அனைத்து மனிதர்களிடமும் இருப்பது போல, மொழிகளிலும் நிறை, குறை உண்டு. ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என, பெருமையாக கருதும் நாம், சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர்களாக இருந்தால், நம் தாய் மொழி தமிழுக்கு பெருமையே. இலக்கிய செறிவுடைய சமஸ்கிருதத்தை ஏற்பதில் எந்த தவறும் இல்லை.
- பட்டிமன்றங்களின் நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா
'உங்களுக்கு தெரிந்திருக்கிறது; திராவிடக் கட்சிகளுக்கு தெரிய மாட்டேன் என்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பட்டிமன்றங்களின் நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேட்டி.
கிராம சபை கூட்டங்கள் என்ற பெயரில், கூட்டத்தை கூட்டி, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு எதிராக வாய்க்கு வந்தபடி எல்லாம் தரக்குறைவாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். எனினும், அவர் தலையில், முதல்வர் ஆவதற்கு வாய்ப்பில்லை என எழுதப்பட்டுள்ளதால், தலைகீழாக நின்றாலும் அவரால் முதல்வர் ஆக முடியாது.
- வேளாண்மை துறை அமைச்சர் அன்பழகன்
'அவர் தலையில் எழுதியுள்ளதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள். யாரும் பார்த்திடக் கூடாது என்பதற்காகத் தானே, 'விக்' வைத்துள்ளார்...' என, கிண்டலாக கூறத் துாண்டும் வகையில், உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் அன்பழகன் பேச்சு.
சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட விவகாரங்களில் முன்னேறிய மாநிலமாக இருப்பதால், தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., செயல் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. அவர்களின் மதவாத அரசியல் இங்கு எடுபடவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளும், இங்கு தோல்வியைத் தான் சந்திக்கும்.
- இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா

'தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்து, ஒவ்வொரு தேர்தலிலும் உங்கள் கட்சி, அதிகப்படியான இடங்களில் வெல்கிறதா; நாளுக்கு நாள் தேய்ந்து தானே வருகிறது...' என, நினைவுபடுத்தத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா பேட்டி.
எங்கள் கோரிக்கைகளை ஏற்று, எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்ற எந்தக் கட்சி ஒப்புக் கொள்கிறதோ, அந்தக் கட்சிக்கு, ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஓட்டளிப்பர்.
- ஓட்டுனர் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன்
'அப்போ, உங்கள் ஓட்டு, எல்லா கட்சிக்கும் தான். ஏனெனில், தேர்தல் அறிக்கையில் வெளியிடவோ, நிறைவேற்ற உறுதி அளிக்கவோ, எந்த கட்சியும் இங்கு தயங்குவதில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஓட்டுனர் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன் பேட்டி.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ஈ.வெ.ரா., அம்பேத்கார், திருவள்ளூவர் சிலைகள், தமிழகத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படுகின்றன. இதை கண்டித்து, மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என, அ.தி.மு.க., அரசு எதிர்பார்க்கிறதா?
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
'நீங்க, மிகப் பெரிய போராட்டம் நடத்திட்டாலும், அப்படியே, டில்லி விவசாயிகள் போராட்டம் போல, தமிழகம் ஸ்தம்பித்து விடத் தான் போகிறது...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE