சீனா - பாக்., உறவு இந்தியாவை பாதிக்கும்?

Updated : மார் 08, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
லடாக் எல்லையில், இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே, 10 மாதங்கள் தொடர்ந்த பதற்ற நிலை, உயர்மட்ட ராணுவ அதிகாரிகளிடையே, 11 சுற்று பேச்சுக்கு பின், ஓரளவு தற்போது குறைந்து வருகிறது. இந்த முடிவை, அமைதியை விரும்பும் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், தற்போதைய அமைதி தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் மீது மோடி அரசு வைத்திருந்த நம்பிக்கையை,
உரத்தசிந்தனை, உரத்த சிந்தனை சீனா,பாக், உறவு, இந்தியா, பாகிஸ்தான்

லடாக் எல்லையில், இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே, 10 மாதங்கள் தொடர்ந்த பதற்ற நிலை, உயர்மட்ட ராணுவ அதிகாரிகளிடையே, 11 சுற்று பேச்சுக்கு பின், ஓரளவு தற்போது குறைந்து வருகிறது.

இந்த முடிவை, அமைதியை விரும்பும் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், தற்போதைய அமைதி தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் மீது மோடி அரசு வைத்திருந்த நம்பிக்கையை, சென்ற ஆண்டு லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதல்கள் சிதைத்து விட்டன. சென்ற ஆண்டு, அதிபர் ஷீ, இந்தியாவின் நல்லுறவை மெத்தனமாக மதித்து, ஒப்பந்தங்களுக்கு மாறாக, சீனப் படைகளை எல்லையில் குவித்து, இந்தியாவை பயமுறுத்தி பார்த்தார்.

ஆனால், இந்தியா அதை முறியடிக்க எடுத்த, பலமுனை முயற்சிகளால், சீனா, எல்லையில் இரு தரப்பு படைக்குறைப்புக்கு ஒப்புக் கொண்டது. இதை இந்தியாவின் வெற்றி என்று கொண்டாடுவது தவறு. ஆனால், இந்த எல்லை சம்பவம், இந்தியாவால், சீனாவுக்கு உண்டான மானப் பிரச்னை என்பதை எளிதில் மறக்காது. ஆகவே, அடுத்த முறை, சீனா எவ்வாறு நம் நாட்டின் பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற கேள்விக்கு விடை காண்பது கடினம்.

ஏனெனில், கடந்த ஓராண்டில், உலக அளவில் பாதுகாப்பு சூழ்நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இமயத் தட்டில், இந்தியப் படைகளுக்கு வலிமை சேர்க்க, அரசு பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது முக்கியமாகும். அவற்றில், எல்லைப் பகுதியில், இது வரை கிடப்பில் போடப்பட்டிருந்த, சாலை விரிவாக்க திட்டங்களை முடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அது போலவே, இந்திய விமானப் படைக்கு, 'ரபேல், தேஜஸ்' ஆகிய போர் விமானங்கள் மற்றும் எதிரி விமானங்களை தாக்கும், 'அஸ்த்ரா' ஏவுகணைகள் ஆகியவற்றை அளித்து போர்த்திறனை அதிகரித்துள்ளது.

அது போலவே, முன்னணியில் உள்ள படைகளுக்கு, புதிய, பலம் வாய்ந்த பீரங்கிகள், போர் முனையை கண்காணித்து உடனுக்குடன் தாக்குதல் நடத்தக்கூடிய, அமெரிக்க ட்ரோன் தானியங்கிகள் ஆகியவற்றை அளித்துள்ளது.

இவை எல்லாவற்றையும் விட, இந்தியா - பசிபிக் கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தை எதிர் கொள்ள, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூடி அமைத்துள்ள, 'குவாட்' கட்டமைப்பின் செயலாக்கம், அந்த நாடுகளுக்கு இடையே போர் முனை ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.


ஆகவே, அடுத்த முறை, இந்திய - சீன மோதல், எல்லையில் தோன்ற வேண்டிய அவசியம் இல்லை. அதை வேறு எந்த ரூபத்தில் சீனா எதிர்கொள்ளும் என்று அனுமானிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தகைய முயற்சி வெற்றி அடைய, சென்ற ஆண்டு, சீனா - பாக்., உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை, சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம். அதற்கு, இரு நாடுகளும் ஒருங்கிணைந்த தமது செயல்பாடுகளை பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் பன்னாட்டு வணிகம் ஆகிய துறைகளில் பயன்படுத்தி, இந்தியாவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் கொடுக்கலாம்.

இரண்டு நாடுகளும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உண்டாக்க, இந்தியாவுக்கு தங்கள் அமைதிக்கரத்தை நீட்டுவதை ஒரு யுக்தியாக கொண்டுள்ளன. அவ்வாறு தான், இரு நாடுகளும் இந்தியாவுடன் பல்வேறு கால கட்டங்களில் இரட்டை வேடம் போட்டதாக சரித்திரம் கூறுகிறது.


உதாரணமாக, அதிகம் பாராட்டப்பட்ட, மோடி - ஷீ மாமல்லபுரம் சந்திப்பு நிகழும் போதே, லடாக் எல்லையில், சீனப் படைகளை ஊடுருவச் செய்து, ஷீ இந்தியாவின் தயார் நிலையை ஆழம் பார்த்தது நமது நினைவில் நீங்காது. ஆகவே, வரும் செப்டம்பர் மாதம், ஷீ இந்தியா வருகிறார் என்ற செய்தியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அது போலவே, பாக்., முன்னாள் அதிபர் ஜெனரல் முஷாரப், இந்திய பிரதமர் வாஜ்பாயுடன் நல்லிணக்கம் காட்டி, அமைதி பேச்சு நடத்தி அது முறிந்தது.


ஐந்தாண்டு அமைதிக்கு பின், 2008ல், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவுத் துறையை உபயோகித்து, ஜிஹாதி பயங்கரவாதிகளை மும்பையில் ஊடுருவச் செய்து, தாக்குதல் நடத்தி பேரிழப்பு ஏற்படுத்தியதை எளிதில் மறக்க முடியாது. இன்றும், அந்தத் தாக்குதலை திட்டமிட்ட தீவிரவாத தலைவர்கள், சுதந்திரமாக பாகிஸ்தானில் உலவி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை.

இத்தகைய சூழ்நிலையில், கடந்த பிப்ரவரி, 3ல், பாக்., ராணுவத்தின் தலைவரான ஜெனரல் கமார் பாஜ்வா, ஒரு ராணுவ பயிற்சி மையத்தில் பேசுகையில், 'பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு. அதற்காக பிராந்திய மற்றும் உலக அளவில் பல தியாகங்களை புரிந்துள்ளது' என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பாஜ்வா, நெடுங்காலமாக உள்ள, ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை குறிப்பிட்டு, காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, பிரச்னையை தீர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜெனரல் பாஜ்வாவின் பேச்சு, இருநாடுகளிலும் அமைதி வேண்டி காத்திருக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இரண்டு நாட்கள் கழித்து, பாக்., பிரதமர் இம்ரான் கான் பேசும் போது, இந்தியாவை குறிப்பிட்டு, 'வாருங்கள், எங்களுடன் காஷ்மீர் பிரச்னையை தீருங்கள். அதற்கு, முதலாவதாக, நீங்கள் மீண்டும் சட்டத் திருத்தம் - 370ஐ நடைமுறைப்படுத்துங்கள்.'அதன் பின், எங்களுடன் பேச்சு நடத்துங்கள். பிறகு, ஐ.நா., கட்டமைப்பின் தீர்மானத்தின் படி, காஷ்மீர் மக்களுக்கு அவர்கள் உரிமையை அளியுங்கள்' என்று கூறினார்.

இதை, வரவேற்ற பல இந்திய ஊடக ஆய்வாளர்கள், பாக்., பிரதமர் அமைதிப் பேச்சுக்கு தயாராகிறார் என்று கணித்தனர். அதற்கு ஏற்றவாறு, மேலும் இரண்டு நாட்களுக்கு பின், பாக்., பிரதமர் தன் இலங்கை பயணத்தின் போது, பாகிஸ்தான் இந்தியாவுடன் சுமுக உறவையே நாடுவதாகவும், அதற்கு காஷ்மீர் பிரச்னை ஒன்றே தடையாக நிற்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ஊடகச் செய்திகள், பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து மீண்டும் பஞ்சு இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டன. இந்தியாவுடனான வியாபார உறவை, பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக, இந்தியாவின் பாலகோட் விமான தாக்குதலுக்குப் பின் நிறுத்தி இருந்தது. இது சுமுக சூழ்நிலையை ஏற்படுத்த, பாகிஸ்தான் காட்டும் இன்னொரு சமிக்ஞையா?

இந்திய பாதுகாப்பு அமைச்சகம், பிப்ரவரி, 25ல் அளித்த அறிக்கையில், இந்தியா- பாகிஸ்தான் ராணுவங்களின் போர் முறை பொது இயக்குனர்கள், 'ஹாட்லைன்' என்ற நேரடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காஷ்மீர் எல்லையைப் பற்றிய தங்கள் கருத்துக்களை, பரிமாறிக் கொண்டதாக கூறியது. அதன் பின், இரு தரப்பும், மற்றவர் கருத்துக்களை புரிந்து கொண்டு, எல்லையில் அமைதிக்கான சூழ்நிலையை மீண்டும் தொடர முடிவெடுத்தனர்.அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களை, கண்டிப்பாக எல்லைக் கோட்டில் நடைமுறையாக கடைப்பிடிக்க முடிவு செய்ததாக, அந்த அறிக்கை கூறுகிறது. அதை. தொடர்ந்து, எல்லையில் பிரச்னைகள் ஏற்பட்டால், அவற்றை நேரடி தொலைபேசி மூலமும் அல்லது எல்லையில் உள்ள ராணுவ தளபதிகள், கொடி சந்திப்பின் மூலமாகவும் தீர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.


ஆனால், இத்தகைய உயர்மட்ட ராணுவ நேரடி தொலைபேசி தொடர்புகள், 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்தன. அவற்றில் இரு நாட்டு ராணுவ தலைவர்களும் அமைதி காக்க ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அவை குறுகிய கால கட்டத்தில் நீர்த்துப் போயின. அதற்கு முக்கிய காரணம், பயங்கரவாதிகளை வைத்து, இந்திய ராணுவ வீரர்களை அணு அணுவாக அழிப்பதை, பாகிஸ்தான் தன் அடிப்படை போர் யுக்தியாக உபயோகிப்பதே ஆகும்.

பாக்., ராணுவம் அந்த நாட்டு வெளியுறவு, முக்கியமாக இந்திய உறவை, தன் செயல்பாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துஉள்ளது. ஆகவே, அதன் ஒப்புதல் இல்லாமல், பாக்., அரசு, பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக உபயோகிப்பதை நிறுத்த முடியாது. இந்தச் செய்திகள், இந்தியா - பாகிஸ்தான் உறவில் அமைதி பேச்சு துவக்கத்தை காட்டுகின்றனவா; பாகிஸ்தான் தலைமை ஏன் அமைதியை பற்றி தற்போது பேசுகிறது; அதை எவ்வளவு துாரம் நம்பலாம்; இப்படி நம் முன் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றை புரிந்து கொள்ள, இரு நாடுகளின் உறவின் சரித்திர பின்னணியை புரிந்து கொள்வது மிக அவசியம்.

தற்போது, அதில் சீனாவின் தலையீடு பாகிஸ்தானின் அரசியல், பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில், 2013ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சி.பி.இ.சி., எனப்படும், சீனா, -பாகிஸ்தான் பொருளாதார பெருவழித் திட்டம், சீனா உலக அளவில் கையெடுத்துள்ள, 'பெல்ட் அண்டு ரோடு' இணைப்பு திட்டத்தின் மிகப் பெரிய அங்கமாகும். அதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாக்., எல்லையில் ஓரளவு அமைதி நிலவினால் தான், சீனா அதில் முன்னேற்றம் காண முடியும்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நுாறாம் ஆண்டு விழா கொண்டாடப்படும். அந்த வேளையில், பி.ஆர்.ஐ., திட்டத்தின் மணிமகுடமான, சி.பி.இ.சி., திட்டத்தின் வெற்றியை காண வேண்டிய நெருக்கடி, அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு ஒரு சவாலாக உள்ளது. அந்த சவாலை சந்திக்க, பாகிஸ்தானில் சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. சி.பி.இ.சி., கட்டமைப்பின் தலைமையை, பாக்., ராணுவத்தின் கையில் மாற்றியதற்கு சீனாவின் அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகிறது. ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், இந்தியா - பாக்., எல்லையில் முழு அமைதியை, பேச்சு மூலம் ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்ப்பது, பகல் கனவாக முடியலாம். இதுவரை, இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றன.அந்த நிலைப்பாடு தொடரும் என்று எதிர்பார்க்கலாம்!

கர்னல் ஆர்.ஹரிஹரன்
(கட்டுரையாளர், ராணுவ நுண்ணறிவுத் துறையில் தெற்காசிய மற்றும் பயங்கர வாதம் ஆகிய பிரிவுகளில் போர் முனை அனுபவம் பெற்றவர்)

தொடர்புக்கு:
இ - மெயில்: haridirect@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
07-மார்-202119:18:37 IST Report Abuse
Ramaraj P சீனாவின் ராணுவ பலம் மிகை படுத்தப்பட்ட ஒன்று. இந்தியாவிடம் இனிமேலும் வாலாட்டினால் ஒட்ட நறுக்க படும். இதையும் சீனா நன்றாக புரிந்து கொண்டுள்ளது இன்றைய இந்தியாவின் ராணுவ பலத்தை??
Rate this:
Cancel
07-மார்-202109:15:07 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Government should take strict action against those publish articles supporting Pak and asking to.re store 370.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-மார்-202108:05:01 IST Report Abuse
Darmavan பாகிஸ்தான் சீனா இரண்டையும் நம்ப முடியாது.காஷ்மீர் முடிந்து போன விஷயம் உள் நாட்டு பிரச்சனை .இம்ரான்கான் பேச்சை நம் ஊடகங்கள் வரவேற்பது தேச துரோகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X