ஸ்ஸ்ஸ்ஸபா, இப்பவே கண்ண கட்டுதே...!| Dinamalar

ஸ்ஸ்ஸ்ஸபா, இப்பவே கண்ண கட்டுதே...!

Added : மார் 09, 2021 | |
காய்கறி பைகளுடன் வீட்டுக்குள் நுழைந்த மித்ராவுக்கு, 'மகளிர் தின' வாழ்த்து கூறி, வரவேற்றாள் சித்ரா.''அக்கா, உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்,'' என்ற மித்ரா, ''உடன்பிறப்புகள் தலைகால் புரியாம, சந்தோஷத்துல திளைக்கிறாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாப்பா, திருச்சி பொதுக்கூட்டத்துல திரண்ட கூட்டத்தை பார்த்து, தி.மு.க.,காரங்களுகக்கு தெம்பு வந்துருச்சு.
 ஸ்ஸ்ஸ்ஸபா, இப்பவே கண்ண கட்டுதே...!

காய்கறி பைகளுடன் வீட்டுக்குள் நுழைந்த மித்ராவுக்கு, 'மகளிர் தின' வாழ்த்து கூறி, வரவேற்றாள் சித்ரா.''அக்கா, உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்,'' என்ற மித்ரா, ''உடன்பிறப்புகள் தலைகால் புரியாம, சந்தோஷத்துல திளைக்கிறாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாப்பா, திருச்சி பொதுக்கூட்டத்துல திரண்ட கூட்டத்தை பார்த்து, தி.மு.க.,காரங்களுகக்கு தெம்பு வந்துருச்சு. இப்பவே, பலரும் அமைச்சர் கனவுல சுத்த ஆரம்பிச்சிட்டாங்க,''''என்னப்பா, இப்படிச் சொல்றே. இன்னும் வேட்பாளர் பட்டியலே அறிவிக்கலையே,''''கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அமைச்சர் பதவி ஒதுக்குவாங்க; எப்படியாவது கைப்பத்தணும்னு கணக்கு போட்டிருக்காங்க. பதவிக்கு போட்டியா, யார் குறுக்கே வந்தாலும், உள்குத்துல காலி செய்றதுக்கும் 'பிளான்' வச்சிருக்காங்களாம்,''''அப்படியா,'' என்ற மித்ரா, ''கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை தாரை வார்க்கப் போறதா கேள்விப்பட்டேனே,''''மித்து, அதுவும் உண்மைதான். வால்பாறையை இ.கம்யூ.,வுக்கும், பொள்ளாச்சியை கொ.ம.தே.க.,வுக்கும், கோவை வடக்கு தொகுதியை மா.கம்யூ.,வுக்கும், சூலுாரை காங்கிரசுக்கும், கிணத்துக்கடவை ம.தி.மு.க.,வுக்கும் தள்ளி விட, தி.மு.க., தரப்புல நினைக்கிறாங்களாம்,''''ஆனா, சிங்காநல்லுாரை மா.கம்யூ., கேட்குது. தெற்கு தொகுதி கேட்டு, காங்., பிரமுகர், கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுக்குறாராம். ஆனா, தி.மு.க.,விலும் சீனியர்கள் பலர், தெற்கை குறி வச்சு, விருப்ப மனு கொடுத்திருக்காங்க,''''அ.தி.மு.க., கூட்டணியில பா.ஜ., போட்டியிட்டா, ஈஸியா ஜெயிக்கலாம்னு கணக்கு போட்டிருக்காங்க. அதனால, மறுபடியும் காங்கிரசுக்கு ஒதுக்க மாட்டாங்கன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''''காங்கிரஸ் வேட்பாளர் உத்தேச பட்டியல்ல, அவரு பெயரே இல்லையே,''''ஆமாப்பா, 'வாட்ஸ்அப்'-ல உலா வர்ற உத்தேச தொகுதி பட்டியல், வேட்பாளர் பட்டியல் அரசியல்வாதிகளை கலங்கடிச்சிட்டு வருது. தி.மு.க., கூட்டணியில தொண்டாமுத்துாரிலும், சூலுாரிலும் காங்கிரஸ் போட்டியிடுதுன்னு சொல்லி, வேட்பாளர் பெயர்களை குறிப்பிட்டு, தகவல் பரப்பிட்டு இருக்காங்க. அதனால, சென்னையில் முகாமிட்டு, தலைவர்களை வட்டமிட்டு வர்றாராம்,''''தி.மு.க.,விலும் உள்குத்து வேலை ஜரூரா நடக்குதாமே,''''யெஸ், மித்து! நீ சொல்றது கரெக்ட்டுதான்! யாரெல்லாம் போட்டியிட போறாங்கன்னு, வாய்மொழியா பேசிக்கிறாங்களோ, அவுங்களை பத்தி, தலைமைக்கு ஏதாச்சும் ஒரு புகாரை உடன்பிறப்புகளே தட்டி விட்டுட்டு இருக்காங்க. அதனால, நேர்காணலுக்கு போயிட்டு வந்தவங்களும் உற்சாகமில்லாம இருக்காங்க. வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் ஆகுற வரைக்கும், துாங்க மாட்டாங்க போலிருக்கு,''''அ.தி.மு.க.,விலும், தெற்கு தொகுதி 'சிட்டிங்' எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் பரிதவிப்புல, சுத்திக்கிட்டு இருக்காராமே,''''அதுவா, தெற்கு தொகுதியை பா.ஜ.,வுக்கு ஒதுக்கிட்டதாவும், வானதி போட்டியிட போறதாவும் 'வாட்ஸ்-அப்'புல தகவல் பரப்பிட்டு இருக்காங்க. அதனால, ஆளுங்கட்சி தரப்புல 'அப்செட்'டுல இருக்காங்க,''''மாநகர் மாவட்ட செயலாளரா இருக்கறதுனால, தன்னை, அமைச்சர் வேலுமணி கைவிட மாட்டார்னு எம்.எல்.ஏ., நம்பிக்கையோடு இருக்காராம். உத்தேச பட்டியல் வெளியிட்டு, கட்சிக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்துறது, எதிர்க்கட்சி ஐ.டி., விங் சதி வேலையா இருக்கும்னு ஆளுங்கட்சிக்காரங்க சந்தேகப்படுறாங்க,''''சீட் கொடுக்கலைனா, வேறு கட்சிக்கு போகப் போறதாவும், 'வாட்ஸ்-அப்'புல தகவல் பரவிட்டு இருக்கே,''''அது, கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுக்குறதுக்காக, எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவா இருக்கற மாதிரி, குழி பறிக்கிற குறுஞ்செய்தியை பரப்பிட்டு இருக்காங்க. இதுவும் எதிர்க்கட்சிக்காரங்க செய்ற வேலைன்னு ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க,''''அக்கா, தொகுதியே இன்னும் பைனல் ஆகலை. பூத் கமிட்டிகளுக்கு இப்பவே பட்டுவாடா செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாமே,''''மித்து, அதெல்லாம் எல்லா கட்சிக்காரங்களும் செய்றதுதான். அமைச்சரா இருக்கறவங்க, தொகுதி மாறக்கூடாதுன்னு, சி.எம்., ஏற்கனவே கறாரா சொல்லிட்டாரு. அதனால, தொண்டாமுத்துார்ல வேலுமணி மறுபடியும் களமிறங்கிறது, உறுதியாகிடுச்சு,''''அதனால, தேர்தல் வேலையில சுறுசுறுப்பா இறங்கிட்டாங்க. ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி டீம் நியமிச்சிருக்காங்க. பூத் கமிட்டிக்கு, சுவர் விளம்பரம் செய்றதுக்கு, முதல்கட்டமா, தலா, 5,000 ரூபாய் கொடுத்திருக்காங்க,''''ஏம்ப்பா, தொண்டாமுத்துார்ல அவரு எவ்ளோ வேலை செஞ்சிருக்காரு; அவரை ஜெயிக்கிறது அவ்ளோ ஈஸியா என்ன,''''அப்படி, ஈஸியா சொல்லிட முடியாதுக்கா, தொகுதிக்குள்ள ஏகப்பட்ட வளர்ச்சி பணி செஞ்சிருக்குறது வாஸ்தவம்தான்; இல்லைன்னு சொல்லலை. இருந்தாலும், சிறுபான்மையினர் ஓட்டு எக்கச்சக்கமா இருக்குதே. லோக்சபா எலக்சன்ல, தி.மு.க., தரப்புல பரீட்சயமில்லாத வேட்பாளரை நிறுத்தி, அ.தி.மு.க.,வை விட, அதிகமான ஓட்டு வாங்குனாங்க,''''அதனால, தி.மு.க., தரப்புல, கூட்டணியை பைனல் பண்ணி, வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகே, ஆளுங்கட்சி வேகமா களமிறங்கும்னு சொல்றாங்க. அதுவரைக்கும் கூட்டணி இழுபறியா இருக்கற மாதிரி, 'சீன்' காட்டிட்டே இருப்பாங்களாம்,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.பின்தொடர்ந்து சென்ற சித்ரா, ''ஆளுங்கட்சிக்கு சாதகமாக வேலை செய்றதுக்காக, சில அதிகாரிகளுக்கு 'டிரான்ஸ்பர்' கொடுத்திருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள்.''ஆமாக்கா, காவல்துறையில் 'லேடி' ஆபீசர் ஒருத்தரை, பணியிட மாற்றம் செஞ்சிருக்காங்க. ரெகுலர் பொறுப்புல இருந்து விலகி இருந்தாலும், 21 தொகுதியை கண்காணிப்பாங்களாம். அதே மாதிரி, கார்ப்பரேஷன் அதிகாரிகள் சிலருக்கும் பொறுப்பு கொடுத்திருக்காங்களாம். தேர்தல் ஆணைய வேலைக்கு சம்மந்தம் இல்லாம ஒதுக்கி இருக்குற மாதிரி தெரியுமாம்; ஆனா, ஆளுங்கட்சிக்கு 'சப்போர்ட்'டா வேலை செய்வாங்களாம்,'' என்றபடி, காபி கோப்பையை நீட்டினாள் மித்ரா.காபியை உறிஞ்சியபடி, சோபாவில் அமர்ந்த சித்ரா, ''மோசடி பேர்வழிக்கு போலீசுல ஏகப்பட்ட மரியாதையாமே,'' என, கேட்டாள்.''அதுவா, பல கோடி ரூபாயை சுருட்டியவரை, 'கஸ்டடி' எடுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்காரங்க, வாடகைக்கு குடோன் எடுத்த இடத்துக்கு அழைச்சிட்டு போயி, விசாரிச்சிருக்காங்க. அவரை பார்த்த குடோன் உரிமையாளர்கள், வசைபாடியிருக்காங்க. அதைக்கேட்ட போலீஸ்காரங்களுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்திருக்கு. 'இப்படி எல்லாம் பேசக்கூடாது; சார்ன்னு கூப்பிடணும்'னு, போலீஸ்காரங்க 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க. ஊரை ஏமாத்தி, கோடிக்கணக்குல பணத்தை சுருட்டுன ஆசாமிக்கு, எவ்ளோ மரியாதை கொடுக்குறாங்க,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''மித்து, அதெல்லாம் வேற டீலிங்கா இருக்கும்,''கட்சியில, 'மாஜி'யே மறுபடியும் 'சீட்' கேட்டு அடம் பிடிக்கிறாராமே,'' என, மீண்டும் அரசியல் பக்கம் திரும்பினாள் சித்ரா.''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். ஏற்கனவே பல தடவை போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆகிட்டாரு. மறுபடியும் 'சீட்' கேட்டு, தலைமையை நச்சரிக்கிறாராம். அ.தி.மு.க., கூட்டணியில, த.மா.கா.,வுக்கு கொடுக்கப் போறதா பேச்சு ஓடிட்டு இருக்கு. த.மா.கா., வேட்பாளருக்கு செல்வாக்கு ஜாஸ்தியா இருக்கறதுனால, 'மாஜி'யை நிறுத்துனா, தோத்துடுவோம்னு, கம்யூ., கட்சிக்காரங்க முடிவெடுக்க முடியாம திணறிட்டு இருக்காங்களாம்,''''கம்யூ., கட்சியில இருக்கறவங்களும் பதவி ஆசையில இருப்பாங்க போலிருக்கு,'' என்ற சித்ரா, ''கார்ப்பரேஷன்ல மறுபடியும் சொகுசு பங்களா கட்டுறாங்களாமே,'' என, நோண்டினாள்.''ஆமாக்கா, ஏற்கனவே, முந்தைய கமிஷனருக்காக, கணக்குல வராம, பல கோடி ரூபாய்க்கு பழைய வீட்டை புதுப்பிச்சாங்க. இப்ப, இன்னொரு அதிகாரிக்காக, பல லட்சம் ரூபாய் செலவழிச்சு, புதுப்பிக்கிறாங்களாம். கவர்னர், முதல்வர், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் கடிதம் அனுப்பியிருக்காங்க,''''லஞ்ச ஒழிப்புத்துறைன்னு சொன்னதும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. மக்களின் வரிப்பணம் ரூ.20 லட்சத்தை சுருட்டிய விவகாரத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமா விசாரிக்குதாம். இந்த முறைகேட்டை கண்டுபிடிச்ச ஒரு அதிகாரி, லீவுல போயிட்டாராம்; இன்னொருத்தரை வேற இடத்துக்கு மாத்திட்டாங்களாம்,''''அதாவது, பணம் சுருட்டிய விவகாரத்தை அமுக்க பார்க்குறாங்கன்னு சொல்லுங்க,'' என்ற மித்ரா, அன்றைய நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள்.''மித்து, பாரதியார் பல்கலையில, தேர்தல் நன்னடத்தை விதிமுறையை காரணம் காட்டி, ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டத்தை ரத்து செஞ்சிட்டாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள்.''ஆமாக்கா, இந்த பல்கலையில, அதிக பட்சமாவே, 200 பேராசிரியர்களே இருப்பாங்களாம். அவுங்க, பல பிரிவுகளா சிதறி இருக்காங்களாம். எல்லாத்தையும் ஒருங்கிணைக்கிறதுக்காக, பொதுக்குழு கூட்டுறதுக்கு பிளான் போட்டிருக்காங்க. ஒன்றுபட்ட இயக்கமா மாறுன, நிர்வாகத்துக்கு குடைச்சல் கொடுப்பாங்கன்னு நினைச்சிருப்பாங்க போலிருக்கு. தேர்தல் விதிமுறையை சொல்லி, கூட்டத்தை ரத்து செஞ்கிருக்காங்க,''''பொதுத்தேர்தலுக்கும், சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்; எதுக்கு கூட்டம் நடத்த விடாம தடுக்குறாங்கன்னு, பேராசிரியர்கள் மத்தியில் புகைச்சல் ஓடிட்டு இருக்கு,'' என்றபடி, 'டிவி'யை, 'ஆன்' செய்தாள்.தொகுதி உடன்பாடு சம்பந்தமான செய்தி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இருவரும், அதை கவனிக்க ஆரம்பித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X