சென்னை : 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு, மாதம், 1,500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 18 ஆயிரம் ரூபாயும், ஆறு சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்' என, தி.மு.க.,வுக்கு போட்டியாக, அ.தி.மு.க.,வும் அறிவித்துள்ளது. தேர்தலில் பெண்களை கவரும் முயற்சியாக, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., இந்த இலவச திட்டத்தை அறிவித்துள்ளனர்.
விரைவில் தேர்தல் அறிக்கை
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நேற்று தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன், ஆலோசனை நடத்தினர். அதன்பின், இ.பி.எஸ்., அளித்த பேட்டி: உலக மகளிர் தினத்தை ஒட்டி, அனைத்து மகளிருக்கும் என் வாழ்த்துகள்.
மகளிர் நலனுக்காக, குடும்பத்திற்கு ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
சமூகத்தில், பொருளாதார சமநிலை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும், குடும்பத் தலைவியின் கையில், மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, விரைவில் வெளியிடப்படும். அதில், பல்வேறு திட்டங்கள், மக்களின் மனம் நிறைவடையும் அறிவிப்புகள் இடம்பெறும். தேர்தல் அறிக்கையை, பத்து நாட்களாக தயாரித்து வருகிறோம். இதில் எப்படியோ சில விஷயங்கள் கசிந்து விட்டன. அதை வைத்து, ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில், குடும்பத் தலைவிக்கு, 1,000 ரூபாய் என அறிவித்துள்ளார்.
மக்கள் செல்வாக்கு
ஆர்வக் கோளாறு காரணமாக, நல்ல திட்டங்களை, மற்றவர்களிடம் பகிர்ந்து விடுகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க.,வின் திட்டங்களில் சில, கசிந்து விடுகின்றன, வரும், 12ம் தேதி, வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. 11ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். வேட்பாளர் தேர்வில் இழுபறி எதுவும் இல்லை. தொகுதி பங்கீடு, விரைவில் நிறைவு பெறும். தே.மு.தி.க.,வுடன் பேச்சு நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்தவர்கள் இடம் பெறுவர். புதிதாக சிறிய கட்சிகளும் இடம் பெறும்.
அ.தி.மு.க., கூட்டணி, மக்களிடம் மிகப் பெரிய செல்வாக்கை பெற்றுள்ளது. நான்கரை ஆண்டுகளாக, நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். கடந்த, 2011ல், ஜெ., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை, நிறைய திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளோம். மக்கள் செல்வாக்கு இருந்ததால், தி.மு.க., - காங்கிரஸ் வசமிருந்த, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம். மீண்டும், அ.தி.மு.க., அரசு வர வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.
தமிழகம் அமைதி பூங்கா
இடைத்தேர்தல் வெற்றி வழியாக, இதை தெளிவுப்படுத்தி உள்ளனர். சமீபத்தில், சேலம் மாவட்டம், தலைவாசலில், மகளிர் அணி கூட்டம் நடத்தினேன். நான்கு தொகுதியில் இருந்து மட்டும், 40 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர். திருச்சி தி.மு.க., கூட்டத்திற்கு, தமிழகம் முழுதும் இருந்து, 1 லட்சம் பேர் வந்துள்ளனர்.
இதிலிருந்து, அக்கட்சி செல்வாக்கை அறிந்து கொள்ளலாம். சசிகலா விலகிய பின், கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை. பல கட்சிகளில், அ.ம.மு.க.,வும் ஒன்று; அவ்வளவுதான். அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பு நிச்சயம் இல்லை. ஏற்கனவே பலர், அங்கிருந்து விலகி இணைந்து விட்டனர். இன்னும் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையின மக்கள் ஆதரவு, எங்களுக்கு உள்ளது. பல முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள், ஆதரவு தெரிவித்துள்ளன. எம்.ஜி.ஆர்., - ஜெ., காலத்திலும், ஜெ., மறைவுக்கு பிறகும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். இவ்வாறு, முதல்வர் கூறினார்.
திருச்சியில் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், 'ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும்' என அறிவித்துள்ளார். அதற்கு போட்டியாக, அ.தி.மு.க., தரப்பில், 1,500 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவை ரூ.42,090 கோடி!
இலவச காஸ் சிலிண்டர் மற்றும் மாதம், 1,500 ரூபாய் இலவசம் ஆகிய அறிவிப்புகளை செயல்படுத்த, தமிழக அரசுக்கு, ஆண்டுக்கு, 42 ஆயிரத்து, 90 கோடி ரூபாய் செலவாகும்.
* தமிழகத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 2.38 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். மாதம் சராசரியாக, 1 கோடி வீட்டு சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. சிலிண்டர் விலை, மாதம்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.
இம்மாதம், வீட்டு சிலிண்டர் விலை, 835 ரூபாயாக உள்ளது. முதல்வர் அறிவிப்பின் படி, ஒரு இலவச சிலிண்டருக்கு, 835 ரூபாய் என கணக்கிட்டால், 1 கோடிக்கு, மாதம், 835 கோடி ரூபாய் செலவாகும். ஆண்டுக்கு, ஆறு சிலிண்டர்கள் வழங்க, 5,010 கோடி ரூபாய் செலவாகும்
* தமிழக அரசு, 2.06 கோடி அரிசி கார்டுதாரருக்கு, பொங்கல் பரிசாக, தலா, 2,500 ரூபாய் வழங்கியது. அதன்படி, 2.06 கோடி கார்டுதாரர்களுக்கு, முதல்வர் அறிவிப்பின் படி, மாதம், 1,500 ரூபாய் வழங்குவதாக இருந்தால், 3,090 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
அதை, ஓராண்டிற்கு கணக்கிட்டால், 37 ஆயிரத்து, 80 கோடி ரூபாய் செலவாகும். ஆறு இலவச காஸ் சிலிண்டர் மற்றும், மாதம், 1,500 ரூபாய்க்கு மட்டும் மொத்தம், 42 ஆயிரத்து, 90 கோடி ரூபாய் செலவாகும்.ஐந்து ஆண்டுகளுக்கு, 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE