சண்டிகர்: சண்டிகரில், பெண் போலீஸ் ஒருவர், கைக்குழந்தையுடன், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்ட, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

யூனியன் பிரதேசமான சண்டிகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. கான்ஸ்டபிளான இவர், போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்தது.பிரசவ விடுமுறை முடிந்து, பிரியங்கா நேற்று பணியில் மீண்டும் சேர வேண்டும். ஆனால், அவர் பணிக்கு வரவில்லை. இதையடுத்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள், பிரியங்காவை தொடர்பு கொண்டு, உடனடியாக பணிக்கு வரும்படி உத்தரவிட்டனர். 'வீட்டில் குழந்தையை பராமரிக்க யாரும் இல்லாததால், என்னால் பணிக்கு வர முடியவில்லை' என, பிரியங்கா தெரிவித்துள்ளார். 'விடுமுறை முடிந்து விட்டதால், பணிக்கு உடன் வர வேண்டும்' என, உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, குழந்தையை துாக்கி கொண்டு, பணிக்குச் சென்றார் பிரியங்கா. குழந்தையை இடுப்பில் வைத்தபடியே, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்.இதை பார்த்த சிலர், 'குழந்தையுடன் பிரியங்கா பணியில் ஈடுபட்டுள்ளதை, மொபைலில், 'வீடியோ' மற்றும் புகைப்படம் எடுத்தனர். அவற்றை, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.பிரியங்காவின் கடமை உணர்வை பாராட்டி, பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். மேலும், சிலர், குழந்தையுடன் பிரியங்கா பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE