எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வை பார்த்து மிரளும் தமிழக எதிர்க்கட்சிகள்

Updated : மார் 10, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
தி.மு.க.,விலும் பின்னர் காங்கிரசிலும் இருந்தபோது, நட்சத்திர பேச்சாளராக மட்டும் பார்க்கப்பட்ட குஷ்புவுக்கு முதல் முறையாக வேட்பாளர், 'ரோல்' கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கி விட்ட கட்சி என்ற பெயரைத் தட்டிக் கொண்டு போயிருக்கிறது பாரதிய ஜனதா. வேட்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை. என்றாலும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை பம்பரமாக சுற்றி
BJP, kushboo, TN election 2021

தி.மு.க.,விலும் பின்னர் காங்கிரசிலும் இருந்தபோது, நட்சத்திர பேச்சாளராக மட்டும் பார்க்கப்பட்ட குஷ்புவுக்கு முதல் முறையாக வேட்பாளர், 'ரோல்' கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கி விட்ட கட்சி என்ற பெயரைத் தட்டிக் கொண்டு போயிருக்கிறது பாரதிய ஜனதா. வேட்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை. என்றாலும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை பம்பரமாக சுற்றி வருகிறார்.

தெருமுனைக் கடையில் அரட்டை அடித்தபடி, 'டீ' குடிப்பது ; ஸ்கூட்டரில் வலம் வந்து கையசைப்பது என, தேர்தல் நேர உத்திகள் தனக்கும் அத்துப்படி என காட்டி வருகிறார். சினிமா, 'செலிபிரிட்டி' என்பதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் குஷ்பு, நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:


*காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அங்கும்; பா.ஜ.,வில் இணைந்ததும், இங்கும் விசுவாசமாக இருப்பதாக வித்தியாசமான விளக்கம் கொடுத்தீர்கள். இது, ஏற்கத்தக்கதா?


இதில் வித்தியாசம் என்ன வேண்டியிருக்கிறது. எங்கே இருந்தாலும், இருக்கிற இடத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். துரோகம் செய்யக் கூடாது. இது எல்லாருக்கும் பொது விதி.


*கட்சியில் சேர்ந்து, சில மாதங்களே ஆன உங்களுக்கு, 'சீட்' கொடுத்தால், இத்தனை ஆண்டுகளாக உழைத்தவர்கள் நிலை என்ன?


தி.மு.க., எனக்கு இந்த வாய்ப்பைத் தரவில்லை. காங்கிரசில் இருந்த, 6 ஆண்டு காலத்தில், 'குஷ்பு போட்டி' என, அவ்வப்போது என் பெயர் அடிப்படும்; ஆனால், வாய்ப்பு கிடைக்காது. மேலிடத்தில் இருக்கிற தலைவர்கள் சிலர், குஷ்பு தேர்தலில் நின்று ஜெயித்து தலைவராகி விட்டால், நம் பதவிக்கு சிக்கல் வந்து விடுமோ என பயந்து எனக்கு, 'சீட்' கிடைக்க விடாமல் தடுத்தனர்.நான் ஒன்றும், 'மதர்' தெரசா கிடையாது.

தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்; பதவி அதிகாரத்தை வைத்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. பணமோ, பெயரோ, புகழோ தேடி நான் அரசியலுக்கு வரவில்லை. அதெல்லாம் ஏற்கனவே என்னிடம் இருக்கிறது. எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை ஆராய்ந்து தான், வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கட்சியில் உழைப்பவர்களுக்கு, நிச்சயம் ஒருநாள் அங்கீகாரம் கிடைக்கும்.


* பா.ஜ.,வில் சேர்ந்த நாள் முதல், ஸ்டாலினையும், ராகுலையும் தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே?


ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்துார் தொகுதியில், மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. எனவே, இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தும், தொகுதிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்கிறேன், அதில் என்ன தவறு.அதே போல, பிரதமர் மோடியை, ராகுல் விமர்சிக்கும்போது, அதற்கு பதிலடி கொடுக்க ராகுலை விமர்சிக்கிறேன். பா.ஜ.,வையும், அ.தி.மு.க.,வையும் விமர்சிப்பவர்களை, நான் விமர்சிக்கிறேன்.


*உங்கள் விமர்சனத்தால் கோபமான காங்கிரசார், 'உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்போம்' என, எச்சரித்தனரே?


காங்கிரஸ்காரர்களுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பது, நாகரிகம் அல்ல. ராகுல் படத்தை, மொபைல் போனில், 'டிஸ்பிளே போட்டோ'வாக வைத்துக் கொண்டு, என்னை மிரட்டுகின்றனர்; எச்சரிக்கை விடுக்கின்றனர். இதனால், கெட்ட பெயர் ராகுலுக்கு தான்.யார் செய்தாலும் சரி, தனிப்பட்ட விமர்சனங்களும் தாக்குதல்களும் அநாகரிகம் என நம்புகிறேன். சமீபத்தில், எங்கள் கட்சியின், ஐ.டி., அணி தலைவர் நிர்மல்குமார், காங்கிரஸ் தலைவர் சோனியாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்திருந்தார். அதையும் கண்டித்தேன்.


* சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், நீங்கள் போட்டியிட விரும்பினீர்களா?


நான் எதுவும் விரும்பவில்லை. தொகுதியை ஒதுக்குவது, மேலிடம் எடுக்கும் முடிவு. ஒரு தொகுதியில், ஒரு வேட்பாளர் நிற்கிறார் என்றால், அவருடைய ஜாதகத்தையே, அலசி ஆராய்ச்சி செய்து தான் வாய்ப்பு தருவார்கள். வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிந்தால்தான் வேட்பாளராக நிறுத்துவார்கள். அப்படி வந்ததுதான் இந்த வாய்ப்பு.


*ஆனால், வேட்பாளர் யார் என்பதை மேலிடம் அறிவிக்கவே இல்லை. அதற்குள் நீங்கள் எப்படி பிரசாரம் துவக்கினீர்கள்?


இந்தத் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக, என் பெயரை மேலிடம் அறிவித்தது. உடனே பொறுப்பாக பிரசாரம் துவங்கி விட்டேன். 'குஷ்புக்கு ஓட்டு போடுங்கள்' என்று நான் கேட்கவில்லையே. 'தாமரைக்கு ஓட்டு போடுங்கள்' என்று தான் கேட்கிறேன்.


*நீங்கள் சென்ற கட்சிகள் ஆகட்டும், இப்போது வந்த கட்சியாக இருக்கட்டும்; கட்சிக்காக, ஆண்டாண்டு காலமாக உழைத்தவர்கள் பலர் இருக்க, உங்களுக்கு திடீர் முக்கியத்துவம் கொடுப்பது என்ன நியாயம்?


ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக் கணக்கில் கட்சியில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், கட்சியில் சேரும்போதே பிரபலமானவராக, புகழ் பெற்றவராக வருகிறோம். மக்கள் கூட்டம் தானாக வருகிறது. பத்திரிகைகளில், முதல் பக்கம் செய்தியாக வெளியிடப்படுகிறது. விவாதங்களில் பங்கேற்கிறேன். பா.ஜ., ஆட்சி திட்டங்களையும், பிரதமர் மோடியின் சாதனைகளையும் விளக்கி விமர்சனங்களுக்கு பதில் சொல்கிறேன். இதனால் கட்சியின் கொள்கைகள் அதிக மக்களை சென்று சேருகிறது. அதனால், எனக்கு அங்கீகாரமும், முக்கியத்துவமும் தருகின்றனர். அதை ஏற்பதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.


*'மோடியையும், பா.ஜ.,வையும் எதிர்ப்பது தான், என் முழு நேரப் பணி' என்று சொன்ன நீங்கள், எதற்காக, பா.ஜ., பக்கம் வந்தீர்கள்?


இருக்கிற இடத்தில், நமக்கு தரப்படும் வேலையை செம்மையாக செய்ய வேண்டும். 'எதிர்த்துப் பேசு' என்று கட்சி சொல்லும்போது, அதன்படி செய்தாக வேண்டும். காங்கிரசில் இருந்த, ஆறு ஆண்டுகளாக, பிரதமரையும், பா.ஜ.வையும் அப்படி எதிர்த்துப் பேசியே, ஒரு கட்டத்தில், நானும் எதிர்மறை எண்ணத்தோடு செயல்படும் நிலை ஏற்பட்டு விட்டது. அந்த மனமாற்றத்தை என் மகள் கண்டுபிடித்து விட்டாள். அவள் அதுபற்றி கேட்ட பிறகுதான், தீவிரமாக சிந்தித்து அந்த எதிர்நிலையில் இருந்து விடுபட்டேன்.


*இப்போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது இல்லையா?


காங்கிரசில் இருந்து வெளியேறியதும், என் மனதில் இருந்த எதிர்மறை எண்ணமும் வெளியேறி விட்டது. பா.ஜ.,வில் வெளிப்படைத் தன்மையை பார்க்க முடிகிறது; மறைமுக பணிகள் இல்லை. எதிர்மறை சிந்தனைகள் கிடையாது. மத்திய அரசில் ஊழல் இல்லை. உலக நாடுகள் அனைத்தும் பாராட்டும் நாடாக, இந்தியா உருவாகி உள்ளது. எனவே இங்கு என்னிடம் அந்த எண்ணங்கள் தோன்றுவதே இல்லை.


*தேர்தலில் ஒருவேளை, நீங்கள் எதிர்பார்க்கும், 'ரிசல்ட்' வராவிட்டால், மீண்டும் காங்., பக்கம் போவீர்களா?


கண்டிப்பாக போக மாட்டேன். அனுபவம் கற்று தரும் பாடமாக கருதி, பா.ஜ., வளர்ச்சிக்காக, தொடர்ந்து பாடுபடுவேன்.


*தி.மு.க., சார்பில் உங்களை எதிர்த்து, உதயநிதி போட்டியிட்டால், உங்களால் வெற்றி பெற முடியுமா?


யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை, மக்கள் முடிவு செய்வார்கள். உதயநிதி நிற்கிறார் என்பதை பற்றி எல்லாம் எனக்கு யோசிக்கவே நேரமில்லை.


*நீங்கள் தமிழகம் முழுதும் பிரபலமான நடிகை. ஒரு தொகுதியில் களம் இறங்கினால், மற்ற தொகுதிகளுக்கு பிரசாரம் செல்ல முடியாதே?


ஒரு தொகுதிக்குள் முடங்கி விட மாட்டேன். சுற்றுப் பயணம் செல்வேன். பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கும் பிரசாரம் செய்வேன். தமிழக தேர்தல் முடிந்ததும், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு போயும் பிரசாரம் செய்வேன்.


*தமிழக அரசின் இலவசத் திட்டங்களை வரவேற்கிறீர்களா?


மக்களை மேம்படுத்த, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இலவச திட்டங்களை வரவேற்கிறேன்.


*பெண்களுக்கு மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, ஸ்டாலின் அறிவித்திருப்பது பற்றி?


முதல்வர் இ.பி.எஸ்.,சும் மாதம் தோறும், 1,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.


*அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 20 தொகுதிகள் போதுமா?


கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. நாங்கள், 20 பெற்றிருந்தாலும், 20 லும் வெற்றி பெறுவோம். கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து, 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.


*நாற்பது தொகுதிகள் வரை ஒதுக்கப் போவதாக, பா.ஜ., தரப்பில் முதலில் சொன்னார்களே?


நாற்பது தொகுதிகள் கிடைத்திருந்தால், நன்றாகத்தான் இருக்கும். ஆனால், மற்ற கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டியிருக்கிறதே. அதனால், எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.


*தலைவர்கள், பிரபலங்களுக்காக மட்டுமே 'சீட்' பெறப்பட்டிருக்கிறதாமே?


வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை தான், மேலிடம் தேர்வு செய்கிறது. கன்னியாகுமரியில், பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவருக்கு வெற்றி உறுதி என்பதால், 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. மகன், மருமகன், பேரன், பேத்தி, மாமா, தங்கை, அக்கா போன்றவர்களுக்கு, பா.ஜ.,வில், 'சீட்' கிடைக்காது.


*மேற்கு வங்கத்தில், கூலித் தொழிலாளி ஒருவருக்கு, பா.ஜ., சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், அப்படியொரு நிலை இல்லையே?


கண்டிப்பாக வாய்ப்பு வரும்.


*ஒருவேளை, தேர்தலில் தோல்வி அடைந்தால், மீண்டும் சினிமாவுக்கு திரும்பி விடுவீர்களா?


இப்போது நான் முழு நேர நடிகை அல்ல. திருமணமாகி, 21 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில், ஐந்து படங்களில் தான் நடித்திருப்பேன். பத்தாண்டுக்கு பின், ரஜினியுடன், 'அண்ணாத்தே' படத்தில் நடிக்கிறேன். சீரியலிலும் நடிப்பதில்லை. முழு நேர அரசியலில் ஈடுபடுகிறேன்.


*'அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டும் ஊழல் கட்சிகள்' என, கமல் சொல்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?


அது அவர் கருத்து. அப்படிச் சொல்ல, அவருக்கு உரிமை உண்டு. ஆனால், எதார்த்தம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். 'இ.பி.எஸ்., ஆட்சி நீடிக்காது' என்றனர். உண்மையில் அவருடைய செல்வாக்கு டிசம்பர் மாதம் துவங்கி இன்று வரை ஏறுமுகமாகவே இருக்கிறது.மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவிக்கிறார். எளிமையாக இருக்கிறார்; ஆளுமையாக செயல்படுகிறார் என மக்கள் பாராட்டுகிறார்கள். அவர் மீது எந்த புகாரையும் மக்கள் கூறவில்லை. இதையெல்லாம் அறிந்துதான், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்.


*சசிகலா அரசியல் துறவறத்துக்கு பின்னணியில், பா.ஜ., இருப்பதாக சொல்லப்படுகிறதே?


ரஜினி, அரசியலுக்கு வந்தாலும், பா.ஜ., காரணம் என்கின்றனர்; வராவிட்டாலும், பா.ஜ., தான் காரணம் என்கின்றனர். இப்போது, சசிகலா அரசியலை விட்டு விலகியதற்கும் காரணம், பா.ஜ., என்கின்றனர். சிரிப்பு தான் வருகிறது. எதற்கெடுத்தாலும் இப்படி, பா.ஜ., பா.ஜ., என்று அலறினால், பா.ஜ., வளர்ந்து விட்டது என்றுதானே அர்த்தம். பா.ஜ.,வை கண்டு, எதிர்க்கட்சியினர் பயப்படுகின்றனர் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.


* ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., தலைவர்கள் வேல் பிடிக்கும் காட்சியை பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்?


ஸ்டாலின் மட்டுமா வேல் ஏந்துகிறார்? அவர் மகன் சூலாயுதத்தை துாக்குகிறார். மனைவி துர்கா, திருத்தணி முருகன் கோவிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை தருவதாக வேண்டுதல் வைக்கிறார். இதை எல்லாம் பார்க்கும்போது எங்கள் தலைவர் நடத்திய வேல் யாத்திரைக்கு எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது என்பது புரிகிறது.


*மேற்கு வங்கத் தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, தமிழக சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., தலைமை கொடுக்கவில்லை என்கிறார்களே?


அங்கே பா.ஜ., தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில், கூட்டணியாக போட்டியிடுகிறோம். எனவே அந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.


*நீங்கள் ஒரு ஹிந்துவை திருமணம் செய்து கொண்டு, ஹிந்து மதத்தை பின்பற்றுவதாக தெரிகிறது. ஆனால், இந்த தொகுதியில் உள்ள முஸ்லிம் மக்களிடம் உங்களை முஸ்லிமாக காட்டிக் கொள்கிறீர்களாமே?


எனக்கும் சுந்தருக்கும் நடந்தது கலப்பு திருமணம். திருமணத்திற்கு பிறகும் அவரவர் மதத்தை பின்பற்றலாம் என, சட்டம் கூறுகிறது. நான் அல்லாவை வணங்குகிறேன். அவர் முருகனை கும்பிடுவார். எங்கள் பூஜை அறையில் அறுபடை வீடு முருகன் கோயில்கள் படம் இருக்கிறது. சுந்தரின் குலதெய்வம் திரவுபதி அம்மன். அந்த கோவில், பழநியில் இருக்கிறது. அதை நான் தான் கட்டிக் கொடுத்தேன். பிள்ளையார் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என் நண்பர்.

என் வீட்டு வாசலில், விநாயகர் விக்ரஹம் உள்ளது.இந்த பிள்ளையாருக்கு பின்னால் ஒரு, 'பிளாஷ்பேக்' உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன், ஊட்டியில், 'மைக்கேல் மதன காமராஜன்' படப்படிப்பிற்கு சென்றிருந்தேன். அங்கு பித்தளை பிள்ளையார் சிலை வாங்கினேன். 'சொந்த வீடு வாங்கியதும், வீட்டின் முன்னால் அந்த விக்ரஹத்தை வைப்பேன்' என, சபதம் எடுத்தேன். அந்த சபதம், 2007ல் நிறைவேறியது.


*உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள்... தமிழகத்தில் தாமரை மலருமா?


மனதைத் தொட்டு சொல்கிறேன்; தாமரை கண்டிப்பாக மலரும்; மலர்ந்தே தீரும்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
11-மார்-202118:45:32 IST Report Abuse
Gopinathan S நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.....ஆனா அந்த கடைசி கேள்விக்கான பதில் வந்ததும்.....ரைட்டு...இது அது இல்ல....என்ற வடிவேலு வசனம் பிளாஷ் ஆச்சு.....
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-மார்-202123:48:39 IST Report Abuse
Ramesh R ஊத்திக்கும்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10-மார்-202119:23:15 IST Report Abuse
Krishnamurthy Venkatesan குஷ்பூ அவர்களின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X