என்ன விலை வடக்கே... சொன்ன விலைக்கு வாங்க வரவா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'என்ன விலை வடக்கே... சொன்ன விலைக்கு வாங்க வரவா'

Added : மார் 16, 2021
Share
மதுரை வடக்கு தொகுதிக்கும், 'சென்டிமென்ட்' இருக்கு. அதாவது, இந்தத் தொகுதிக்கு, ஆளும் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலோ அல்லது அறிவிப்பதற்கு முன்னரோ, அவர் மாற்றப்பட்டு விடுவார்.கடந்த, தேர்தலில், எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி, எம்.எஸ்.பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேயராக இருந்த, ராஜன் செல்லப்பாவிற்கு, 'சீட்' கிடைக்கவில்லை. அவர், சசிகலா தரப்பை சந்தித்து,

மதுரை வடக்கு தொகுதிக்கும், 'சென்டிமென்ட்' இருக்கு. அதாவது, இந்தத் தொகுதிக்கு, ஆளும் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலோ அல்லது அறிவிப்பதற்கு முன்னரோ, அவர் மாற்றப்பட்டு விடுவார்.

கடந்த, தேர்தலில், எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி, எம்.எஸ்.பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேயராக இருந்த, ராஜன் செல்லப்பாவிற்கு, 'சீட்' கிடைக்கவில்லை. அவர், சசிகலா தரப்பை சந்தித்து, 'பேசி, சரிக்கட்டி' பாண்டியனுக்கு பதில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். இந்த தேர்தலில், பா.ஜ.,பொதுச் செயலர் சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்டது. அவருக்காகவே, தொகுதியை கேட்டுப் பெற்றது, பா.ஜ., ஆனால் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., சரவணனுக்கு, தி.மு.க., 'சீட்' தராததால் அதிருப்தியாகி, பா.ஜ.,வில் இணைந்தார்.

மதுரை வடக்கில் போட்டியிடும், தி.மு.க., மா.செ., தளபதி தான், 'தளபதியிடம்' போட்டுக் கொடுத்து தனக்கு 'சீட்' கிடைக்காமல் செய்தார் என்பதால், 'மதுரை வடக்கில், போட்டியிட, 'சீட்' கொடுத்தால் பா.ஜ.,வில் சேர்கிறேன்' என, பேரம் பேசி, 'டீல்' முடித்து விட்டார். பதவி பெரிதா பணம் பெரிதா பட்டிமன்றத்துல பாப்பய்யா சொன்னதெல்லாம் ஞாபகம் வருதய்யா... என்கிறார், பா.ஜ., பழைய புள்ளி.
வானதியும், ஸ்ரீநிவாசனும், தொண்டர்களும்
தி.மு.க.,விலிருந்து பா.ஜ.,வில் இணைந்த டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். தகவல் முன்கூட்டியே தெரிந்து, தொகுதி பொறுப்பாளராக இருந்த மாநில பொதுச் செயலர், ஸ்ரீநிவாசனுக்கு ஒதுக்க கோரி, பா.ஜ., நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அந்த நேரத்தில், பா.ஜ., பட்டியல் வெளியானது. கோவை தெற்கு வேட்பாளராக வானதி சீனிவாசன் பெயர் அறிவிக்கப்பட்டது. முந்திரிக் கொட்டை தொண்டர் ஒருத்தர் ஓடிவந்து, 'சீனிவாசன் பேர் அறிவிச்சாச்சு..!' என பெருங்குரலில் தெரிவிக்க, மொத்தக் கூட்டமும் உற்சாகமாக குரல் எழுப்பி தேர்தல் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

ஸ்ரீநிவாசன் இல்லை, சீனிவாசன் என்பது அங்கே தெரிந்ததும், உற்சாகம் நொடியில் வடிந்தது. தொங்கிய முகத்துடன் வெளியில் வந்து மீண்டும் கோஷமிட்டனர். 'அரைகுறையாய் செய்திகளை கேட்க வேண்டாம்'னு உலகநாதன் சொன்னதை படிக்கலை போல.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X