அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா விடுத்த அறிக்கைக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று, அவரது தம்பி திவாகரன் கொடுத்த, 'பிரஷர்' என, இப்போது தெரிய வந்துள்ளது.

சசிகலா சிறைக்கு போனதில் இருந்து தினகரன் எடுத்து வரும் நடவடிக்கைகள் எதுவுமே திவாகரனுக்கு பிடிக்கவில்லை. 'வந்தது ஒரு வாய்ப்பு; அது நழுவி விட்டது. போனது போனது தான்; இனி அதை மறந்து விட்டு மற்ற வேலைகளை கவனிப்போம்' என்று பல முறை சொல்லி பார்த்தாராம்.
தினகரன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.இதனால், திவாகரனும் ஒரு கட்சியை துவங்கினார். தினகரனுக்கு எதிர்ப்பைக் காட்டும் அவரது வழி அது. இது மன்னார்குடி குடும்ப சண்டையாக மாறி, தினகரனுக்கு ஆதரவு, திவாகரனுக்கு ஆதரவு என குடும்பத்தினர் பிரிந்து நின்றனர்.கிட்டத்தட்ட,300 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில் சசிகலா, திவாகரன், தினகரன் உள்ளிட்டவர்களின் சொத்துகள் சிக்கின.
3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வரிசையாக முடக்கப்பட்டன. இதில், திவாகரனின் சொத்துகளும் உண்டு. இதனால் திவாகரன் கோபம் அதிகமானது. சொல்லச் சொல்ல கேட்காமல் தினகரன் அரசியல் செய்வதால் தான் இதெல்லாம் நடக்கிறது என்பதை, சசிகலாவுக்கு எடுத்துச் சொன்னார் திவாகரன். 'மத்திய - மாநில அரசுகளை தேவை இல்லாமல் தினகரன் பகைத்துக் கொண்டதால் நாம் ஈட்டிய சொத்து பூராவையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடுவோம்' என, எச்சரித்துள்ளார்.
'சித்தியின் ஆசியுடன்தான் செயல்படுகிறேன் என்று ஊரையும், உறவையும் தினகரன் ஏமாற்றுவதால், தினகரனை எந்த வகையிலும் ஆதரிக்க வேண்டாம்' என, அக்காவை சந்தித்த போதெல்லாம் திவாகரன் சொல்லி வந்தார்.இதற்கிடையில், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் திருமணம் மன்னார்குடியில் நடந்தது. அதில், தினகரன் பங்கு கொள்ளவில்லை. அதேபோல, தினகரனின் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு, புதுச்சேரியில் பண்ணை வீட்டில் நடந்தது. அதற்கு திவாகரனுக்கு அழைப்பு இல்லை.

இப்படி, கசப்புடன் சென்று கொண்டிருந்த, இரு குடும்ப உறவையும், சிறையில் இருந்தே சரி செய்தார் சசிகலா. திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் திவாகரனின் மனைவி வளைகாப்பு விழாவுக்கு எல்லா உறவுகளும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அதனால், வளைகாப்புக்கு மனைவி அனுராதாவுடன் வந்தார் திவாகரன்.
அடுத்த சில நாட்களில் சசிகலா வெளியே வந்தார். 'அமைதியாக சென்னை வந்து, அரசியலில் ஈடுபடமாட்டேன் என அறிக்கை விட்டால் பிரச்னைகள் அதோடு ஓய்ந்து விடும்' என, திவாகரன் யோசனை சொன்னார். ஆனால், பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்தார் தினகரன். எனினும், எதிர்பார்த்த பலன் இல்லை.இந்த நிலையில்தான், அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் பிரிந்து தி.மு.க.,வுக்கு சாதகமாகி விட கூடாது என்பதை சாக்கிட்டு சசிகலா அரசியல் ஓய்வு அறிவித்து விட்டார்.
தினகரன் எதிர்ப்பை அவர் கண்டுகொள்ளவே இல்லை.தினகரனை தவிர மொத்த குடும்பமும் சசிகலா முடிவை ஆதரிக்கிறது. அரசியல் பயணம் தொடரும் விஷயத்தில் மன்னார்குடி குடும்பத்தில் தினகரன் தனிமைப்பட்டு நிற்கிறார். 'தப்பு வழியில் சம்பாதித்து குவித்துள்ள கோடிகளில் கொஞ்சத்தை இந்த தேர்தலில் காலியாக்கிய பிறகு, அவரை சுற்றி இருப்பவர்களும் தினகரனை தனியா விட்டு போய்விடுவார்கள்' என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE