எங்களைப் பொறுத்தவரை யாரும் எதிரி கிடையாது. அரசியல் ரீதியாக, தி.மு.க.,வையும், கொள்கை ரீதியாக, பா.ஜ.,வையும் தோற்கடிக்க விரும்புகிறேன். 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், நான் தான், மாநிலத்தில் ஆட்சியமைப்பேன்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
'அப்போ, 2026ல் நீங்கள் தான் முதல்வர்; துணை முதல்வர் வேல்முருகன்; ஒருங்கிணைப்பாளர் திருமாவளவனாக்கும்...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
தமிழகத்தில் மிகப் பெரிய சமுதாயமாக இருக்கும் எங்களின் நாடார் சமுதாயத்திற்கு உரிய அரசியல் அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், எங்கள் பலத்தை காட்டவும் தான், தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறோம்.
- பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார்
'அதற்காக, நான்கைந்து கிலோ தங்க நகைகளை உடலில் போட்டுக் கொண்டால் மட்டும் போதுமா; காங்., ராகுலுக்கு புரியும் வகையில், ஆங்கிலத்தில் பேச வேண்டாமா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் பேட்டி.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலால் காயமடைந்து சிகிச்சை பெறும் அவரை தொடர்பு கொண்டு, குணமடைய வாழ்த்தினேன்.
- பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி

'அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதே மர்மமாக உள்ளது. அதற்குள், குணமடைய வாழ்த்து தெரிவித்து விட்டீர்களா; பா.ஜ., மீது கடும் அதிருப்தியில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி அறிக்கை.
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் போல எங்களுக்கும் மாத ஊதியம் வழங்கும் கட்சிக்கு, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்க உள்ளோம். அந்த கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம்.
- ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர் முனியாண்டி
'எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது, உங்களுக்கும் கொடுக்கத் தான் வேண்டும்...' என, ஆதரவு தெரிவிக்கத் தோன்றும் வகையில், ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர் முனியாண்டி பேட்டி.
சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப் போகிறதா... இல்லை, டில்லி அரசியலில் தான் மாற்றம் வரப் போகிறதா... 20, 25 இடங்களுக்காக காங்கிரஸ் இப்படி, தி.மு.க., பின் ஓடத் தான் வேண்டுமா?
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பழ.கருப்பையா
'உங்கள் கட்சிக்கு வந்திருந்தால், 50 - 75 கொடுத்திருப்பீர்கள்; ஏனெனில், சரத்குமார் கட்சிக்கே, 40 இடங்கள் கொடுத்தவர்கள் ஆயிற்றே...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பழ.கருப்பையா பேட்டி.