புதுடில்லி :சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, பார்லிமென்ட்டில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்படி, பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சர்வதேச பெண்கள் தினம், நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கிடையே, பார்லி மென்ட்டில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, நேற்று துவங்கியது.
முக்கிய பொறுப்புகள்
இதில், பெண் எம்.பி.,க்கள் பலரும், பார்லிமென்டில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தினர்.
ராஜ்யசபாவில் பேசிய, தேசியவாத காங்., - எம்.பி., பவுசியா கான் கூறியதாவது: பெண்களில், 6 சதவீதம் பேருக்கு மட்டுமே, முக்கிய பொறுப்புகள் கிடைக்கின்றன. அதற்கு மேல் கிடைப்பதில்லை என, பல ஆய்வுகள் கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதன்படி, பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி பேசியதாவது: பார்லிமென்ட்டில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை, 24 ஆண்டுகளுக்கு முன், பரிந்துரைத்தோம்.
கோரிக்கை
இன்று, 24 ஆண்டுகளுக்குப் பின், அந்த இட ஒதுக்கீடு, 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
காங்., - எம்.பி., சாயா வர்மா கூறியதாவது: மத்திய அரசு, 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. ஆனால், நம் நாட்டில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், நமக்கு வேறு கதையை சொல்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., - எம்.பி., சோனல் மன்சிங் கூறுகையில், “சர்வதேச ஆண்கள் தினத்தையும் நாம் கொண்டாட வேண்டும்,” என, கோரிக்கை வைத்தார்.பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த, 2010ல், ராஜ்ய சபாவில் நிறைவேறியது. எனினும், லோக்சபாவில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE