உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கல்வி, நகை, விவசாய கடன்கள் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகளை, அரசியல்வாதிகள் அள்ளி வீசுகின்றனர்.

திராவிட அரசியலை புரிந்து கொண்ட கமலும், தன் பங்கிற்கு, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடன்பட்டாவது, இத்திட்டத்தை நிறைவேற்றப் போகிறாராம். முந்தைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையால் தானே, தமிழகத்தின் கடன் சுமை, 5.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்கத் தான், கமல் திட்டம் போடுகிறார். அரசியல்வாதிகளே... கீழ்க்கண்டவாறு வாக்குறுதி அளியுங்கள். உங்களை ஆதரிக்க, நாங்கள் தயாராக உள்ளோம்..
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு, 10 சதவீதம் என்ற அடிப்படையில், ஐந்தாண்டுகளில், தமிழக அரசின் கடனில், 50 சதவீதத்தை அடைத்து விடுவோம்.
ஆண்டுக்கு, 20 சதவீத கடைகள் என்ற அடிப்படையில், ஐந்தாண்டுகளில் மதுக்கடை அனைத்தையும் மூடிவிடுவோம்.
தனியாருக்கு நிகராக அரசு பள்ளியின் தரத்தை உயர்த்துவோம். மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு ஊழியரின் குழந்தை, கண்டிப்பாக அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என, உத்தரவிடுவோம்.

அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, நாங்கள் அனைவரும் அங்கு தான் சிகிச்சை பெறுவோம்.
மேலை நாடுகளுக்கு நிகராக தரமான போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்குவோம்.
மாநில அரசு விதிக்கும் வரியை குறைத்து, பெட்ரோல், டீசலின் விலையை கட்டுக்குள் வைப்போம்.
இது போன்ற வாக்குறுதிகளை அளியுங்கள். அதை விடுத்து, கண்டதையும் இலவசம் என அறிவித்து, மக்கள் தலையில் மிளகாய் அரைக்காதீர். தமிழர்களை கையேந்த விடாதீர்; தன்மானத்துடன் வாழ வழிவகை செய்யுங்கள். மேலே கூறப்பட்ட வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகளை ஆதரிக்க, மக்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE