சென்னை: சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2019-20 நிதியாண்டில் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது எழுத்துப்பிழை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அத்துடன், தங்களது சொத்து மதிப்பு, குற்றப்பின்னணி, நிலுவையில் உள்ள கடன் விவரங்கள், தண்டனை பெற்ற விவரங்கள் உள்ளடக்கிய பிரமாண பத்திரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வருகின்றனர்.
அவ்வாறு திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 2019 - 20ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய அசையும் சொத்தின் மதிப்பு ரூ.31,06,500, அசையா சொத்து ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவிக்கு ரூ.63,25,031 மதிப்பு அசையும் சொத்து உள்ளதாகவும், ரூ.25,30,000 மதிப்பு அசையா சொத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2019- 20 ம் நிதியாண்டில், வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சீமான், ஆயிரம் ரூபாய் வருமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது எழுத்து பிழை என தெரிவித்துள்ளார்.