கோவை: கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடுவார் என வெளியான அறிவிப்பு, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல், மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியதும் சந்தித்த முதல் தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் தான். இதில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், 1,45,082 ஓட்டுகளை பெற்று, பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தார்.கோவை தெற்கு- 23838, கோவை வடக்கு -27549, சிங்காநல்லுார் -28634, கவுண்டம்பாளையம் 33594, சூலுார் -15196, பல்லடம் 15997 என்ற அளவில், கமல் கட்சிக்கு ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.
குறிப்பாக, நகர்ப்புற குடியிருப்புகள் மிகுந்த கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் கமல் கட்சி வாங்கிய ஓட்டுக்கள், தி.மு.க.,- அ.தி.மு.க.,வினரை எட்டிப்பிடிப்பது போல் இருந்தன.அந்த வாய்ப்பை விடக்கூடாது என்று எண்ணியகமலும், இந்த சட்டசபை தேர்தலில், கோவையில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.
அவர் தேர்வு செய்திருக்கும் கோவை தெற்கு தொகுதியில், இந்த முறை அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ போட்டியிடவில்லை. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., - காங்., கட்சிகளே இங்கு மோதுகின்றன. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவே, கமல் இங்கு போட்டியிடுவதாக, அரசியல் கட்சியினர் கருதுகின்றனர்.
கோவையில் கமல் நேரடியாக தேர்தல் களம் இறங்குவதை சற்றும் எதிர்பாராத தி.மு.க.,- அ.தி.மு.க.,வினர், பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.ஏனெனில், கமல் போட்டியிடும் தொகுதி மட்டுமின்றி, அருகேயுள்ள மற்ற தொகுதிகளிலும், அதன் தாக்கம் இருக்குமே என்பது அவர்களது பிரதான கவலையாக இருக்கிறது.

அ.தி.மு.க., கூட்டணியில் இந்த தொகுதியை வற்புறுத்தி கேட்டு வாங்கிய பா.ஜ.,- தி.மு.க., கூட்டணியில் இந்த தொகுதியை போராடி வாங்கிய காங்கிரஸ் கட்சிகளின் நிலைமை, தர்ம சங்கடத்தில் இருக்கிறது.உள்ளூர் அ.தி.மு.க.,வினர் அதிருப்தியை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பா.ஜ., தரப்பினர் பாடு இன்னும் திண்டாட்டம் ஆகியுள்ளது. அதேபோல, தங்களுக்கு விழ வேண்டிய, அரசுக்கு எதிரான ஓட்டுக்கள் எல்லாம், கமலுக்கு சென்று விட வாய்ப்புள்ளது என்பதால், காங்கிரஸ் கட்சியினரும் அச்சம் அடைந்துள்ளனர்.