நதி போல ஓடிக்கொண்டே இரு :இன்று (மார்ச் 8) மகளிர் தினம்

Added : மார் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்த பிரபஞ்சமே பெண்ணின் இருப்பால் தான் உயிர் பெறுகிறது. நாம் எல்லோரும் ஒரு பெண்ணால் உருவாக்கப்பட்டவர்கள் தாம். அப்படிப்பட்ட பெண் தான் எத்தனை பெரிய ஆற்றல் பெற்றவள் என்பதை உணர்ந்திருக்கிறாளா?ஒரு இடத்திலிருந்து பிடுங்கப்பட்ட செடியை மற்றொரு இடத்தில் வைத்து நடும் போது, அது சற்றே தடுமாறி பின் வேர்களை பலமாக மண்ணில் ஊன்றி, அதன் பின்பு வளர கொஞ்ச காலம் பிடிக்கும். ஆனால்
 நதி போல ஓடிக்கொண்டே இரு :இன்று (மார்ச் 8) மகளிர் தினம்

இந்த பிரபஞ்சமே பெண்ணின் இருப்பால் தான் உயிர் பெறுகிறது. நாம் எல்லோரும் ஒரு பெண்ணால் உருவாக்கப்பட்டவர்கள் தாம். அப்படிப்பட்ட பெண் தான் எத்தனை பெரிய
ஆற்றல் பெற்றவள் என்பதை உணர்ந்திருக்கிறாளா?
ஒரு இடத்திலிருந்து பிடுங்கப்பட்ட செடியை மற்றொரு இடத்தில் வைத்து நடும் போது, அது சற்றே தடுமாறி பின் வேர்களை பலமாக மண்ணில் ஊன்றி, அதன் பின்பு வளர கொஞ்ச காலம் பிடிக்கும். ஆனால் சின்னஞ்சிறு செடி கொடியை விட மென்மை குணம் பொருந்திய பெண்ணோ திருமணத்திற்கு பின், உள்ளுக்குள் ஒரு பூவாக மலர்ந்து வெகுஇயல்பாக தன்னையும் புதுப்பித்துக் கொண்டு தன்னை சூழ்ந்திருப்பவர்களுக்கும் மகிழ்ச்சி எனும் மணம் வீசிக் கொண்டிருக்கிறாள்.பிறந்த வீட்டில் தகப்பனின் கை விரல் பிடித்தபடி இந்த உலகத்தைப் பார்க்கலாம். ஆனால் புகுந்த வீட்டில் கணவனுடன் இணைந்து தான் இந்த சமூகத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். 'பிறந்த வீட்டில் இருந்தது அழகிய கனாக்காலமாக இருந்தது. புகுந்த வீட்டிற்கு வந்த பிறகு கண்ட கனவுகளை எல்லாம் குழி தோண்டி புதைக்கும் காலமாக ஆகிவிட்டது 'என புலம்புவோர் உண்டு.
வாய்ப்புகள்“கல்லுாரி நாட்களில் ஏகப்பட்ட கவிதைகள் எழுதி கல்லூரி அளவில் பெரும் புகழ் பெற்றேன். இப்போது நோட்டு, பேனா எடுத்தால் அது என் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எழுத வைப்பதற்குத் தான் என்றாகி விட்டது. அதற்கு மேல் நமக்கெங்கு நேரம் இருக்கிறது?” என்றுச் சொல்லி உதட்டை பிதுக்குபவர்களை அன்றாடம் காணநேர்கிறது.இப்படி கடந்து செல்பவர்கள் கடந்து செல்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

மனதில் நாம் உருவம் கொடுத்து வைத்திருக்கும் கனவுகளை நடத்தி முடிப்பவர்களாக அவர்கள் ஏன் உருமாறுவதில்லை? எண்ணற்ற பெண்கள் இன்று பணிக்குச் செல்கிறார்கள். பணியில் சேர்ந்த பின்னர் மேலதிகாரிகளின் சொல்லுக்கு செக்குமாடுகள் போல் அடி பணிந்து செய்ய வேண்டியுள்ளது. இப்படிச் சுற்றி சுற்றி தேய்ந்து ஓடுவதில் சோர்ந்து போகாமல் நம்மை நாம் பல வழிகளில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் வாழ்க்கையில் நாம் ஒரு நதி போல ஓடிக் கொண்டிராமல் ஒரு குளம் போல தேங்கிப் போய் விடுவோம்.


அரசுப் பணியிலிருக்கும் என் உறவுக்கார பெண்மணி ஒருவர் தன் நீண்ட நாள் உழைப்பின் பலனாக பதவி உயர்வுடன் கூடிய பணியிடமாற்றம் கிடைக்கப் பெற்றார். சூழ்நிலை காரணமாக அவரால் பதவி உயர்வை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தற்போது அவருக்கு கீழிருந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக பதவி உயர்வு பெற்றுப் போகப் போக தன்னுடைய இயலாமையை எண்ணி தினம் தினம் வெந்து வேகிறார். விரக்தி நிலையால், செய்து கொண்டிருக்கும் பணியிலும் ஒருவித சுணக்கம். தற்போது தன் குடும்பத்தினரை தினம் நொந்துக் கொள்கிறார். தன் வாய்ப்பை இழந்து விட்ட வலி, வேதனை அவரின் அத்தனை செயலிலும் வெளிப்படுகிறது.பெண்கள் உயர் பதவிகளுக்குச் செல்வதில் இப்படிப்பட்ட தடை, தாமதங்கள் இருக்கத் தான் செய்கிறது. இருப்பினும் சூழ்நிலை தனக்கு எப்போது சாதகமாக வரும் என காத்திருந்து தன் இரையான மீனை பிடிக்கும் கொக்கு போல் சில நேரங்களில் காத்திருக்கவும் வேண்டும். பல நேரங்களில் சூழ்நிலைகளை கொக்கி போட்டு நமக்கு சாதகமாக உருவாக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும்.வீடு, அலுவலகம் என இரட்டை குதிரை சவாரி என்பதால் உயர் பதவிகளில் பெண்கள் அமருவது மிகப் பெரிய சவால். எத்தனையோ பெண்கள் அதை திறம்பட நிர்வகித்து வருகிறார்கள்.

ஆயிரம் இடர்ப்பாடுகள் இருந்தாலும் இல்லப் பணியோ இயந்திரப் பணியோ எப்போதும் உற்சாகம் குறையாமல் வலம் வரும் பெண்கள் தான் சாதிக்கிறார்கள். செய்யும் பணியில் சதா சலித்துக் கொள்பவர்கள் ஒரு போதும் திருப்தி அடைவதேயில்லை. மகிழ்ச்சியாக இருப்பவர் தலைமையின் கீழ் செய்யும் பணிகள் சிறப்பாகவே முடியும். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து தெளியும் நிலை வேண்டும். ஒரு பெண்ணாக நாம் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் முன் மாதிரியாக இருக்கிறோம் என்பது இங்கே மிக முக்கியம்.

இப்படி கனவுகளுடன் வாழும் பெண்கள் திருமணத்திற்கு பின் அதை நிறைவேற்ற முயலுவதேயில்லை. குடும்பத்தின் ஆதரவு இல்லையென்றால் கூட பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளலாம். தனக்குத் தானே தடையாக இருக்கிறார்கள். யானை குட்டியாக இருந்த போது அதை சங்கிலியில் பிணைத்திருப்பார்பாகன். அப்போது சங்கிலியும் சரிகட்டப்பட்ட துாணும் சரி, அதை விட வலு கொண்டதாக இருக்கும். யானை நெடிது வளர்ந்து விட்ட மேல் சங்கிலியோ துாணோ அதற்கு பெரிய விஷயமே இல்லை. எதையுமே உடைத்தெறிந்து வந்து விடக் கூடிய ஆற்றல் அதனிடம் உண்டு. ஆனாலும் தன்னால் அந்த சங்கிலியை மீறி எதுவும் செய்ய இயலாது என்ற மனத் தடை தான் முதன்மையாக இருக்கும். அது போலவே பெண்கள் வாய்ப்பும் சூழலும் அமையும் போதும் தாங்களே கால்கட்டு போட்டுக்கொள்கிறார்கள்.யாரொருவர் அதிலிருந்து மீண்டு வருகிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். அதற்காக குடும்பத்தை உதறி விட்டு வர வேண்டிய அவசியமில்லை. நல்ல புரிதலும் விட்டுக் கொடுத்தலும் அனைத்தையும் சாத்தியப்படுத்தும்.பெண் விடுதலைஇல்லத்தரசிகளுக்கு வேலைக்குச் சென்று பொருள் ஈட்டவில்லையே என்று ஒரு எண்ணம் இருக்கும். பணிக்குச் செல்பவர்களோ இல்லத்தரசிகளை பார்க்கும் போது “இவர்கள் கொடுத்து வைத்தவர்கள்! யாரிடமும் எந்த ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டிய தேவையில்லை” என்று எண்ணிக் கொள்வார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை தானே! சில வலிகள் நம்மை செதுக்கும்! வலியின்றி வாழ்க்கை ஏது? நம் எண்ணங்களில் ஒளிந்திருக்கிறது வாழ்க்கை. தேவைப்படின் சிலவற்றை திருத்தியமைத்து அதை வண்ணமயமாக மாற்றியமைத்துக் கொள்வோம். வாழ்வென்பது சதாதுக்கப்பட்டுக் கொண்டோ, சலித்துக்கொண்டோ, போராடவோஅல்ல. அது முற்றிலும் வாழ்வதற்கு மட்டுமே.ஒவ்வொரு பெண்ணுக்கும் இதயத்தின் ஆழமான கீறலாய் சில மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கும். துயரங்கள், சோதனைகள், பெரும் இழப்புகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதையும் மீறி அசையாத தன்னம்பிக்கையுடனும், வைரத்தை போன்ற மன வலிமையுடனும் அவள் மீண்டு வரும் போது தான் சாதனை பெண்ணாகிறாள்.எப்போதும் ஆணை முன்னிலைப்படுத்தியே பெண் விடுதலை பேசிய காலங்கள் மலையேறி விட்டது. பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு எல்லாம் வந்த பிறகு அவர்கள் அவர்களுக்காக மட்டுமே அனைத்தையும் பழகுகிறார்கள்.


சிறந்த அணிகலன்சிறந்த கல்வி பெற்று சுயமாக உலகத்தை எதிர்கொள்ளும் பொருளாதார சுதந்திரமே உண்மையில் பெண்களுக்கு சிறந்த அணிகலன். 'பொம்பள சிரிச்சா போச்சு' எனச் சொல்லி அவள் சிரிப்புக்கு முட்டுக் கட்டை போடும் பழங்கதைகளை மண்ணுக்குள் தள்ளலாம். அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்ற பழமொழியை மண் மூடி புதைத்தது போல.மகளிர் தினத்தை கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் வாழ்த்துகளால் மட்டுமே நிறைவு கொள்ளாமல் நமக்கான வாழ்வின் பிடிமானங்களை தளராமல் இருக்கச் செய்வோம்.மேல் தட்டு பெண்கள் இந்நாளை, தோழிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நிறம், வடிவத்தில் புத்தாடைகள் உடுத்தியும், நகைக் கடை சென்று நகை வாங்கியும் உணவகங்களில் ஒன்று கூடியும் கொண்டாடி வருகிறார்கள்.

உழைக்கும் பெண்களின் மாண்பை மதிக்கும் நோக்கில் கொண்டாடத் துவங்கிய நாளின் பாதைகள் மாறி வருகிறது. இத்தகைய கொண்டாட்டங்களில் நம் மண்ணின் மரபுகள் மாறாமல் பாரத்துக் கொள்ள வேண்டும். 'பெண்ணாக வாழ்வது பெருமை' எனும் எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும். ஆண்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பகுத்தாய்வு செய்து பார்த்துக் கொள்ளாமல் ஒவ்வொரு பெண்ணும் தன்னை சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும். நமக்கான தேடல் என்ன என்பதில் தெளிவு பெற வேண்டும். அப்படி தெளிவு பெற்று விட்டால் வாழ்க்கை வண்ணமயமாகமாறிவிடும்.'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா,பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா'எனும் பாரதியின் பொன்னான வரிகளும் நிச்சயம் உயிர்பெறும்.- பவித்ரா நந்தகுமார் எழுத்தாளர், ஆரணி 94430 06882Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abirami sp -  ( Posted via: Dinamalar Android App )
13-ஏப்-202116:35:42 IST Report Abuse
Abirami sp Abirami sp
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X