அரசியல் கட்சிகள், மக்களை ஏமாற்றுகின்றன. வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்கின்றன. அப்படி கொடுத்துவிட்டால், ஏன், 'வாஷிங் மெஷின்' கொடுக்கணும்; ஏன் வீடு கட்டித்தர வேண்டும்?
- ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
'பதவி ஆசை யாரை விட்டது... தங்கள் மதத்தில் நிறைய பேர் சேரணும்... உலகை ஆளணும்ங்கிற ஆசையில தானே, பணம் கொடுத்து, மதம் மாற வைக்கிறாங்க... அந்த ஆசையை நோக்கி போகும் வகையில் தானே, வி.ஆர்.எஸ்., கொடுத்து, கட்சி ஆரம்பிக்கிறாங்க... அதே ஆசை தான் இப்படியெல்லாம் ஆட்டி வைக்குது...' என, கூறத் தோன்றும் வகையில், அரசியலில் குதிப்பதற்காக, பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேட்டி.
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, செயற்கையானது; சுயநலன் சார்ந்தது. ஆனால், அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, இயற்கையானது; பொதுநலன் சார்ந்தது. தி.மு.க.,வின் அறிக்கை தோற்றுப் போகும்
- த.மா.கா., தலைவர் வாசன்
'இப்படி, எதுகை மோனையில் பேசினால் தான், அ.தி.மு.க.,வுக்கு பிடிக்கும் என்பதால், அந்த கட்சியை பாராட்ட, ரொம்ப கஷ்டப்பட்டு வார்த்தைகளை தேடியுள்ளீர்கள்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.
நடப்பு ஆண்டில், உலகிலேயே, மிக அதிகமாக சம்பாதித்த, உலக மகா கோடீஸ்வரர் என்ற தகுதியை, குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் எலான்மஸ்க், அமேசானின் ஜெப் பீசோஸ் போன்றவர்களை பின்னுக்கு தள்ளி, கோடீஸ்வரர் பந்தயத்தில் வெற்றி பெறுவது சாதாரணமா? பிரம்மா நினைத்தால் ஆயுளுக்குப் பஞ்சமா?
- தமிழக காங்., செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ்

'அந்த தொழிலதிபர்கள், இரவு பகலாக உழைக்கின்றனர்; முன்னேறுகின்றனர்... உங்களுக்கு ஏன் காண்டு...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.
தமிழகத்தில் அமையவிருக்கும், நாம் தமிழர் ஆட்சியில், டென்மார்க் நாட்டைப் போன்ற, ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம்; தென் கொரியா நாட்டைப் போன்ற சரியான, சமமான, தரமான, அனைவருக்குமான இலவசக் கல்வி வழங்கப்படும்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
'வட கொரியா போல, எதிர்த்து பேசினால், ஆளையே காணாமல் ஆக்கி விடுவோம் என, சொல்லாமல் விட்டீர்களே...' என, கூறத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன், அவரின் கட்சியினருக்கு மட்டுமே, முதல்வராக உள்ளார்; மக்களுக்கான முதல்வராக இல்லை. அவரது ஆட்சியை அகற்றி, பா.ஜ., ஆட்சி அமைக்கும்.
- கேரள பா.ஜ., முதல்வர் வேட்பாளர், 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன்
'இப்போது, ஒரேயொரு எம்.எல்.ஏ.,வை கொண்டுள்ள, பா.ஜ., கேரளாவில் ஆட்சி அமைத்தால், அது இமாலய சாதனையாகத் தான் இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள பா.ஜ., முதல்வர் வேட்பாளர், 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன் பேச்சு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE