திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழாவின் செப்பாட் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான தேவாலயத்தை காப்பாற்றிய பா.ஜ., தலைவர் பாலசங்கருக்கு ஓட்டுப்போட வேண்டும் என, அந்த தேவாலயம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செப்பாட் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜார்ஜ் ஆர்த்தோடோக்ஸ் தேவாலயம் உள்ளது. இது கி.பி.,1050ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது ஆகம். இந்த தேவாலயம் அமைந்துள்ள சாலையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதனையடுத்து சாலையோரம் உள்ள தேவாலயத்தை இடிக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தேவாலயத்தை இடிக்கும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் தேவாலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.ஆனால், அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
இதனையறிந்த கேரள மாநில பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.பாலசங்கர்,, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பிரச்னை குறித்து எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் தேவாலயத்தை பார்வையிட்டு, இது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. தேசிய நினைவு சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து தேவாலயத்தை இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. இதனால், சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான தேவாலயம் காப்பாற்றப்பட்டது.
இது தொடர்பாக தேவாலயத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜான்ஸ் ஆப்ரஹாம் கோனட் கூறியதாவது: பாலசங்கருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காக பிரிவினைவாத அரசியலை தள்ளிவைக்க வேண்டும் என தேவாலயம் விரும்புகிறது. பாலசங்கர் வெற்றி பெறாவிட்டால், அது பெருமை சேர்ப்பதாக இருக்காது. தேவாலய விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, பிரச்னையை தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட்டார். இதனால், தேவாலயம் இடிக்கப்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேவாலயத்தை காப்பதில், பாலசங்கர் சிறந்த தலைமை பண்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி கொண்ட நிலையில், பாலசங்கர் தான், தேவாலயத்தின் உறுப்பினர் போன்று செயல்பட்டார். அவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர் வரும் சட்டசபை தேர்தலில் செங்கனூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிகிறோம். அவர் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். அப்படி ஓட்டு போடாமல் போனால், நாம் நன்றி மறந்தவர்களாகி விடுவோம். எனவே கிறிஸ்தவர்கள் அனைவரும் பாலசங்கருக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE