2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தான் கேரளாவில் பா.ஜ.,வின் தாமரை முதன் முதலாக மலர்ந்தது. இம்முறை இந்த ஒற்றை இலக்கத்தை இரட்டை இலக்கமாக மாற்ற வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.
இந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி முதல் பா.ஜ.,வின் தேசியத் தலைவர்கள் அனைவரும் கேரளாவில் பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளனர். சரியான தலைமை இல்லாதது தான் கேரள பா.ஜ.,வின் முக்கிய பிரச்னையாக உள்ளது.மக்களைக் கவரும் தலைவர்கள் இல்லாதது ஒரு முக்கிய குறையாக இருக்கும் அதே நேரத்தில், கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் அதிகரித்து வருவதும் தேசியத் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 வருடங்களுக்குள் 3 மாநில தலைவர்கள் வந்து விட்டனர்.தற்போது மாநில தலைவராக சுரேந்திரன் உள்ளார். இவரை தலைவராக நியமிக்கக் கூடாது என்று கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. பலத்த எதிர்ப்புக்கிடையே தான் இவர் மாநில தலைவர் பதவியை வகித்து வருகிறார்.
இந்நிலையில் 'மெட்ரோ மேன்' என அழைக்கப்படும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், தனக்கு முதல்வராக விருப்பம் இருப்பதாகவும் ஸ்ரீதரன் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலத் தலைவர் சுரேந்திரன் கூறுகையில், பா.ஜ., வெற்றி பெற்றால் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முதல்வர் ஆவார் என்று கூறினார். சுரேந்திரனின் இந்தக் கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் முரளீதரனும் ஆதரவு தெரிவித்தார்.இது தேசியத் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தற்போது தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் யார் முதல்வர் வேட்பாளர் என இதுவரை பா.ஜ., அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு முன்பு பெரும்பாலும் பா.ஜ., அறிவிப்பதும் கிடையாது.
இந்நிலையில் கேரளாவில் ஸ்ரீதரனை முதல்வராக மாநில தலைவர்கள் அறிவித்தது தேசியத் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநில தலைவர் சுரேந்திரனையும், மத்திய இணையமைச்சர் முரளீதரனையும் அழைத்து சில தலைவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உடனடியாக இருவரும் தங்களது கருத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
- நமது நிருபர் -