'என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே...' என, உச்சரித்து விட்டு, சில வினாடிகள் நிறுத்துவார் கருணாநிதி; தொண்டர்களின் கரகோஷத்துக்காக அந்த இடைவெளி. 'என் ரத்தத்தின் ரத்தங்களே..' என்று எம்.ஜி.ஆர்., சொன்னதும் அந்த வட்டாரமே விசில், கைதட்டலில் அதிரும். அதே ஸ்டைலில், கமல் தனக்கென ஒரு டிரேட் மார்க் உருவாக்கி இருக்கிறார். .
'உயிரே... உறவே... தமிழே' என்பது அவருடைய மூன்று வார்த்தை முன்னுரை. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இடைவெளி தருகிறார். அதில் கிடைத்த கோவை மக்களின் ஆரவாரம், மய்யம் ஆட்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.
கம்யூனிசம் நாத்திகம் கலந்துபேசி வந்த கமல், தேர்தல் களத்தில் இறங்கியதும், 'நாத்திகம் என்கிற சிறு வட்டத்துக்குள் என்னை அடைத்து விட முயற்சித்தனர்' என்றார். இப்போது. அடுத்த கட்டத்துக்கு வந்திருப்பது, வெளிப்படையாக தெரிகிறது. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது, 'என்னுடைய உறவு, ஊருக்கு ஊர் இருக்கிறது' என கூறியதோடு, 'குடும்ப அரசியல் வேண்டாம்; தவிர்க்க வேண்டும் என்கிறீர்கள்; இருந்துட்டு போகட்டும் குடும்ப அரசியல். அது, என் உறவு போல் இருக்கட்டும்' என்றார். ஏதோ புரிந்தது போல் சிலர் கைதட்டினார்கள். மற்றவர்கள், அவர்களை திரும்பி பார்த்தனர்.

மனு தாக்கலுக்கு முன்பே மக்களுடன் நேரம் செலவிட்டார் கமல். விடிந்ததும், ஓட்டலில் இருந்து, தனி ஒருவனாக, நகர்வலம் புறப்பட்டார். மக்களுடன், 'வாக்கிங்' சென்றார். விரும்பியவர்களுடன், 'செல்பி' எடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர்., கோவையில் வசித்தபோது, உடற்பயிற்சி செய்த, ஜிம்முக்கு சென்ற கமல், சிலம்பம் சுற்றிய குழந்தைகளை பாராட்டியதோடு, கம்பெடுத்து ஒரு சுற்று சுற்றினார். எல்லாம், அடுத்தடுத்த நிமிடங்களில், சமூக ஊடகத்தில் வீடியோவாக பரப்பப்பட்டன.
உக்கடம் மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார். சிறு வியாபாரிகளுடன் உரையாடினார். பாலம் கட்டும் பணிகளை பார்வையிட்டார். பஸ்சில் ஏறி, பயணியருடன் உரையாடினார். ஆட்டோவில் ஏறி, ஓட்டலுக்கு திரும்பினார். டிரைவர் சிராஜுதீன் வைத்திருந்த பாக்கெட் நோட்டில், ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து, படம் எடுத்துக் கொண்டார். 'தேடி வந்து அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் கோவை மக்களின் அன்பில் நெகிழ்கிறேன்' என, பதிவிட்டார். சகலகலா வல்லவனின் ஒருநாள் ஆட்டம், எதிரணிகளில் சலசலப்பை உண்டாக்கி இருப்பது உண்மை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE