கோவை:சட்டசபை தேர்தலில் போட்டியிட கூடிய வேட்பாளர், கடந்த, 5 வருட வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல், நேற்று துவங்கியது. போட்டியிட விரும்பி, கட்சி தலைமையில் விருப்ப மனு கொடுத்தவர்கள், ஆர்வமுடன் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றவர்கள், அவற்றில் கேட்கப்பட்ட கேள்விகளை படித்து, அரண்டு போயுள்ளனர். வேட்பாளரின் மொபைல் போன் எண், இ-மெயில் முகவரி, சமூக வலைதள கணக்கு விவரம், வருமான வரி கணக்கு எண் மற்றும் கடந்த, 5 ஆண்டுகளில் காட்டப்பட்ட கணக்குப்படி, மொத்த வருமானம் போன்ற தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
அசையும்/ அசையாச் சொத்துகள் பட்டியலில், வழக்கமாக, கார், பைக், தங்க நகைகள், நிலம், வீடு இருக்கிறதா; அதில், விமானம், படகுகள், கப்பல்கள் இருந்தால், தயாரிப்பு தேதி மற்றும் வாங்கப்பட்ட ஆண்டு மற்றும் தொகையுடன் குறிப்பிட வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமென, கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மற்றும் தேர்தல் செலவின கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என, தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் என, 30 பக்க பட்டியலை, இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்வது, வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது, செலவின கணக்குகளை தணிக்கை செய்வதற்கு, குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.80 வயதுக்கு மேற்பட்டவர்கள்/ மாற்றுத்திறனாளிகள்/ கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படுகிறது. அவர்கள் வீட்டுக்குச் சென்று, 12டி படிவம் வழங்கப்படுகிறது. இசைவு கடிதம் தந்தால், அவர்களுக்கு தபால் ஓட்டு கொடுத்து, பெறப்படும். தபால் ஓட்டு பதிவு செய்தவர்கள், ஓட்டுச்சாவடிக்கு வரக்கூடாது என்பதற்காக, வாக்காளர் பட்டியலில் ரவுண்ட் செய்து, தனி அடையாளமிடப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.