கோபன்ஹேகன் : ரத்தம் உறைதல் பிரச்னை காரணமாக, சில ஐரோப்பிய நாடுகளில், 'ஆஸ்ட்ரஜெனகா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளன.உலகம் முழுவதும், 190க்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12 கோடியை நெருங்குகிறது.இதற்கிடையே, வைரசுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.சில ஐரோப்பிய நாடுகளில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியை, மக்களுக்கு போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்ட சிலருக்கு, ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டென்மார்க்கில், இந்த பிரச்னையை சுட்டிக்காட்டி, அடுத்த இரண்டு வாரங்களுக்கு, தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு, ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இது குறித்து, டென்மார்க் சுகாதாரத் துறை அமைச்சர் மாக்னஸ் ஹியுனிக் கூறுகையில், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முழு ஆய்வுக்குப் பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இதேபோல், ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வேயிலும் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.