லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்த ஹாரி-மேகன் தம்பதியரின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. பிரபல கருப்பின தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ப்ரே ஹாரி-மேகனிடம் பேட்டி கண்டார்.
அப்போது மேகன் மனம் திறந்து பேசினார். தாங்கள் அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மேகன் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் நிறத்தை விமர்சித்ததாகத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரச குடும்பத்தில் திருமணம் முடிக்கும் முதல் கருப்பினப் பெண் மேகன். இவருக்கு பிறக்கும் குழந்தையும் கருப்பின குழந்தையைப் போலவே இருக்கும் என்று விமர்சிக்கப்பட்டதாக மேகன் கூறினார். இதனால் அரச குடும்பத்தில் நிற மற்றும் இனப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று விவாதம் கிளம்பியது.

இந்நிலையில் இதுகுறித்து ஓப்ரா வின்ப்ரே தற்போது கூட்டமொன்றில் பேசியபோது தெளிவாக விளக்கியுள்ளார். மேகன் தன்னிடம் இதுகுறித்து பேசும்போது இளவரசர் பிலிப், ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோர் இனப் பாகுபாடு காட்டும் வகையில் விமர்சித்ததாகக் கூறவில்லை என்றும் பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு அரச பரம்பரையைச் சேர்ந்த நபர்தான் அவ்வாறு கூறியதாகவும் ஓபரா வின்ப்ரே தெரிவித்துள்ளார்.
இது யாராக இருக்கும் என்ற விவாதம் தற்போது கிளம்பியுள்ளது. இவ்வாறு கூறியது இளவரசர் வில்லியம் ஆக இருக்கலாம் அல்லது அவரது மனைவி மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆக இருக்கலாம் அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பலர் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். பொதுவாகவே அரச குடும்பத்து செய்திகள் பிரிட்டன் ஊடகங்களில் வைரலாகும். தற்போது சர்ச்சை செய்தி வெளியானதால் இது மேலும் பல மடங்கு வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE