ஓசூர் ''மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால், நாசமாகத்தான் போவீர்கள்,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டில், நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீதா லட்சுமியை ஆதரித்து அவர் பேசியதாவது:கழக ஆட்சிகளை, கட்சிகளை முழுதுமாக அப்புறப்படுத்தாமல், நாட்டு மக்களை வாழ வைக்க முடியாது. தமிழக அரசிற்கு உள்ள, 6 லட்சம் கோடி கடனை யார் தள்ளுபடி செய்வது என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடு டென்மார்க். அதற்கு காரணம் வெளிப்படை நிர்வாகம்; அதேபோல், தமிழகத்திலும் வெளிப்படை நிர்வாகத்தை கொடுக்க விரும்புகிறோம்.
கல்வியில் சிறந்த நாடாக தென்கொரியா உள்ளது. அந்த நாட்டை தாண்டி, தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். தரமான கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குவோம். கல்வி, மருத்துவம், குடிநீர் வினியோகம் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து உள்ளது, இப்போதைய ஆட்சி யாளர்களின் பொருளாதார கொள்கை முடிவு.
முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.பி., அரசு அதிகாரிகள் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் என, சட்டம் கொண்டு வருவோம். எங்களை நம்பி, ஓட்டு போட்டால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியன் என்றால் நாசமாக போவீர்கள். இவ்வாறு, அவர் பேசினார்.