டி.என்.வடிவேல்கவுண்டர் பேரன் என்ற ஒற்றை அடையாளத்தின் மூலம் அரசியலில் கால் பதிக்க வந்தவர் தர்மபுரி டாக்டர் செந்தில்குமார். 2016 தேர்தலுக்கு முன், தி.மு.க.,வில் இணைந்தார். வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர். அந்த பின்புலத்தால், இளைஞர் துணை அமைப்பாளர் பதவி பெற்றார்.
ஈரோடில் நடந்த ஸ்டாலின் மாநாட்டுக்கு, சொந்த செலவில் அதிக ஆட்களை அழைத்து சென்று, 'கெத்து' காட்டினார்.இதனால், 2016 ல் சட்டசபை தேர்தலில், 'சீட்' கிடைக்கும் என, எதிர்பார்த்து இருந்தார்; கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் வாங்கிவிட திட்டம் போட்டார். புதியவர் என்பதால் கட்சி நிர்வாகிகள் எதிர்த்தனர்.தலைமையிட செல்வாக்கால், 'சீட்' பெற்றார். அன்புமணிக்கு எதிரான ஓட்டுக்கள் செந்தில்குமார் எம்.பி.,யாக உதவியது. உள்ளூர் வன்னியர்கள் ஓட்டு இவருக்கு, லட்டு போல் கிடைத்தது குறிப்பிடதக்கது.
பிரசாரத்தின் போது, தி.மு.க., வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட முல்லைவேந்தனை சந்தித்து செந்தில் ஆதரவு கேட்டது, ஸ்டாலினுக்கு எரிச்சலை தந்தது. ஆனாலும், அன்புமணியை வீழ்த்தியதால், அதை காட்டிக் கொள்ளவில்லை. செந்தில்குமார் தன்னை, தானே, 'கேப்டனாக' பாவித்து கொள்பவர் என்பது பலரும் ரசிக்கும், 'காமெடி'.
பிரபல நடிகர்கள், பிரமுகர்களுக்கு எதிராக, 'சமூக வலைதளங்களில் ஏடாகூடமாக தகவல்களை பதிவு செய்வார். பிரபலங்களின் ஆதரவாளர்கள் இவரை கழுவி ஊற்றுவார்கள். 'வாங்கிக் கட்டுவது அரசியலில் சகஜமப்பா...' என்று சிரித்து சமாளிப்பார். 'வெற்றி நடை போடும் தமிழகம்' விளம்பரம் குறித்து, தி.மு.க., ஆதரவு நாளிதழுக்கு எதிராக இவர் சொன்ன கருத்தால், மாறன் சகோதரர்கள் இவர் மீது கடுப்பில் உள்ளனர்.

ஆனாலும், மாவட்டத்தில், தனக்கு என ஒரு கோஷ்டியை உருவாக்கியுள்ளார். ஆய்வு, நலத் திட்ட பணிகள் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு மாவட்ட மற்றும் அந்த பகுதியில் உள்ள நிர்வாகிகளை அழைத்து செல்வது இல்லை என்ற குற்றச்சாட்டு நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. பொதுமக்கள் மட்டும் இன்றி கட்சியினரும் இவரை எளிதில் சந்திக்க முடியாது.
அரூர், பாலக்கோடு தொகுதிகளில் தான் கூறும் வேட்பாளரை நிறுத்தினால் என்னால் வெற்றி பெற வைக்க முடியும் என, கூறிவருவதால், எம்.எல்.ஏ.,க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் மட்டும் இன்றி, 'சீட்' எதிர்பார்த்த, பிரமுகர்களும் இவர் மீது கொதிப்பில் உள்ளனர்.
'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப்போராரு' நிகழ்ச்சியில் டாக்டர் செந்தில்குமார், 'குத்தாட்டம்' போட்டதை கட்சியினர் ரசிக்கவில்லை. ஆனாலும், இதை பற்றி எல்லாம் கவலைப் படவில்லை. தான் காட்டுபவர்களுக்கு, தலைமை, 'சீட்' கொடுத்தால் களத்தில் இறங்கலாம், இல்லா விட்டால், கடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., நிர்வாகிகள் பணியாற்றியது போல் பட்டும் படாமலும்பணியாற்றலாம் என தீர்மானித்து விட்டார்.
மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி வறுவலை வளைச்சு அடிச்சு, அதை செரிக்க கடலைமிட்டாய், வரக்காப்பியை ருசித்தபடி வேட்பாளர் பட்டியலை சந்திக்க தயாராகி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE