சென்னை: கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைக்கும், காலியாக உள்ள கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் ஏப்., 6 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அதில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.,விற்கு 20 சட்டசபை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நேற்று (மார்ச்05) கையெழுத்தானது..

இந்நிலையில், கன்னியாகுமரியில், பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கட்சியின் தலைமை மற்றும் தமிழக தலைமை அளப்பறிய நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது. கடந்த தேர்தலில், பொது மக்கள் ஏமாற்றப்பட்டதை நன்கு அறிந்து, இந்த முறை நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன். எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதும் நான் முன்னெடுத்த பணிகளை செய்து முடிப்பேன். பொது மக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் கொண்டு வரப்போவதில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வசதிகளை ஏற்படுத்தி தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார். வசந்தகுமார் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதி காலியாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE