இனி உலகம் நம்மை உற்று நோக்கும்

Updated : மார் 10, 2021 | Added : மார் 09, 2021 | |
Advertisement
'‛நிலவில் தண்ணீர் உண்டு' என்பதை, முதன் முதலில் உலகுக்குச் சொன்னது, 'சந்திரயான்' விண்கலம். அது, நிலவுக்குச் சென்ற, முதல் இந்திய விண்கலம். அதை உருவாக்கிய, '‛இஸ்ரோ' விஞ்ஞானி, அரசுப் பள்ளியில் படித்து, தமிழில் எழுதும் எழுத்தாளர்.அவர் தான், மயில்சாமி அண்ணாதுரை. அவரிடம் பேசியதில் இருந்து…;உங்களின் இளமை கால வாசிப்பு பற்றி?என் அப்பா, தலைமை ஆசிரியர். நான் சிறு
 இனி உலகம் நம்மை உற்று நோக்கும்

'‛நிலவில் தண்ணீர் உண்டு' என்பதை, முதன் முதலில் உலகுக்குச் சொன்னது, 'சந்திரயான்' விண்கலம். அது, நிலவுக்குச் சென்ற, முதல் இந்திய விண்கலம். அதை உருவாக்கிய, '‛இஸ்ரோ' விஞ்ஞானி, அரசுப் பள்ளியில் படித்து, தமிழில் எழுதும் எழுத்தாளர்.அவர் தான், மயில்சாமி அண்ணாதுரை. அவரிடம் பேசியதில் இருந்து…;


உங்களின் இளமை கால வாசிப்பு பற்றி?

என் அப்பா, தலைமை ஆசிரியர். நான் சிறு வயதில், படிக்க வேண்டும் என்பதற்காக, என் முன்னால் அமர்ந்து, 'அம்புலி மாமா' கதைகளைப் படிப்பார்.அதில் ஈர்க்கப்பட்டு, நானும் வாசிக்கத் துவங்கினேன். 10 வயதுக்குள் செய்தித்தாள்களைப் படித்து, நாட்டு நடப்புகளை அறிய பழக்கினார்.பின், திருக்குறள், பாரதி கவிதைகள், க.நா.சு., இந்திரா பார்த்தசாரதி போன்றோர் அறிமுகமாயினர்.தொடர்ந்து, பொது நுாலகங்களுக்கு செல்லத் துவங்கினேன்.


வீட்டிற்கும், நுாலகத்துக்கும் என்ன வேறுபாடு?

நுாலகத்தில், 'நவ் இந்தியா' உள்ளிட்ட நாளேடுகளை பார்க்க முடிந்தது. அங்கு தான், ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட அறிவியல் புத்தகங்கள் அறிமுகமாயின.அமெரிக்க எழுத்தாளர்களுக்கும், ரஷ்ய எழுத்தாளர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிந்தன. இந்த வாசிப்பு தான், விண்வெளி ஆய்வு நிறுவன பணி வரை அழைத்துச் சென்றது.என் ஆர்வத்தை துாண்டும் வகையில், கற்பனை கலக்காத செயல்முறை அறிவியலை, ரஷ்ய எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தினர்.


எல்லா இடங்களிலும் திருக்குறளை மேற்கோள் காட்ட காரணம்?

'சந்திரயான்' திட்டத்தை உருவாக்கியபோது, ஏற்கனவே, 69 முறை, அங்கு சென்றும் ஒன்றுமில்லை. நாம் ஏன் அங்கு செல்ல வேண்டும்' என, சக விஞ்ஞானிகள் கேட்டனர். அதற்கு நான், 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்' என்ற திருக்குறளை கூறினேன்.அதாவது, 69 முறை, ஏன் தோற்றனர் என்ற காரணங்களை படித்ததால், அவர்கள் சென்ற வழிகளில் செல்லாமல், நிலவைச் சுற்றி செல்ல புது வழியைத் தீர்மானித்தோம். ஆளில்லா விண்கலம் அமைத்து, நிலவில் நீர் இருப்பதை அறிந்தோம். உலகில், முதல் முயற்சியில், இதை செய்தது இந்தியா தான். அதற்கான நம்பிக்கையை தந்தது திருக்குறள்.


ஆய்வு பணிகளுக்கு இடையில், எப்படி எழுத முடிந்தது?

சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றதும், என் வாழ்க்கை, இஸ்ரோ பயணம் பற்றி, 'கையருகே நிலா' என்ற தொடர் கட்டுரை எழுதினேன்.தொடர்ந்து, 'மங்கல்யான்' திட்டப்பணி, ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியது முதல், அது பற்றிய தொடர் கட்டுரைகளை எழுதினேன். இதற்கு முக்கிய காரணம், தமிழில், உண்மையான அறிவியலை எழுத வேண்டும் என்ற முடிவு தான்.


ஜனாதிபதி கலாமுக்கு பின், மாணவர்களுடன் உரையாடும் விஞ்ஞானி நீங்கள் தான்.இந்த முயற்சி எதற்காக?

'விண்வெளி ஆய்வுக்காக, இந்தியா, நிறைய செலவு செய்கிறது. அது, மக்கள் பணம். அவர்களுக்கு நாம், நிறைய திருப்பி செய்ய வேண்டும்' என, கலாம், அடிக்கடி சொல்வார்.அரசு பள்ளியில், தமிழ் வழியில் படித்தவன். என்னைப் போல் படிக்கும் மாணவர்களுக்கு, நான் சென்ற வழியைக் காட்ட வேண்டியது என் கடமை. அது மட்டுமல்ல. மாணவர்களின் அறிவுக்கூர்மை, அவர்களின் அறிவியல் உபகரணங்களிலும், கேள்விகளிலும் வெளிப்படுகிறது. அதை, சீர்படுத்த, இது வாய்ப்பளிக்கிறது.


தமிழில், அறிவியல் சார்ந்த நுால்கள் திருப்தி அளிக்கிறதா?

திருப்தி என்றால், நம்மால் வளர முடியாது. சிலர் முயற்சிக்கின்றனர். இன்னும் நிறைய எழுதப்பட வேண்டும்.


இஸ்ரோவின் அடுத்த திட்டம்?

விமானம், கப்பல், போர் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை, பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் மாற்றி அமைப்பது, வளரும் மக்கள் தொகைக்கேற்ப, விவசாயப் புரட்சியில் உதவுவது, நோய்களைக் களைவது என, அறிவியலை பரவலாக்குவது தான்.


இந்திய அறிவியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

வளர்ந்த, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே, கொரோனா வைரசால் குலைந்து கிடக்கும்போது, நாம், தடுப்பூசியைக் கண்டறிந்து, அவர்களுக்கு அனுப்புகிறோம். இவ்வளவு மக்கள் தொகையுள்ள நாடு, இதைச் செய்வது சாத்தியமல்ல. நம் மக்கள், சுய ஒழுக்கத்தாலும், அரசை மதிக்கும் பண்பாலும், கொடிய நோயை விரட்டிவிட்டோம்.இனி, இந்தியாவை அறிவியல் மட்டுமின்றி, எல்லா துறைகளிலும், உலகம் உற்று நோக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X