கடல் அலை சீற்றத்தைப் பார்த்தால். சுனாமி நினைவுக்கு வரும். நில நடுக்கம் என்றால் பல நாடுகளில் ஏற்பட்ட பேரழிவு நினைவுக்கு வரும். அதேபோல், தி.மு.க., என்றால் நில அபகரிப்பு, அராஜகம்தான் நினைவுக்கு வரும். தி.மு.க., குறித்த அந்த பிம்பம் எந்த நாளும் மாறாது என்கிறார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.நம் நாளிதழுக்கு ராமதாஸ் அளித்த சிறப்பு பேட்டி:

இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத, 'மாடல் பட்ஜெட்' தயார் செய்து வெளியிடுகிறீர்கள் ஒவ்வொரு ஆண்டும். அதற்கு பலன் இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது. இதுவரை, 18 முறை பொது நிழல் நிதிநிலை அறிக்கைகளையும், 13 முறை வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை களையும் வெளியிட்டுள்ளோம். இந்த அறிக்கை களில், தமிழக அரசுக்கு ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அறிக்கை வெளியிட்ட உடனே அதை படித்து அறிந்து கொள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆர்வம் காட்டுவர்.அறிக்கைகளில் கூறிய பல ஆலோசனைகள், அ.தி.மு.க., ஆட்சியிலும், தி.மு.க., ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வேளாண்மைக்கு, 13 ஆண்டுகளாக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்டு வருகிறோம். அதன் பயனாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. தி.மு.க., கூட, கடந்த சட்டசபை தேர்தலில் அதற்கு வாக்குறுதி அளித்தது. இது போன்று ஏராளமான பயன்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டியது, ஓர் எதிர்க்கட்சியின் கடமை. அந்தக் கடமையை செவ்வனே நிறைவேற்றி வருகிறது பா.ம.க.
தமிழக அரசின் கடன் சுமை ஏறிக் கொண்டே போகிறது. அதை மட்டுப்படுத்த திட்டம் எதுவும் வைத்திருக்கிறீர்களா?
கடன் வாங்காமல் அரசு நிர்வாகம் செய்ய முடியாது. வாங்கும் கடனை வேறு தேவைக்கு செலவிடுவது தான் தவறு. வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் வாங்கி, அதற்காக மட்டுமே செலவிடுவது தவறு இல்லை. ஓராண்டாக தொடரும் கொரோனா பரவல் காரணமாக அரசின் வருமானம் குறைந்து, செலவு அதிகமாகி விட்டது. இந்த நிலையில் கடன் அதிகமாவதை தவிர்க்க முடியாது.வருவாயை அதிகரிப்பதன் மூலம் தான் கடன் சுமையை தவிர்க்க முடியும். ஆனால், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசின் வரி விதிப்பு அதிகாரம் குறைந்து விட்டது.
பெட்ரோல், டீசல், மது தவிர வேறு எந்த பொருளுக்கும் மாநில அரசால் வரி விதிக்க முடியாது. எனவே, வரி அல்லாத வருவாயை உயர்த்துவதன் மூலம் மட்டும் தான் தமிழக அரசின் வருவாயை உயர்த்த முடியும். இன்றைய நிலையில், தமிழக அரசின் வரி அல்லாத வருவாய், 12 ஆயிரம் கோடியாக உள்ளது. இதை, 2 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அதன் மூலம் தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க முடியும்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயம் பற்றி ஆழமான அறிக்கை விடுகிறீர்கள். அதற்கான புள்ளி விபரங்கள் மற்றும் தரவுகள் எங்கிருந்து எப்படி கிடைக்கிறது?

மக்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே அவர்களின் பிரச்னைகள் நம் கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகளை வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்து தீர்மானிப்பேன். எந்த ஒரு பிரச்னை குறித்தும் என்னிடம் தெரிவித்தால், அதற்கு தீர்வு கிடைக்கிறது என்பதால், பொதுமக்களும், வல்லுனர்களும் பல தகவல்களை எனக்கு தருகின்றனர். மத்திய--மாநில அரசுகள் வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்து வருகிறோம்.
உலக நடப்புகளையும், உள்நாட்டு நடப்புகளையும் அன்றாடம் ஆராய்கிறோம். அதனால் தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களுக்கு பஞ்சமில்லை.மருத்துவ படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
தமிழ்நாட்டில் உள்ள, 5,000க்கும் கூடுதலான அரசு ஒதுக்கீட்டு மருத்துவப்படிப்பு இடங்களில், 400க்கும் கூடுதலான இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளன. 'நீட்' தேர்வு காரணமாக மருத்துவக் கல்வியை நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் இருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையை மாற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திஉள்ளோம். பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை யிலும் இந்த வாக்குறுதி இடம் பெற்று உள்ளது.வன்னிய இனத்தவருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை போராடி பெற்றிருக்கிறீர்கள்.
இந்த ஒதுக்கீடு உங்களுக்கு திருப்தியா?
என், 40 ஆண்டுகால போராட்டத்திற்கு பயன் கிடைத்துள்ளது. அதனால் ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன், என்று குறிப்பிட்டேன். அது தான் அறிவிப்பு வந்த தருணத்தில் என் உணர்வு. ஆனால், வன்னியர்களின் எண்ணிக்கைக்கு இணையான இட ஒதுக்கீடு கிடைக்கும் போது தான் எனக்கு முழு திருப்தி கிடைக்கும். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறோம். முதல்வரும் செய்வதாக உறுதியளித்து உள்ளார். விரைவில் எங்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுத்ததால், மற்ற ஜாதியினர் கோபம் அடைந்துள்ளனர்; அவர்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக ஓட்டு போடுவார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறதே?
நாட்டில் எங்கும் யாரும் வன்னியர் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கவே இல்லை. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டும் சில கட்சிகளால் போராட்டம் துாண்டி விடப்படுகிறது. ஆனால், அந்தப் போராட்டங்களில், 10 பேர் கூட பங்கேற்பதில்லை. துாண்டி விடுவது யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.தி.மு.க., தலைமையின் குடும்ப உறவினர்களால் நடத்தப்படும் இசை வேளாளர் அமைப்பு ஒன்று அண்மையில், திருச்சியில் கூடியுள்ளது. வன்னியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக அதில் அறிவித்துள்ளது.
இது, தி.மு.க.,வின் துாண்டுதல் அல்லாமல் வேறு என்ன? இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி, தி.மு.க., தலைமை தப்பிக்க முடியாது. ஏனெனில், அந்தக் கூட்டம் நடந்ததே, தி.மு.க., அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தான்.கூட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள், ஸ்டாலினின் மைத்துனர் ஜெய.ராஜமூர்த்தி உள்ளிட்ட உறவினர்கள் தான். மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட, தி.மு.க., மேல்மட்டத்திற்கு நெருக்கமானவர்கள் அதில் பங்கேற்றுள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த, தி.மு.க.,வின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது.
வன்னியர்கள் நலனை முன்வைத்து புது கட்சிகள் முளைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
'கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து - தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே' என்ற அவ்வைப் பாட்டியின் பாடல் தான் என் பதில்.நில அபகரிப்பு, அராஜகம் போன்ற விஷயங்களில், தி.மு.க., மீதிருந்த பிம்பம் விலகிவிட்டதா? கடல் அலை சீற்றத்தைப் பார்த்தால். சுனாமி நினைவுக்கு வரும். நில நடுக்கம் என்றால் பல நாடுகளில் ஏற்பட்ட பேரழிவு நினைவுக்கு வரும்.
அதேபோல், தி.மு.க., என்றால் நில அபகரிப்பு, அராஜகம் தான் நினைவுக்கு வரும். தி.மு.க., குறித்த அந்த பிம்பம் எந்த நாளும் மாறாது. அன்புமணியை முதல்வராக்க, 2016 ல் தனித்தே களம் கண்ட பா.ம.க., அதில் தொடர்ந்து செல்லாதது ஏன்?
ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு தேர்தலிலும், ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். கடந்த முறை மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தோம். இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமுதாய நலன் கருதி அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்திருக்கிறோம். இதுவும் ஒரு வகையான தேர்தல் உத்தி தான்.
மத்திய -- மாநில அரசின் செயல்பாடுகளை சொல்லி, பா.ம.க., பிரசாரம் செய்யுமா?
தமிழ்நாட்டில், இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., அரசு தொடர வேண்டும் என்பது தான் , கூட்டணியின் பிரசார முழக்கமாக இருக்கும். அவ்வாறு இருக்கும் போது தமிழக அரசின் சாதனைகள், மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை முன்வைத்து தான் பிரசாரம் செய்வோம்.பா.ம.க., முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் ரத்து, பயிர்கடன்கள் தள்ளுபடி, 5 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட்டது, இவற்றுக்கெல்லாம் மேலாக, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு, ஜாதிவாரி மக்கள் தொகை விபரங்கள் சேகரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளையும், திட்டங்களையும் முன் வைத்து பா.ம.க., பிரசாரம் செய்யும்.
உங்கள் தீவிர பிரசாரத்தால் தமிழகத்தில் நாடகக் காதல் சம்பவங்கள் குறைந்திருக்கிறதா?
வசதி படைத்தவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக, அவர்கள் குடும்பப் பெண்களை துாண்டிலாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். அதனால் தான் நாடகக் காதலுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்தோம். அதற்கு பயன் கிடைத்திருக்கிறது; அது குறைந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.காதலுக்கு நான் எதிரி அல்ல. முதலில் படியுங்கள். அடுத்து, வேலைக்கு செல்லுங்கள். பிறகு காதல் செய்யுங்கள் என்று கூறினேன். இந்த அறிவுரை பலன் தந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு பெண்களின் திருமண வயதை, 21 ஆக உயர்த்துவது தான்.
பா.ம.க., கூடுதல் இடங்களில் வெல்லும்பட்சத்தில், கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்துவீர்களா?
மாட்டோம். அ.தி.மு.க., ஆட்சி என்ற முழக்கத்தை முன் வைத்து தான் போட்டியிடுகிறோம். அ.தி.மு.க., வுக்கு தேவைக்கு மேலான பெரும்பான்மை கிடைக்கும். அதனால் இந்த கேள்விக்கே இடமில்லை.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத தேர்தல் எப்படி இருக்கப் போகிறது?
எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை ஆகியோருக்குப் பிறகு அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிகள் சந்தித்த தேர்தல்கள் எவ்வாறு இருந்தனவோ, அதே போல் தான் இருக்கும். அரசியலில் ஆளுமைகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லை என்றாலும், அவர்களின் இடத்தை இப்போது அந்த இடத்திற்கு வந்திருப்பவர்கள் நிரப்புவார்கள். அந்த வகையில் இந்த தேர்தல், புதிய ஆளுமைகளை உருவாக்கும் தேர்தலாக அமையும்.
புதுச்சேரி காங்., அரசு கவிழ்ந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?
காங்., கட்சிக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அனைத்து அதிகாரங்களையும் தாங்களே அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை காரணமாக மற்றவர்களை மதிக்காததாலும் ஏற்பட்ட விளைவு தான் புதுச்சேரி காங்., அரசின் வீழ்ச்சி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE