கொலை செய்வது குற்றம் என்றால், 'ஹேக்கிங்' செய்வதும் குற்றமே. ஆன்லைனில், 'ஹேக்கிங்' வகுப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் பல உள்ளன. ஆனால், அதைப் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள், அது துஷ்பிரயோகம் செய்யப்படாதவாறு கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் ஆழ்ந்த அக்கறை காட்டுவதில்லை.
'நெறியற்ற ஹேக்கிங் கொலைக்குச் சமமே' என்கின்றனர் நிபுணர்கள்.'ஹேக்கிங்' என்ற சொல், 1960களில், அமெரிக்கா மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டது. அடிப்படையில் ஹேக்கிங் என்பது கணினி அமைப்பு அல்லது நெட்வொர்க்கில் உள் நுழைந்து, அதன் பலவீனம் அல்லது பாதிப்பை பகுப்பாய்வு செய்வதற்கும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஹேக்கர்கள், பிறரது பாஸ்வேர்டு கண்டுபிடிக்கும் திறனைக் கொண்டவர்களாக இருப்பர். அவர்களின் கணினிக்குள் ஊடுருவி, நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும், தகவல் திருட்டுகளையும் கண்டுபிடிக்க ஏதுவாக பாதுகாப்பை பலப்படுத்த, நிறுவனமே அனுமதி கொடுக்கும்.இத்தகைய நெறிமுறை ஹேக்கர்கள், 'வெள்ளை தொப்பி ஹேக்கர்' என்று அழைக்கப்படுவர். பல நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் உள்ள பாதிப்புகளை அடையாளம் காணக்கூடிய, நெறிமுறை ஹேக்கர்களுக்கு விலை உயர்ந்த விருதுகளையும், பணமுடிப்பையும் வழங்குகின்றன.
ஆனால், தீங்கு விளைவிக்கவும், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் மென்பொருளை சட்டவிரோதமாக தவறாகப் பயன்படுத்தும் ஹேக்கர்களை, கருப்பு தொப்பி ஹேக்கர் (பிளாக் ஹாட் ஹேக்கர்) என்று அழைப்பர்.

நாட்டுக்கே அச்சுறுத்தல்
இந்த ஹேக்கர்கள் வலைதளங்கள், மின்னஞ்சல்கள் அல்லது நெட்வொர்க்குகளில், கிரெடிட் - டெபிட் அட்டை விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு விவரங்களை சேகரிப்பர். அவற்றைமுறைகேடாகப் பயன்படுத்தி, சாதாரண மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிப்பர். அது மட்டுமின்றி அச்சுறுத்திப் பணம் பறிக்கவும், மூன்றாம் மனிதருக்கு தகவல்களை விற்று பயனடையவும் முயல்வர்.இத்தகைய ஹேக்கர்கள் பல்கலைக்கழக வலைதளத்தில் முறைகேடாக நுழைந்து, மாணவர்களின் மதிப்பெண்களை மாற்றலாம். நிறுவன நிர்வாகிகளின் தனிப்பட்ட மின்னஞ்சலையும், 'சாட்'களையும் அணுகி பணம் கேட்டு பயமுறுத்தலாம். முக்கிய புள்ளிகளின் வலைதளங்களையும் இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் வலைதளத்தையும் சிலர், 'ஹேக்' செய்தனர் என்ற செய்தி நம்மை திடுக்கிடச் செய்தது என்பது உண்மை. இவர்களது இந்த முறையற்ற செயல் நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறி ஆக்கி விடும். அந்நிய நாடுகளுக்கு ஆதாயம் ஆகிவிடும்.
'மஹாபாரத கதை உதாரணம்'
சைபர் தொழில்நுட்ப நிபுணர் டாக்டர் முத்துக்குமார் கூறியதாவது:ஹேக்கிங் தொழில்நுட்பத்தை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் முன் கல்வி நிறுவனங்கள், பல முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவேண்டும். ஆனால், மாணவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? நெறிமுறையைப் பின்பற்றுபவர்களா? அல்லது தவறான வழியைப் பின்பற்றுபவர்களா? என்று எவ்வாறு கண்டறிவது என்பதும் சிக்கலான விஷயம்.
மஹாபாரத்தில், ஆச்சாரியர் துரோணர், தனது மகன் அஸ்வத்தாமாவுக்கு புத்திர பாசத்தின் காரணமாக, பிற விஷயங்களைப் புறந்தள்ளிவிட்டு ஆபத்தான பிரம்மாஸ்திரத்தைக் கற்பித்தார். பகவான் கிருஷ்ணர் மட்டும் தலையிட்டிருக்காவிட்டால் அந்த ஆயுதம் முழு உலகைத்தையும் அழித்திருக்கும். ஏனெனில், அஸ்வத்தாமாவுக்கு அதை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது பற்றி முழுமையாகத் தெரியாது .மேலும், அஸ்வத்தாமன் அதர்மத்தின் பக்கத்தில் இருந்து ஆயுதத்தை பயன்படுத்தினான். ஆகவே, ஆளை முழுமையாக பரிசீலித்த பின்னரே, இவ்விஷயங்களைக் கற்றுத் தரவேண்டும்.
ஹேக்கிங் நுட்பங்களை மாணவர்களுக்கு கற்பிக்க முற்படும் நிறுவனங்கள் மாணவனின் பண்பை முழுமையாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். சபலமான மனம் படைத்தவர், பேராசைக்கு ஆளாகாதவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
கல்வி நிறுவனங்கள் உஷார்!
தமிழக வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கே.ராமசாமி கூறுகையில், ''நான் பதவியில் இருந்தபோது ஒரு முறை, எனது மின்னஞ்சல், 'ஹேக்' செய்யப்பட்டது. பல்கலைக் கழகங்களில் கூட, இணைய பாதுகாப்பு அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஒவ்வொரு பல்கலையிலும் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருந்தபோதிலும், கடுமையான ஹேக்கிங் சம்பவங்களை கையாள, போதுமான பயிற்சி அளிக்கப்படுவது இல்லை.'' அங்கீகரிக்கப்படாத ஹேக்கிங் படிப்புகள் ஆபத்தானவை. ஏனெனில், சமீபத்தில், இரண்டு மருத்துவக் கல்லுாரிகளின் பேரில், மோசடி நடந்தது. மருத்துவக் கல்லுாரிகளின் அனைத்து விவரங்களையும் சேகரிக்க முடிந்த ஒரு ஹேக்கர், அவை விற்பனைக்கு இருப்பதாக சிலரிடம் முன்பணத்தை வசூல் செய்து தலைமறைவாகிவிட்டார். எனவே, அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில், நன்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இப்படிப்பை கற்றுத் தருவதே சிறந்தது,'' என்றார்.
-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE