ஐந்து மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளதால், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நாட்கள் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுஉள்ளது. முதல் கட்ட தேர்தல், மார்ச் 27ல் துவங்குகிறது. வரும், மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
வலியுறுத்தல்
இந்நிலையில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம், நேற்று துவங்கியது. வரும் ஏப்., 8ம் தேதி வரை, கூட்டத் தொடர் நடக்கவுள்ளதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.'சட்டசபை தேர்தல் நடப்பதால், பிரசாரத்தில் ஈடுபட வசதியாக, பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னதாகவே முடிக்க வேண்டும்' என, தி.மு.க., திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
'தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 'அதனால், பட்ஜெட் கூட்டத் தொடரின் நாட்களை குறைக்க வேண்டும்' என, இந்தக் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பாக, 145 லோக்சபா எம்.பி.,க்கள், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பிஉள்ளனர்.
இந்நிலையில், ஓம் பிர்லா தலைமையில், லோக்சபாவின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, துணைத் தலைவர் கே.சுரேஷ், பிஜு ஜனதா தளத்தின் அனுபவ் மொகந்தி, ஐக்கிய ஜனதா தளத்தின் லால்லன் சிங், சிவசேனாவின் வினாயக் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடிதம்
அரசு தரப்பில், பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், தலைமை கொறடா ராகேஷ் சிங் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில், தி.மு.க., மற்றும் மேற்கு வங்கத்தில் ஆளும், திரிணமுல் காங்., சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், கூட்டத் தொடர் நாட்களை குறைக்க வேண்டும் என, இந்தக் கட்சிகள் கடிதம் அனுப்பியுள்ளன.
பல்வேறு கட்சிகளின் லோக்சபா தலைவர்களுடனும், ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். கூட்டத் தொடரை முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கு, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இருப்பினும், பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளதால், மார்ச் 25ம் தேதியுடன் கூட்டத் தொடர் முடித்துக் கொள்ளப்படலாம் என, தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பை, சபாநாயகர் ஓம் பிர்லா, விரைவில் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் அமளி: ராஜ்யசபா ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லிமென்ட் நேற்று கூடியது. பெண்கள் தினம் என்பதால், ராஜ்யசபாவில் வழக்கான அலுவல்களை அடுத்து, பெண் எம்.பி.,க்கள் மட்டும் பேச, சபை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதித்தார்.
அலுவல்களை ரத்து செய்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, சபையில் விவாதம் நடத்தும்படி, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள, காங்கிரஸ் மூத்த எம்.பி., மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார். இது குறித்து பேசிய வெங்கையா நாயுடு, ''இந்த பிரச்னை குறித்து, நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது, எம்.பி.,க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்,'' என்றார்.
அப்போது, மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: நாடு முழுதும் இப்பிரச்னை, பற்றி எரிகிறது. பெட்ரோல் விலை, 100 ரூபாயை தொட்டுவிட்டது. இது குறித்து சபையில் விவாதிக்காமல், வேறெங்கு போய் பேச முடியும். மேலும், இப்பிரச்னை குறித்து தனியாக விவாதம் வேண்டும். அப்போது தான், மத்திய அரசு இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கிறது என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு மேல் பேச, கார்கேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையின் மையப் பகுதிக்கு வந்து, அரசை கண்டித்து, கோஷமிட்டனர். இதனால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின், ஐந்து முறை, அடுத்தடுத்து சபை கூடுவதும், ஒத்தி வைக்கப்படுவதுவமாக இருந்தது. இறுதியில், நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபாவும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் பழைய நிலை
கொரோனா தொற்று சூழலுக்காக, ராஜ்யசபா நேரம் மாற்றப்பட்டு, காலை, 9:00 மணிக்கு துவங்கி, பகல், 2:00 மணி வரை அலுவல்கள் நடந்தன. லோக்சபா, மாலை, 4:00 மணிக்கு கூடி, இரவு, 10:00 மணி வரை நடந்தது. சில நாட்கள், நள்ளிரவு தாண்டியும் அலுவல்கள் நடந்தன. எம்.பி.,க்கள் பலரும், தங்களுக்கான சிரமத்தை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரிடம் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, இரு சபைகளின் அலுவல் நேரங்களும், பழைய நிலைமைக்கே திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல், காலை, 11:00 மணிக்கு சபை துவங்கி, மாலை, 6:00 மணி வரை, ராஜ்யசபா செயல்படும். சமூக இடைவெளியை பின்பற்ற, கூடுதல் இடங்களாக, பார்வையாளர் மாடங்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE