திருச்சி :''குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு தொலை நோக்கு திட்டங்களையும் திருச்சி பொதுக் கூட்டத்தில் நேற்று அவர் அறிவித்தார்.
திருச்சி சிறுகனுாரில் தி.மு.க. சார்பில் நேற்று 'தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.மாலை 6:45 மணிக்கு மேடைக்கு வந்த ஸ்டாலின் பொதுக் கூட்டத் திடலின் கடைசி பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை திருச்சியில் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். தமிழகத்தில் 1920ல் அமைந்த நீதிக் கட்சி ஆட்சி தான் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.
கடந்த 100 ஆண்டுகளில் கல்வி வேலை வாய்ப்பு போன்ற அத்தனை வளர்ச்சிக்கும் அதுவே அடித்தளமாக அமைந்தது. அடுத்து 1967ம் ஆண்டுக்கு பின் அண்ணாதுரை தலைமையிலும் தொடர்ந்து கருணாநிதி தலைமையிலும் அமைந்த தி.மு.க. அரசு தமிழர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளை கொடுத்தது. தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக்கியது. பெண்களை சொந்தக்காலில் நிற்க வைத்தது.மொத்தத்தில் தி.மு.க. ஆட்சியில் நவீன தமிழகம் உருவாக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் இந்த அடிப்படை கட்டமைப்பை முழுமையாக சிதைத்துள்ளனர். அடிப்படை கட்டமைப்பை சிதைப்பதும் திட்டங்களை உருக்குலைப்பதும் அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கமாகவும் பழக்கமாகவும் கொண்டுள்ளனர்.இந்த ஆட்சிக்கு ஏப்ரல்6ம் தேதி முற்றுப்புள்ளி வைத்து மே 2ம் தேதி தமிழத்தின் புதிய விடியலுக்கான தி.மு.க. ஆட்சி அமையும். இந்த ஆட்சியை எப்படி கொண்டு செல்வது என்பதற்கான தொலைநோக்கு திட்டத்தை வடிவமைத்துள்ளேன். தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பல்துறை வல்லுனர்களுடன் கலந்து பேசி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கியமான ஏழு துறைகளை சீரமைத்து வளர்த்தெடுப்பதே என் முதல் பணி. தி.மு.க. அரசின் 10 ஆண்டு இலக்கை அடைவதற்காக ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.பொருளாதாரம் வேளாண்மை நீர்வளம் கல்வி மற்றும் சுகாதாரம் நகர்ப்புற வளர்ச்சி ஊரக உட்கட்டமைப்பு சமூக நீதி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த உறுதிமொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு
தமிழகத்தில் 35 லட்சம் கோடியை கடந்து இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும். தனி நபர் வருமானம் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்படும்.ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலை வாய்ப்பின்மை விகிதத்தை சரி பாதியாக குறைத்தல். கொடும் வறுமையில் வாடும் 1 கோடி பேரை மீட்டெடுத்து வறுமைக் கோட்டுக்கு கீழ் ஒருவரும் இல்லாத முதல் மாநிலமாக தமிழகம் முன்னெடுக்கப்படும்.
மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி
தமிழகத்தில் பயிரிடும் பரப்பு 60 சதவீதமாக உள்ளது. கூடுதலாக 30 லட்சம் ஏக்கர் பயிரிடச் செய்து 75 சதவீதமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கரில் இரு போக சாகுபடி செய்யப்படுகிறது. இது 50 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.
குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்
தனி நபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பு ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரில் இருந்து 10 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும். வீணாகும் தண்ணீர் அளவு 50 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும். மறு சுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படும்.
அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து செலவிடப்படும் கல்விக்கான நிதி அளவு மூன்று மடங்கு உயர்த்தப்படும். கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் இடம் பெறச் செய்யப்படும்.பள்ளிக்கல்வியில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதம் 16 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும். டாக்டர்கள் நர்ஸ்கள் மற்றும் பிற தொழிற்கல்வி பட்டதாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான கல்வி உதவித் தொகை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
எழில் மிகு மாநகரங்களின் மாநிலம்
கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளின் அளவு 35 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும். புதிதாக 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதன் மூலம் குடிசை வாழ் மக்களின் அளவு 16.6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கப்படும்.
உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கைத் தரம்
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 57 சதவீதம் கான்கிரீட் வீடுகள் உள்ளன. 20 லட்சம் கான்கிரீட் வீடுகள் புதிதாக கட்டி 85 சதவீதமாக உயர்த்தப்படும்.எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத சாலை இணைப்புகளும் வடிகால் அமைப்புகளும் கட்டமைக்கப்படும். அனைத்து கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய வசதி ஏற்படுத்தப்படும். குறைந்தபட்சம் 50 சதவீதம் கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்.தி.மு.க. ஆட்சி ஐந்து ஆண்டு மட்டுமல்ல; தொடர்ந்தால் மட்டுமே இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும். இன்று முதல் அ.தி.மு.க.வுக்கான 'கவுன்ட் டவுன்' தொடங்கி விட்டது. இன்னும் 30 நாளில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலர் துரைமுருகன் முதன்மை செயலர் நேரு மகளிர் அணி செயலர் கனிமொழி இளைஞர் அணி செயலர் உதயநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
'அடித்து விட்டார்' அறிவிப்பை... எங்கே போவது ரூ.1.26 லட்சம் கோடிக்கு
'தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்' என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.இதை ஏற்கனவே 'இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்கப்படும்' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிவித்திருந்தார். அதை நேற்று ஸ்டாலின் வழிமொழிந்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் 2.10 கோடி ரேஷன் அரிசி கார்டுகள் உள்ளன. கார்டுக்கு 1000 ரூபாய் வழங்குவதாக இருந்தால் மாதம் 2100 கோடி ரூபாய் அரசு செலவிட வேண்டும். ஆண்டுக்கு 25 ஆயிரத்து 200 கோடி ரூபாய் தேவை. ஐந்தாண்டுகளுக்கு கணக்கிட்டால் 1.26 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இதற்கான நிதியாதாரத்தை திரட்டுவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE