நம் நாட்டில் நடத்தப்படும் தேர்தல்களில், 30 ஆண்டுகளுக்கு முன், தற்போதுள்ள கெடுபிடிகள் எதுவும் கிடையாது; வேட்பாளர் செலவு உச்ச வரம்பெல்லாம் இல்லவே இல்லை.
அதுபோல, மனு தாக்கலின்போது, நால்வர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது எல்லாம், மூச்... பேசவே படாது. படை, பட்டாளங்கோடு சென்று, அதிகாரிகள் தோள் மீது தொற்றியபடி கூட மனு தாக்கல் செய்வர்.பிரசாரத்திலும் கேட்கவே வேண்டாம்... நம் அரசியல்வாதிகள் பகல் முழுதும் துாங்கி ஓய்வெடுத்து, இரவு, 7:00 மணிக்கு மேல் தான், 'புல் மேக்கப்'புடன் சாவகாசமாக பிரசாரத்தையே ஆரம்பிப்பர்.
ஒத்துழைப்பு
விடிய விடிய, ஏன் சில நேரம், விடிந்த பிறகும் கூட ஊர், ஊராக சென்று, கொள்கை முழக்கமிடுவர். என் சிறு பிராயத்தில், 'எம்.ஜி.ஆர்., இன்னைக்கு காலையில, 5:00 மணிக்கு இங்க பிரசாரம் பண்ணிட்டு போனாரு... கருணாநிதி காலையில், 3:00 மணிக்கு வந்தாரு' என, பெருசுகள் பேசிக் கொள்வதை கேட்டுள்ளேன். ராத்திரி, 10:00 மணியை தாண்டி, ஒரு நிமிடமானாலும் பிரசாரம் செய்யக் கூடாது; செய்தால் வழக்கு பதிவு என்பதெல்லாம் அப்போது இல்லை.
இந்த சூழலில் தான், தேர்தல் வானில் விடிவெள்ளியாக வந்தார், டி.என்.சேஷன்.
ஆம், 1990 டிச., 12ல், தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்றவர், 1996 டிசம்பர், 11 வரை, முழுதாக ஐந்தாண்டுகள் அப்பதவியில் இருந்தார்.நம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அவர், நாடு முழுதும், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். அவர் வந்த பின் தான், தேர்தல் கமிஷன் என, ஒன்று இருக்கிறது; அதற்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்பதே, நம் பாமர மக்களுக்கு புரிய வந்தது.
அவரும், தேர்தல் கமிஷனின் அதிகாரங்களை முழு வீச்சில் செயல்படுத்த,களத்தில் இறங்கினார். ஆரம்பத்தில், கீழ்மட்ட அரசு இயந்திரங்கள், அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால், சேஷன் காட்டிய கறார், அவரது அசாத்திய நேர்மை காரணமாக, துருப்பிடித்த அந்த அரசு இயந்திரங்கள், நாளடைவில் நெகிழ்ந்து கொடுக்க துவங்கின.சேஷன் பதவியேற்றதுமே, இரவு, 10:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய தடை என்ற உத்தரவை, கீழ்மட்ட அரசு அதிகாரிகள் அமல்படுத்தி இருந்தால், முன்னாள் பிரதமர் ராஜிவை நாம் இழந்திருக்க மாட்டோம்.
ஆம், 1991 மே 21ல், ஸ்ரீபெரும்புதுாரில் நடக்கவிருந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ராஜிவ், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டது, சரியாக இரவு, 10:10. அப்போது மட்டும், 10:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற விதி, கடுமையாக அமலில் இருந்திருந்தால், அங்கு ராஜிவ் போயிருக்கவே மாட்டார்; அவரது விதியும் மாறியிருக்கும்.
சேஷனின் அதிரடிகளால் மிரண்டு போன,அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய காங்., அரசு, அவருக்கு கடிவாளம் போட முனைந்தது. இதற்காக, தேர்தல் கமிஷனில், கூடுதலாக இரண்டு கமிஷனர் பதவிகளை உருவாக்கி, அதில் இருவரது முடிவை ஏற்க வேண்டும் என, 'செக்' வைத்தது. ஆரம்பத்தில், இதை ஏற்க மறுத்த சேஷன், அதன்பின் ஏற்றுக் கொண்டார்.
அன்று, சேஷன் அமல்படுத்திய தேர்தல் கமிஷன் விதிகள், பல்வேறு கால கட்டங்களில் மேலும் மேலும் மெருகேற்றப்பட்டு, தற்போது வரை தேர்தலில் அமல்படுத்தப்படுகின்றன. ஆனால், அதில் பல்வேறு அனர்த்தங்களும், அபத்தங்களும் மிகுந்திருப்பதை சுட்டிக்காட்டியே தீர வேண்டும்.முதலில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள், ஆவணமின்றி எடுத்துச் சென்றால், பறிமுதல் செய்கின்றனர்.இன்றைய சூழலில், நகரத்தில் உள்ள, ஒரு சாதாரண பெட்டிக்கடை வியாபாரி கூட, சரக்கு வாங்க, 50 ஆயிரம் ரூபாய் எடுத்து செல்வது சகஜம்.
நிபந்தனை
கறிக்கடை வைத்திருப்பவர் ஆடுகள் வாங்க, சில லட்சம் ரூபாயை, சர்வ சாதாரணமாக இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வார்.வங்கியில் இருந்து எடுத்து சென்றால், ரசீது காட்ட முடியும். அது அல்லாமல், நண்பரிடம் கடனாகவோ, கைமாற்றாகவோ, சேர்த்து வைத்த பணத்தை எடுத்துச் சென்று, சரக்கு வாங்க செல்லலாம். இதற்கு எந்த ஆவணம் வைத்திருக்க முடியும்?
இந்த இடத்தில், இன்னொரு சம்பவத்தை உதாரணம் காட்ட வேண்டும். சமீபத்தில், திருச்சியில் நடந்த, தி.மு.க.,வின் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு, 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை அலுவலக பதவியில் இருக்கும் ஒருவர், தான் கோலோச்சும் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர நிர்வாகிகளை அழைத்து, தலைக்கு, 20 லட்சம் வழங்கி, 'கூட்டத்தை திரட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு' என, நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த, 20 லட்சமும், மொத்த செலவான, 15 கோடி ரூபாயும், வான் வழியாக பறந்தோ, பாதாளம் வழியாக பாய்ந்தோ செல்லவில்லை; வாகனங்களில், சாலை மார்க்கமாகவே பயணித்துள்ளது. சில ஆயிரங்களை, ஓடி ஓடி பிடிக்கும் நம் பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் கண்களுக்கு, இந்த கோடிகள் தென்படாமல் போனது எப்படி?
இன்னும் சொல்லப் போனால், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் என, தனியாக யாரும் இல்லை; வழக்கமான நம் அரசு துறை அதிகாரிகள் தான், இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு தொகுதிகளுக்கும், இரு கழகத்தினரும் கோடி கோடியாக கொட்டத் தான் போகின்றனர். அவற்றை தடுக்க, தேர்தல் அதிகாரிகள் என்ன திட்டம் வைத்துள்ளனர்?
இதேபோல, சிறு சிறு தங்க, வெள்ளி நகை வியாபாரிகள் கொண்டு செல்லும் நகைகளை பறிமுதல் செய்வதால், அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே, கொரோனா கொடூரத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சிறு, குறு தொழில் முனைவோர், அவர்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சொல்ல முடி யாத இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
தேர்தல் கமிஷனின் மற்றொரு அபத்தமான நடைமுறை, கட்சித் தலைவர்களின் சிலைகள், பெயர்களை மறைப்பது.
தடை விதிக்க வேண்டும்
தலைவர்கள் சிலைகள், அவர்களது பெயர்களை பார்த்து, ஓட்டளிக்கும் வாக்காளர் மனநிலை மாறி விடும் என, கணிப்பது சிறுபிள்ளைத்தனமானது.அப்படி பார்த்தால், அரசியல் கட்சிகள் வைத்துள்ள நடிகர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள், பாடல்கள், தினமும், 'டிவி'க்களில் ஒளிபரப்பாகிய வண்ணம் தான் இருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும் வாக்காளர் மனம் மாறிவிட மாட்டாரா?
அப்படி என்றால், தேர்தல் முடியும் வரை, 'டிவி'க்களில் சினிமா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பக் கூடாது என்று தான் தடை விதிக்க வேண்டும். அதிலும், தலைவர்கள் சிலைகளை மறைப்பதில், நம் அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் செய்யும், 'காமெடி'களுக்கு அளவே இல்லை. தேசத்தந்தை மஹாத்மா காந்தியை, இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தக்காரராகவே பார்க்கும் நம் அரசு ஊழியர்கள், அவரது சிலையை துணி போட்டு மூடியதும், படங்களை அழித்ததும், செய்திகளாக வெளிவந்ததை நாம் பார்த்தோம்.இது தவறு என சுட்டிக்காட்டப்பட்டதும், மீண்டும் காந்தியின் படங்கள் வரையப்பட்டன. இதில், எவ்வளவு மனித உழைப்பு வீணானது என, யோசிப்பார் யாருமில்லை.
அதேபோல, வேலுார் பக்கம் ஒரு ஊரில், எம்.ஜி.ஆர்., சிலையை துணியால் கட்டி வைக்க, அங்கு, தி.மு.க.,வினர் வெடித்த பட்டாசு நெருப்பு பட்டு, துணியுடன் சேர்ந்து, எம்.ஜி.ஆர்., சிலையும் எரிந்தது. இதனால், இரு கழகத்தினரும் முட்டி மோதிக் கொள்ள, சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக இருந்ததை, நல்லவேளையாக போலீசார் தலையிட்டு, சமாதானம் செய்தனர்.
அதேபோல, முன்பெல்லாம் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அதிகாரிகள் எழுந்து நின்று வாங்குவது மரபு.அதிலும், சிலர் சர்ச்சையை கிளப்ப, 'இனி எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அதிகாரிகள் அமர்ந்தபடியே தான் மனு வாங்க வேண்டும்' எனக் கூறி விட்டனர்.திருமண பத்திரிகை உட்பட எதை ஒன்றை யார் கொடுத்தாலும், அதை எழுந்து நின்று வாங்குவது தான் அடிப்படை நாகரிகம். ஆனால், மனு தாக்கலின் போது, 70 - 80 முதியவர்கள் தந்தாலும், 40 வயது அதிகாரிகள் அமர்ந்தபடியே அதை வாங்குவது என்பது, அநாகரிகம்.
ஒரு மனுவை எழுந்து நின்று வாங்கினாலே, அந்த வேட்பாளருக்கு அதிகாரி சாதகமானவர் என, முடிவு செய்யக்கூடாது. எந்த கட்சியோ, எந்த வேட்பாளரோ மனு கொடுத்தாலும், எழுந்து நின்று தான் வாங்க வேண்டும் என, விதிகளில் மாற்றம் கொண்டு வரலாமே!தேர்தல் கமிஷன் விதிகள் என்பது, பாரபட்சமற்ற, நேர்மையான, வெளிப்படையான தேர்தலை நடத்த வேண்டும் என்றே வகுக்கப்பட்டு உள்ளன; அதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால், சட்டசபை தேர்தலில் ஒரு வேட்பாளர், 30.8 லட்சம் ரூபாயும், லோக்சபா தேர்தலில், 77 லட்சம் ரூபாயும் தான் செலவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
சிந்திக்க வேண்டும்
ஆனால், நிஜமான கள நிலவரம் என்னவாக இருக்கிறது... பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் இந்த தொகையை தான் செலவு செய்கின்றனரா... சீட் வழங்க நேர்காணல் நடக்கும்போதே, 'எத்தனை கோடிகள் செலவு செய்ய முடியும்' என்ற கேள்வி தானே முதலாவதாக கேட்கப்படுகிறது.
இதற்கு, கம்யூ., கட்சி கள் கூட விதிவிலக்கு இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில், இரண்டு, எம்.பி., சீட்களும், தேர்தல் செலவுக்கு, 15 கோடியும், தி.மு.க.,விடம் வாங்கிய, 'காம்ரேட்'களின் கதை தான் அனைவருக்கும் தெரியுமே. இதை எல்லாம், தேர்தல் கமிஷன் விதிகளால் தடுக்க முடியவில்லையே.ஆகவே, தேர்தல் கமிஷன் விதிகள் என்பது, சாமானிய, நடுத்தர மக்களை பாதிக்காமல் அமல்படுத்த வேண்டும்.
திமிங்கலங்களையும், சுறாக்களையும் தப்ப விட்டுவிட்டு, சிறு சிறு அயிரை மீன்களை மட்டும் பிடித்து, கணக்கு காட்டி, தேர்தலை, 100 சதவீத வெளிப்படை தன்மையுடன் நடத்துகிறோம் என்பது, ஏற்க முடியாத கருத்து. தேர்தல் ஆணையம் இது குறித்து சிந்திக்க வேண்டும்!
எஸ்.ஜெயசங்கர நாராயணன்,
பத்திரிகையாளர்.
தொடர்புக்கு:'இ - மெயில்' முகவரி: jeyes1974@gmail.com