழுதிய, மெய்யுணர்வு கட்டுரைகள், என்னை மிகவும் கவர்ந்தது. மார்க்சிம் கார்க்கி, லெனின், மாவோ போன்ற பல்வேறு தளங்களில், என் வாசிப்பு விரிவடைந்தது. தமிழைப் பொறுத்தவரை, சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் விரும்பி படிப்பேன். கண்ணதாசன் தொடங்கி எல்லோரையும் படிப்பேன்.தேவநேயப் பாவணர், மறைமலை அடிகளார், மனோன்மணியம் சுந்தரனார், வ.சுப. மாணிக்கம் போன்றோரின் எழுத்துக்களை படித்து தான், தனித் தமிழில், பேசவும் எழுதவும் வேண்டும் என்று, முடிவெடுத்தேன். அதை, இதுநாள் வரை காப்பாற்றுகிறேன்.
வாசகராக இருந்த நீங்கள், அரசியல்வாதியானது எப்படி?
காந்தி குறித்த நுால்கள் தான், மஹாத்மா காந்தி மீது ஏற்பட்ட ஈர்ப்பு தான், அரசியலுக்கு என்னை அழைத்து வந்தது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலம் அது. பிரதமர் இந்திரா காந்தியின் அடக்குமுறைகளை எதிர்த்து, காமராஜர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.அவரின் பழைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். அந்த காலகட்டத்தில், நானும் சில முடிவுகளை எடுத்தேன்.
வாழ்க்கை முழுதும் கதர் ஆடை அணிவது, நான்கு முழ வேட்டி, அரைக்கை சட்டை தான் அணிவது, தங்கம் அணிவதில்லை. புலால் உண்பதில்லை என்ற முடிவுகளை, அப்போது தான் எடுத்தேன். என் திருமணத்திற்கு பிறகு, மனைவி யும், பட்டு சேலை அணிவது இல்லை என, முடிவு எடுத்தார். மேலும், சிக்கல்களுக்கு போராட்டம் வாயிலாக தீர்வு காணும் முறையை, நான் பிடிவாதமாக கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.
வாசிப்பில் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம்?
நான் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த, அண்ணாதுரை தவிர, ராஜாஜி, காமராஜர், பக்த வத்சலம், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய முதல்வர்களுடன் பழகியிருக்கிறேன். சரண்சிங், மொரார்ஜி தேசாய், சந்திரசேகர் ஆகிய, பிரதமர்களின் உரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். இதற்கெல்லாம், என் வாசிப்பு தான் காரணமாக அமைந்தது.நேரடி தமிழ் நுால்களைத் தவிர, இந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நுால்களை அதிகம் படிப்பேன். வேற்று மொழி இலக்கியங்களையும் அதிகமாக படிப்பேன்.
வைக்கம் பஷீர் முகமது எழுத்துகள், என்னை மிகவும் கவர்ந்தவை. எழுத்தாளர் ஜெயமோகனின், 'காந்தி வாழ்க்கை' என்ற நுால், என்னை மிகவும் பாதித்தது. ஆறு தரிசனங்கள் என்னும் தத்துவ நுால், மிகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயங்களை கொண்டிருந்தது.என் வாழ்க்கை மாற்றத்திற்கு புத்தகங்கள் மட்டுமே, பெருந்துணையாக இருந்தன. அதை நிச்சயம், நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE