புதுடில்லி: நமது நாட்டிற்கும், உலகிற்கும் தேவையான தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களுக்குத் தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதற்காக மத்திய அரசால் மக்கள் மருந்தகம் என்னும் பெயரில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மருந்துக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, நம் நாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளன. இவைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கும் கிடைக்கின்றன. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை நான் போட்டுக்கொண்டேன்.

மக்கள் மருந்தகத்தில், ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும். இந்த மருந்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும். மக்கள் மருந்தகங்களுக்கான ஊக்கத்தொகை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனுடன், உற்பத்தி அதிகரிக்கப்படும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் நல்ல மருத்துவம் கிடைக்க அரசு மிகுந்த கவனம் செலுத்துவதோடு உள்கட்டமைப்பையும் மேம்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE