சென்னை : சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக., சார்பில் தேர்தல் அறிக்கை இன்று(மார்ச் 13) வெளியிடப்பட்டது. திமுக., தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என குறிப்பிட்டார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அவரின் தேர்தல் அறிக்கை டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் சில அதிருப்திகள் நிலவினாலும் கட்சியினர் தேர்தல் பணிகளில் பிஸியாக உள்ளனர். திமுக., தனது தேர்தல் அறிக்கையை இன்று(மார்ச் 13) வெளியிட்டது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திமுக., தேர்தல் அறிக்கையை வெளியிட, பொதுச் செயலாளர் துரை முருகன் பெற்றுக் கொண்டார்.
ஸ்டாலின் பேசும்போது : பொதுவாக திமுக.,வின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று கூறுவார்கள். நேற்று வேட்பாளர் பட்டியலையே பலரும் கதாநாயகன் என கூறுகின்றனர். தேர்தல் அறிக்கை மூலம் 2வது கதாநாயகனை வெளியிடுகிறேன். 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள், வாக்குறுதிகளாக உள்ளது. அதில் முக்கியமான சிலவற்றை இங்கு வெளியிடுகிறோம் என்றார்.

முக்கிய அறிவிப்புகள் : ஊழல் அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம். முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்ட உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்தப்படும். மகளிர் பேறு கால விடுமுறை 12 மாதமாக அதிகரிக்கப்படும். கொரோனா காலநிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3, பெட்ரோல் விலை ரூ.5 , டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும். காஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும். ரேசன் கடைகளில் கூடுதலாக 1 கிலோ சர்க்கரை. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு வழங்க சட்டம். திருக்குறள் தேசிய நூலாக்க நடவடிக்கை. மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி. முதியவர்களுக்கான பென்சன் தொகை ரூ.1500ஆக உயர்த்தப்படும். 500 இடங்களில் கலைஞர் உணவம். புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும். பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை நேரம் பால் வழங்கப்படும். அரசு உள்ளூர் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
திமுக., தேர்தல் அறிக்கை வெளியான சற்றுநேரத்திலேயே டுவிட்டரில் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது. முக்கியமான பல அறிவிப்புகளை பட்டியலிட்டு டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர். குறிப்பாக நீட், தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75 சதவீதம் பணி வாய்ப்பு, பேறுகால விடுமுறை ஓராண்டு, பெண்களுக்கு பஸ் பயணம் இலவம், மாணவர்களுக்கான கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட அம்சங்களை வரவேற்று டிரெண்ட் செய்தனர். இதுதொடர்பாக #திமுகதேர்தல்அறிக்கை2021 என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள் இங்கே....

* இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், ஆண்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரையும் குறிவைத்து இந்த தேர்தல் அறிக்கை தரப்பட்டுள்ளது. நிச்சயம் இவர்கள் அனைவரின் ஓட்டும் திமுக.,விற்கு கிடைக்கும்.
* தனியார் தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் தமிழர்களுக்கு என திமுக., அறிவித்துள்ளது. இதற்காக தான் திமுக., வேண்டும்.
* சென்னையில் பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைத்து உயர் தர பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது சாத்தியமானால் இது சென்னை இந்தியாவின் 'விளையாட்டு நகரமாக' சென்னை திகழும். மேலும் எந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வும் இங்கு நடைபெறும்.
* கோயில்களுக்கு ரூ.1000 கோடி, மசூதி, சர்ச்சுகளுக்கு தலா ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். திமுக.,வை இந்து விரோதி என கூறுபவர்களுக்கு இந்த அறிக்கை ஒரு சாட்டையடி.
* நிறைய ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். திமுக.., தேர்தல் அறிக்கை கதாநாயகன் தான்.

* இலவசங்கள் இல்லாமல் நல்ல முயற்சி. குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு. வாழ்த்துக்கள். கதாநாயகன் என்று சொல்ல முடியாது. ஆனால் பல திட்டங்களை வரவேற்கிறேன்.
* உள்ளூர் நகர அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்பது திமுக வாக்குறுதிகளில் ஒன்று. இது செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருக்கும். பயணம் செய்யத் தயங்கும் பல பெண்களுக்கு இது உதவும். நிறைய வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரும்.
* திமுக.,வின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. ஏற்கனவே அதிமுக., அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள பல திட்டங்களை அப்படியே காப்பியடித்து வேறு ஒரு பெயரில் வெளியிட்டுள்ளனர்.
* தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்குவதாக திமுக உறுதியளித்துள்ளது. ஆனால் அவர்களின் தேர்தல் ஆலோசகராக பீஹாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோருக்கு வழங்கினர். முதலில் உங்கள் கருத்துக்களை உங்கள் கட்சியில் செயல்படுத்துங்கள். பின்னர் மாநிலத்தில் செயல்படுத்தலாம்.
* அதிமுக அலுவலகத்தில் இருந்து சுமார் 1000 பிரதியெடுக்கும் மெஷின்களை ஆர்டர் கொடுத்து உள்ளார்கள் என்று தகவல். விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை பிரதி எடுத்து வெளியிடுவார்கள் என்று உளவுத்துறை மூலம் செய்தி.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE