கொரோனா 2வது அலை தடுப்பது நம் கையில்!

Added : மார் 09, 2021 | |
Advertisement
சீனாவின் வூஹான் நகரிலிருந்து, 2019 டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் பலவற்றையும், இன்னும் ஆட்டிப் படைத்து வருகிறது. மஸ்கட்டில் இருந்து வந்தவர் வாயிலாக, 2020 மார்ச், ௭ல், தமிழகத்திற்குள் இந்த வைரஸ் புகுந்தது. அடுத்த சில நாட்களில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வாயிலாக, விறுவிறுவென பரவியது. 2020 ஜூலை, 27ல், ஒரே நாளில், 7,000 பேர் வரை பாதிக்கப்பட்டு

சீனாவின் வூஹான் நகரிலிருந்து, 2019 டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் பலவற்றையும், இன்னும் ஆட்டிப் படைத்து வருகிறது. மஸ்கட்டில் இருந்து வந்தவர் வாயிலாக, 2020 மார்ச், ௭ல், தமிழகத்திற்குள் இந்த வைரஸ் புகுந்தது.

அடுத்த சில நாட்களில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வாயிலாக, விறுவிறுவென பரவியது. 2020 ஜூலை, 27ல், ஒரே நாளில், 7,000 பேர் வரை பாதிக்கப்பட்டு உக்கிரத்தை காட்டியது. தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, 8.54 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து, 517 பேர் இறந்துள்ளனர். தற்போது, 3,952 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2020 அக்டோபரில் இருந்து, தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்தாலும், கடந்த சில நாட்களாக, தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா புகுந்து, நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு, 500க்கு மேல் அதிகரித்து வருவது நல்ல அறிகுறியல்ல. அதேநேரத்தில், தமிழகத்தில் மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, ஒடிசா உட்பட, எட்டு மாநிலங்களில், 63 மாவட்டங்களில், கொரோனாவால் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக, மத்திய சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுதும் நேற்று முன்தினம் மட்டும், 18 ஆயிரத்து, 327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும், 1,179 பேர் பாதிக்கப்பட்டு, அங்குள்ள நான்கு மாவட்டங்களில், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு, உயர்மட்டக்குழு ஒன்றையும், மத்திய அரசு அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில், பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்; பாதித்தவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை தர வேண்டும் என்றும், மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 2020 மார்ச், 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பல மாதங்களுக்கு நீடித்தது. இதனால், ஏராளமானோர் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கும், இன்னல்களுக்கும் ஆளாகினர்.

இந்த நிலையில், மீண்டும் அதன் தாக்கம் அதிகரிப்பது சரியானதல்ல.அதற்கேற்ற வகையில், கொரோனா அதிகரிப்பதால், ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைகள் இன்று முதல் 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது, நமக்கு ஒரு எச்சரிக்கையாகும். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆங்காங்கே பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் உருவாகிஉள்ளது. ஆனாலும், தொற்று பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில், மக்கள் மத்தியில் உருவாகியிருந்த பயம் தற்போது இல்லை.

முக கவசம் அணிவதை தொடர வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என, சுகாதாரத் துறை தரப்பில் அவ்வப்போது அறிவுறுத்தி வந்தாலும், அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அதே நேரத்தில், கொரோனாவை தடுக்க, நம் நாட்டில் தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகளை, இதுவரை, 2.06 கோடி பேர் மட்டுமே போட்டுள்ளனர். நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும், பல தனியார் மருத்துவமனைகளிலும், 45 நாட்களுக்கு மேலாக, தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதை, 60 வயதிற்கு மேற்பட்ட, 1.40 லட்சம் பேர் உட்பட, 8.48 லட்சம் பேர் தான் போட்டுள்ளனர். இதிலிருந்தே, தடுப்பூசி போடும் விஷயத்திலும் மக்களுக்கு அக்கறையில்லை என்பது தெளிவாகிறது. பிரதமர் மோடி உட்பட, தலைவர்கள் பலர் தடுப்பூசி போட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்கள் மத்தியில் அலட்சியம் தொடர்கிறது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து, மறுபடியும் ஊரடங்கு அமலாகாமல் இருக்க வேண்டும் எனில், கட்டுப்பாட்டு விதிமுறைகளை, மக்கள் மீண்டும் கடுமையாக பின்பற்ற வேண்டும்.பொது இடங்களில், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவு. இந்த ஆறுதல் மட்டும் போதாது; நம் நாட்டில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதுவே, நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X