சென்னை : ''தற்போது, ஊழல் கோட்டை யாக கொங்கு மாறியிருக்கிறது; அதை மாற்றியமைக்கவே, கோவையில் போட்டியிடுகிறேன்,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறினார். கமலின் மக்கள் நீதி மய்யத்தின், 42 பேர் இடம் பெற்ற, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. புதுச்சேரிக்கான, 18 வேட்பாளர்களையும் கமல் அறிவித்தார். கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளராக, டாக்டர் சுபா சார்லஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில், கமல் போட்டியிடுகிறார்.பின், கமல் பேசியதாவது: எங்கள் வேட்பாளர்களின் தகுதியே, அவர்கள் ஏற்கனவே செய்த சாதனைகள் தான். எங்கள் வேட்பாளர்களை, அன்பு பரிசாக தமிழகத்திற்கு தருகிறேன். காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்திற்காக அடியெடுத்து வைத்த அதேநாளில், நானும் அடியெடுத்து வைத்துள்ளேன்.அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது கடமை என, வந்துள்ளேன். பெரிய மாற்றத்தை நேர்மையானவர்கள் தான் கொண்டு வந்துள்ளனர்.
அவர்கள் முதலில் எள்ளி நகையாடப்பட்டவர்களே. தமிழகமே எனக்கு பிடிக்கும் என்றாலும், கோவை எனக்கு மிகவும் நெருக்கமாக பிடித்த ஊர். கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும் என்பர். ஆனால், ஊழல் கோட்டையாக கொங்கு மாறியிருக்கிறது. அதை மாற்றிஅமைக்க, அங்கு செல்கிறேன்.'அரசியலை மனதில் வைத்துக் கொள்' என, தந்தை கூறுவார். அவரது ஆசை நான் ஐ.ஏ.எஸ்., படித்து, அரசியலுக்கு வர வேண்டும் என்பது தான்; என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், நான் அரசியலுக்கு வந்து விட்டேன். என் கட்சியில் ஐ.ஏ.எஸ்., படித்தவர்கள் நிறைய வந்துள்ளனர். இவ்வாறு கமல் பேசினார்.
புதுச்சேரியில் யார் யார்?
மக்கள் நீதி மய்யம் சார்பில், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களில், முதற்கட்டமாக, 18 பேரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விபரம்: திருப்புவனை - ரமேஷ்; வில்லியனுார் - பானுமதி; ஒழுக்கரை - பழனிவேலன்; கதிர்காமம் - சதானந்தம்; இந்திராநகர் - சக்திவேல்; தட்டான்சாவடி - ராஜேந்திரன்; காமராஜ் நகர் - லெனின்; லாஸ்பேட் - சத்தியமூர்த்தி; காலாபேட் - சந்திரமோகன்; ராஜ்பவன் - பர்வத வர்தினி; ஒப்பளம் - சந்தோஷ்குமார்; ஓர்லம்பெட் - சக்திவேல்; நெல்லிதோப்பு - முருகேசன்; முதலியார்பேட்டை - ஹரிகிருஷ்ணன்; அரியன்குப்பம் - ருத்ரகுமார்; எம்பலம் - சோம்நாத்; நெட்டபாக்கம் - ஞானஒளி; நெடுங்காடு - நரசிம்மன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE