காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவரும், மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத், கட்சி தலைமை மீது கடுமையான அதிருப்தியில் உள்ளார். மே, 2ம் தேதிக்கு பின், காங்கிரசில் இருந்து வெளியேறி, அவர் புதிய கட்சியை துவக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில், 1973 முதல் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தவர், குலாம்நபி ஆசாத், 71. முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். கட்சி தலைமைக்கு விசுவாசம் மிக்கவராக கருதப்பட்டவர். லோக்சபா எம்.பி.,யாகவும், ஜம்மு - காஷ்மீர் முதல்வராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர். அதன் பின், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்து வந்த இவரது பதவி காலம், சமீபத்தில் முடிவடைந்தது.
வரலாற்றில் புதிதல்ல
ராஜ்யசபாவில், ஆசாத்தின் கடைசி அலுவல் தினத்தன்று, அவரைப் பற்றி மிகவும் உயர்வாகவும், உருக்கமாகவும், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.'குலாம்நபி ஆசாத் போன்ற தலைவர்களுக்காக, எங்கள் கதவுகள் என்றும் திறந்திருக்கும். அவரை அரசியலில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்க மாட்டேன். அவரது ஆலோசனையை பயன்படுத்துவேன்' என, உரிமையுடன், பிரதமர் பேசினார். பதிலுக்கு, பிரதமர் மோடிக்கு, குலாம்நபி ஆசாத் புகழாரம் சூட்டினார்.
இந்த பேச்சு, காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலடைய செய்தது. மூத்த தலைவர் ஆசாத்துக்கு எதிரான குரல்கள், காங்கிரஸ் கட்சிக்குள் பகிரங்கமாகவே எழத் துவங்கியது. அவரது உருவ பொம்மையை எரிக்கும் அளவுக்கு எதிர்ப்பு உருவாகியது.
இந்நிலையில், குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக் கட்சி துவங்குவார் என்ற பேச்சு எழத்துவங்கியுள்ளது. காங்., மூத்த தலைவர்கள், அதிருப்தி காரணமாக விலகி தனிக்கட்சி காண்பது, வரலாற்றில் புதிதல்ல.
ஐரோப்பிய நாடான, இத்தாலியில் பிறந்து வளர்ந்த சோனியா, பாரம்பரியமிக்க காங்., கட்சிக்கு தலைமை ஏற்பதை விரும்பாத, மூத்த தலைவர்கள் சரத் பவார், சங்மா, 1999ல், தேசியவாத காங்.,கை துவங்கினர். அதே ஆண்டில், மேற்கு வங்கத்தை சேர்ந்த மம்தா பானர்ஜி, காங்.,கில் இருந்து விலகி, திரிணமுல் காங்.,கை துவக்கினார்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்துக்கு பின், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டதை அடுத்து, கட்சி தலைமை மீதான அதிருப்தியில், ஓய்.எஸ்.ஆர்., காங்., என்ற கட்சி, 2011ல்உதயமானது.
இழக்க தயாராக இல்லை
தமிழகத்தைச் சேர்ந்த மூப்பனார், கட்சி மேலிடத்தின் மீதான அதிருப்தி காரணமாக, தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். இப்படி, தலைமை மீதான அதிருப்தி காரணமாக, தனியாக பிரிந்து தனிக்கட்சி துவக்கிய பல மூத்த தலைவர்கள், காங்.,குக்கு புதிதல்ல.இதே வழியில், குலாம் நபி ஆசாத்தும், தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், மே, 2ம் தேதி வெளியாகிறது. இதற்கு பின், புதிய கட்சி துவங்குவதற்கான வேலைகளில், குலாம்நபி ஆசாத் தீவிரமாக ஈடுபடுவார் என தெரிகிறது. இவர் மட்டுமல்லாமல், கபில் சிபல், ஆனந்த் சர்மா, விவேக் தன்கா, அகிலேஷ் பிரசாத் சிங், மணிஷ் திவாரி, பூபிந்தர் ஹூடா என, தலைமைக்கு எதிராக வெடித்து வெளியேற காத்திருக்கும் தலைவர்களின் பட்டியல் மிக நீளமாக உள்ளது. தலைமை மீதான ஆசாத்தின் அதிருப்தியை நன்கு உணர்ந்ததால், ஐந்து மாநில தேர்தல் பணிகளில் அவருக்கு பணிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
கடந்த காலங்களில், தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்படும் ஆசாத், இம்முறை ஓரங்கட்டப்பட்டுள்ளார். அந்த பொறுப்பு, ரன்தீப் சுர்ஜேவாலாவிடம் வழங்கப்பட்டுள்ளது.பழுத்த அனுபவம் உள்ள தலைவரை, அவ்வளவு எளிதில் வெளியேற காங்., அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அரசியல் நெருக்கடிகளை திறம்பட சமாளிக்க கூடிய ஆசாத் போன்ற தலைவர்களை இழக்க, காங்., மேலிடம் தயாராக இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
எனவே, கேரளா அல்லது மஹாராஷ்டிராவில் இருந்து, காங்., சார்பில், குலாம்நபி ஆசாத்துக்கு மீண்டும் ராஜ்யசபா பதவி வழங்கப்படவும் வாய்ப்பிருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
உறுதி
குலாம்நபி ஆசாத் தனிக்கட்சி துவக்கினால், ஜம்மு - காஷ்மீர் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார். மெஹபூபா முப்தியுடன் கூட்டணி சேர முடியாத நிலையில் உள்ள பா.ஜ., ஜம்மு - காஷ்மீரில், குலாம்நபி ஆசாத் வாயிலாக, தங்கள் அரசியல் காய்களை நகர்த்த துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
பூபிந்தர் ஹூடாவுடன் இணைந்து, ஹரியானா அரசியலிலும், ஆசாத் மாற்றங்களை உருவாக்க வாய்ப்புள்ளது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், தமிழகம், கேரளா மற்றும் அசாமில், கணிசமான இடங்களை காங்., கைப்பற்றினால், காங்.,கின் கடிவாளம், ராகுல் கைக்கு செல்லும். ஒருவேளை எதிர்மறை முடிவுகள் வந்தால், தலைமைக்கு எதிராக கொந்தளிப்பில் இருக்கும் மூத்த தலைவர்கள், காங்., தலைமைக்கு எதிரான போர் முரசை ஒலிக்க துவங்குவது உறுதி.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE