நம் தேர்தல் களம் எத்தனையோ விசித்திரங்களை சந்தித்துள்ளது.அதில் ஒன்று தான், அறிவாலயத்தில், உதயநிதியிடம், ஸ்டாலின் நடத்திய நேர்காணல். அது எப்படி நடந்திருக்கும்; கண்களை மூடி தெளிவாக பார்த்தோம்...
துரைமுருகன்: உதயநிதி ஸ்டாலின்... உதயநிதி ஸ்டாலின்...உதயநிதி உள்ளே நுழைய, ஸ்டாலின் தவிர, அனைவரும் எழுந்து நின்று, கைகூப்பி வரவேற்கின்றனர். முக்கிய பிரமுகர்கள் கேள்வி கேட்க, ஸ்டாலின், 'மார்க்' போடுகிறார்.
துரைமுருகன்: வாங்க தம்பி... சவுக்கியமா, வீட்டுல அப்பா, அம்மா எல்லாம் சவுக்கியமா? உட்காருங்களேன்... நீங்க நின்னா என் கால் வலிக்குது... காபி, டீ எதுவும் சாப்பிடுறீங்களா...?
உதயநிதி: அதெல்லாம் குடிக்கிறது இல்ல.. 'எலக்சன்ல' நிக்க போறேன், அதனால இங்க உக்கார மாட்டேன்.(நேரு, பொன்முடி விழுந்து விழுந்து சிரித்து, 'தாத்தாவோட,' ஹியூமர் சென்ஸ்' தம்பிக்கிட்ட அப்படியே இருக்கு' எனக்கூறி, ஸ்டாலின் முகத்தில் சிரிப்பை தேட, அதை காணாமல் உஷாரான துரைமுருகன், 'அப்பாவோட,' டைமிங் சென்சும்' அப்படியே இருக்கு' என, 'எக்ஸ்ட்ரா பிட்' போட, ஸ்டாலின் முகத்தில் சிறு புன்னகைக்கீற்று.)
துரைமுருகன்: தம்பியோட பணிவுக்கு, 10 மார்க் போடுங்க தலைவரே...!
பொன்முடி: தம்பி, எத்தனை வருஷமா கட்சியில இருக்கீங்க...?
உதயநிதி: நியாயமா பார்த்தா, கருவில் இருந்த காலம் தொட்டே கட்சியில் இருந்து வருபவன் நான். சிசுவாக நான் உருவான காலத்தில்தான், 'மிசா' சட்டத்தில் அப்பாவை மாமனார் வீட்டுக்கு அனுப்பியது அரசாங்கம். அந்த கொடூரக் கதைகளை உணவோடு ஊட்டி வளர்த்தார் என் அன்னை. .
எ.வ.வேலு: அப்படி பார்த்தா, தம்பி, 43 வருஷத்துக்கு மேல கட்சியில இருக்கு... தலைவரே, 75 மார்க் போட்டுக்கங்க... சரி தம்பி, உங்க, 'சீனியாரிட்டி'க்கு எம்.எல்.ஏ., என்ன, எம்.பி., முதல்வர் பதவியே தரலாம்... (ஸ்டாலின் முறைக்க) சாரி, துணை முதல்வர் பதவியே தரலாம் தம்பி...
துரைமுருகன் (மனசுக்குள்): நம்மை விட ஓவரா போறாரே... உஷாரா இருக்கணும்.
நேரு: தம்பி, போராட்டம், கீராட்டம் எல்லாம் நடத்தியிருக்கீங்களா...?
உதயநிதி: நிறைய சார்... ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல கூட...
துரைமுருகன்: அருமையான படம்... நேத்திக்கு அந்த படத்தை, எத்தனாவது வாட்டி பாத்தேன்னு எனக்கே தெரியல ...ஹாஹ்ஹாஹ்ஹா... நடிப்புல சிவாஜியையும், நகைச்சுவையில கலைவாணரையும் துாக்கி சாப்பிட்டுட்டீங்க... உங்க ரசிகர்கள் ஓட்டுக்களே, நம்ம கட்சிக்கு, 200 தொகுதிகளை அள்ளி தருமே... இதுக்கு ஒரு, 200 மார்க் சேத்து போடுங்க தலைவரே...!
ஐ.பெரியசாமி: நம்ம கட்சியின் கொள்கைகளை பத்தி நல்லா தெரியுமா தம்பி...?
(உதயநிதி மேலே கீழே, இடமாக வலமாக தலையை சுழற்ற...

துரைமுருகன் முந்திக் கொண்டு, 'நம்ம கட்சியின் கொள்கை, பல நுாறு பக்கங்கள் இருக்கும்... 70 வருஷமா கட்சியில இருக்கிற எனக்கே அப்பப்ப மறந்துடும்... பச்ச புள்ளகிட்ட இப்படிலாம் கேட்காதீங்க... தலைவரே, இதுக்கு ஒரு, 170 மார்க் போட்டுக்கங்க...)
ஸ்டாலின்: இந்த கேள்விக்கு அவர் பதிலே சொல்லலையே...!
துரைமுருகன்: தப்பா பதில் சொல்லாம, மவுனமா இருந்தாரே... அந்த மனிதாபிமானத்துக்கு தான் இந்த மார்க்... ஹி...ஹி...!
ஸ்டாலின்: இப்பதாங்க புரியுது... எப்படி எங்கப்பா, உங்களை கூடவே வச்சிருந்தார்னு.
டி.ஆர்.பாலு: பொருளாளர் என்ற முறையில, இந்த கேள்வியை நான் கேட்டே ஆகணும்... 'சீட்' குடுத்தா எவ்வளவு பணம் செலவு பண்ணுவீங்க...?
உதயநிதி: சினிமாவுல பெருசா சம்பாதிக்க ஆரமிச்சதுமே அப்பா என்னை அரசியல்ல இழுத்து விட்டுட்டாரு... தாத்தாவும் அப்பாவும் தந்த, 'பாக்கெட் மணி'யை கொஞ்சம் சேத்து வச்சிருக்கேன்... முடிஞ்ச அளவுக்கு பண்றேன் சார்... மத்தபடி, கட்சி தான் பார்த்துக்கணும்...
துரைமுருகன்: கட்சி என்னத்த பாத்துக்கிறது... கட்சியை இனிமே நீங்க தான் தம்பி பார்த்துக்கணும்... செலவை விடுங்க... கட்சிக்காக தம்பி எவ்வளவோ செஞ்சிருக்கு... 'சூப்பர் ஸ்டார்' ஆயி தினம் பல கோடி சம்பாதிக்கிற வாய்ப்ப துாக்கி எறிஞ்சுட்டு, கட்சீல சேந்தது எவ்ளோ பெரிய தியாகம்! விடுங்க கால் நுாற்றாண்டு காலம் மத்திய அமைச்சரா இருந்த பாலு உங்க செலவெல்லாம் பாத்துப்பாரு...! என்ன பாலு, நா சொல்றது..?
(டி.ஆர்.பாலு உள்ளே அழுது வெளியே சிரித்து தலையை ஆட்டி வைக்கிறார்)
பொன்முடி: சரி தம்பீ... நீங்க போயிட்டு, உங்க தொகுதிக்கு இன்னும், ஏழு பேர் மனு போட்டிருக்காங்கல்ல... அவங்களை மொத்தமா உள்ள அனுப்பி வையுங்க... பேருக்கு வணக்கம் போட்டு அனுப்பிடுறோம்... 'சீட்' உங்களுக்கு தான்... போய் வேலைகளை பாருங்க... அட, அது கூட நீங்க பார்க்க வேண்டாம்... உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்... அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்... நீங்க பதவியேற்க கோட்டைக்கு வந்தா போதும் தம்பி...
உதயநிதி: (தயங்கியபடி) அங்கிள்ள்.. அந்த ஏழு பேரும் வரலை... போட்டி இருந்தா தான் உட்கட்சி ஜனநாயகத்துக்கு அழகுன்னு தாத்தா சொன்னத மதிச்சு நாந்தான், ஏழு பேருக்கு பணம் கட்ட வச்சேன்... தப்பா நினைச்சுக்காதீங்க...!
துரைமுருகன் எழுந்து நின்று: அடடா... அறிவுக்கொழுந்து... 'நடமாடும் கலைஞரே' என் கண் முன்னாடி நிக்கிறார்யா... இந்த வயசுலயே என்ன ராஜதந்திரம்... என்ன புத்திசாலித்தனம்... தம்பிக்கு, 230 மார்க் என் கணக்குல போடுங்க தலைவரே...
(அவர் போனதும், உதயநிதி வாங்கிய மார்க்கை ஸ்டாலின் கூட்ட, 100க்கு/995 வருகிறது. அனைவரும், 'ஜெர்க்'காக, 'அட விடுங்க தம்பி... நாம மாத்தாத கணக்கா... 100க்கு பக்கத்துல ஒரு சைபரை போடுங்க... 1000க்கு, 995 மார்க்குன்னு மாத்திடுங்க' என, துரைமுருகன் ஐடியா கொடுக்க, அந்த நேர்காணல் இனிதே முடிகிறது.)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE