லோக்சபா தேர்தலில், 9 இடங்களில் போட்டியிட்டு, 8 வென்று சாதித்தது; கிடப்பில் இருந்த மாநில நிர்வாகிகள் பட்டியலை, 'ரிலீஸ்' செய்ய வைத்தது என, தமிழக காங்கிரஸ் தலைவராக, கே.எஸ். அழகிரி செய்த காரியங்கள் பேசப்படுகின்றன. காங்கிரஸ் கவுரவத்தை காப்பாற்ற, தி.மு.க.,வோடு போராடி வரும் சூழலில், அழகிரி அளித்த சிறப்பு பேட்டி:
தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சில் இத்தனை இழுபறி ஏன்?
எங்கள் கருத்தை, தி.மு.க., குழுவிடம் சொல்லி இருக்கிறோம். அவர்கள் அதை பரிசீலனை செய்கிறார்கள். இதில் இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை.
கூட்டணி பேச்சுக்கு, முதலில் உம்மன் சாண்டி வந்தார். அடுத்த சுற்றில் அவர் ஏன் பங்கேற்கவில்லை?
முதல் சுற்று பேச்சில், அவர் மரியாதை நிமித்தமாக பங்கேற்றார். பிறகு எங்களையே தொடர்ந்து பேசும்படி, தலைமை அறிவுறுத்தியது. நானும் கே,ஆர்.ராமசாமியும் பேசினோம்.
'காங்கிரசுக்கு கொடுக்கும் தொகுதிகளில், முழுமையாக பாடுபட்டு, அது ஜெயிப்பதில்லை. அதனால் தான், குறைத்துக் கொடுக்க வேண்டியதாகிறது' என, தி.மு.க.,வினர் சொல்கின்றனரே?
இதுவும் ஆதாரம் இல்லாத தகவல். லோக்சபா தேர்தலில், 9 தொகுதிகளில் போட்டியிட்டு, 8ல் வெற்றி பெற்று, சாதனை படைத்தோமே.
தொகுதி ஒதுக்கீடு திருப்தியாக இல்லை என்றால், களத்தில் கட்சியினர் ஒற்றுமையாக பணி செய்ய மாட்டார்கள் என்பது எதார்த்தம். உங்கள் நிலைமை எப்படி?
எந்த உறவிலும் சிறு உரசல்கள் வரத்தான் செய்யும். அவை தானாக சரியாகி விடும். வெற்றி பெறுவது பொது லட்சியமாக இருப்பதால் கூட்டணியின் அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் ஒற்றுமையாகத்தான் வேலை செய்வார்கள். 2014 லோக்சபா தேர்தலை தவிர, அனைத்து தேர்தல்களிலும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக களம் கண்ட வரலாறு, காங்கிரஸ், தி.மு.க.,வுக்கு உண்டு.
மேலும், 15 ஆண்டுகளாக, எங்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்படவும் இல்லை. கூட்டணி பேச்சும் சுமுகமாக நடக்கிறது. தேர்தல் பணி பாதிக்கிற வகையில், எந்த நிகழ்வும் நடக்கவில்லை.
'தி.மு.க.,கூட்டணி வேண்டாம்' என்று, ஒரு கோஷ்டி செயல்படுகிறதாமே?
அது, கட்டுக்கதை. இப்போது, எங்கள் கட்சியில், கோஷ்டி சிந்தனைகள் யாரிடமும் இல்லை. இருப்பதாக சித்தரித்து சிலர் குழப்ப பார்க்கலாம். அந்த விருப்பம் நிச்சயம் நிறைவேறாது.
கட்சியின் தேசிய தலைவர் ராகுலை பிரசாரம் என்ற பெயரில், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கு அழைத்துச் சென்றது சரிதானா?

'தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று, மக்களை சந்திக்க விரும்புகிறேன்' என, சொன்னதே அவர் தான். நம் மக்கள், அவர் மீது அன்பை பொழிகின்றனர். அவரும் பதிலுக்கு தமிழக மக்களை நேசிக்கிறார், உரையாடுகிறார்; கருத்து கேட்கிறார், கேள்விக்கு பதில் சொல்கிறார்.இதன் வாயிலாக, தமிழகத்தில், தேசிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது. ராஜிவ், பிரதமராக இருந்தபோது, 13 முறை, தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மூலை முடுக்கெல்லாம் சென்று, மக்களை சந்தித்ததை எவரும் மறக்க முடியாது
.தமிழக அரசையும், மத்திய அரசையும் ராகுல் விமர்சித்துப் பேசினார். ஆனால், தி.மு.க., பற்றியோ, அது ஆட்சிக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்தோ, பேசவில்லையே?
மத்திய பா.ஜ., அரசையும், மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க., அரசையும், கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். அதன் பொருளே அந்த கட்சிகளின் ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதுதான். தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும் என்ற விருப்பத்தை இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
'பீஹாரில் கூட்டணிக்கு முயன்றோம். காங்., கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் தனித்து போட்டியிட்டோம்' என, மஜ்லிஸ் கட்சியின் ஒவைசி சொல்கிறாரே?
அவர் பா.ஜ.,வின், 'பி டீம்.' மதச் சார்பற்ற ஓட்டுகள் சிதற வேண்டும் என்பதற்காக போட்டி யிடுகிறவர். எனவே, அவரை ஏற்கவில்லை.
ஹிந்துத்துவா கொள்கையை பிரதானப்படுத்தி, தமிழகத்தில் பா.ஜ.,வை, உயிரோட்டமான கட்சியாக, அக்கட்சியினர் மாற்றி விட்டனர். ஆனால், காங்கிரசில் அப்படிப்பட்ட செயல்பாடுகள் எதுவுமே இல்லையே?
இது, சில ஊடகங்களின் கருத்து. இங்கே இல்லாத பா.ஜ.,வை பெரிய பிம்பமாக காட்ட, அவர்கள் முயற்சி செய்கின்றனர். சாம, பேத, தான, தண்ட வழிகளை பயன்படுத்தி, அ.தி.மு.க.,வை வேண்டுமானால் பா.ஜ., அடிமைப்படுத்தலாம். தமிழக மக்களை அடிமைப்படுத்த முடியாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE