திண்டுக்கல்: திமுக ஆட்சியில் ஏழைகளுக்கு நிலம் கொடுக்கவில்லை என கூறி வரும் முதல்வர் பழனிசாமி அதை நிரூபிக்க தயாரா என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நத்தம் மற்றும் வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதாவிடமே கொள்ளை அடித்தவர். இதனால், அவருக்கு நத்தம் தொகுதியை தவிர்த்து ஆத்தூர் தொகுதியை கொடுத்து தோல்வியடைய வைத்தார் ஜெ. என்னுடைய 14 வயதிலேயே எனது அரசியல் வாழ்க்கை துவங்கியது. பள்ளி மாணவர்களை திரட்டி இளைஞர் திமுக.,வை உருவாக்கி படிப்படியாக முன்னேறியுள்ளேன்.

ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் மக்களை சந்தித்த ஒரே இயக்கம் திமுக தான். தற்போது முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் உங்களை தேடி வந்துள்ளேன். முதல்வராக இருந்துக்கொண்டு பழனிசாமி தவறான, பொய்யான பிரசாரத்தை செய்து வருகிறார். கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என கருணாநிதி கொடுத்த வாக்குறுதியை பதவியேற்ற மேடையிலேயே நிறைவேற்றினார். திமுக கொடுத்த இலவச டிவி எல்லா வீடுகளிலும் உள்ளது. ஆனால் அதிமுக கொடுத்த கிரைண்டர், மிக்ஸி, பேன்கள் எல்லாம் காயலாம் கடையில் தான் இருக்கிறது.
சவால்

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் தருவதாக கூறி திமுக ஏமாற்றிவிட்டதாக முதல்வர் பழனிசாமி பொய் சொல்கிறார். நாங்கள் ஏழைகளுக்கு நிலம் கொடுத்தோம் என நான் நிரூபிக்க தயார். கொடுக்கவில்லை என நிரூபிக்க முதல்வர் தயாரா? என சவால் விடுகிறேன். 2006ம் ஆண்டு 1,89,719 ஏக்கர் நிலத்தை 1,50,159 பேருக்கு திமுக ஆட்சி வழங்கியது. 'தான் திருடி, பிறரை நம்ப மாட்டான்' என சொல்வது போல, முதல்வர் இருக்கிறார். 2016ல் கூறிய வாக்குறுதிகள் பலவற்றை அதிமுக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என கடந்த லோக்சபா தேர்தலில் கூட சொன்னார்கள். ஆனால், ரத்து செய்யாமல் ஏமாற்றி, திமுக தான் நீட் கொண்டுவந்தது என அபாண்டமாக பொய் கூறுகிறார்.

உண்மை என்னவெனில் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரையில் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால், பழனிசாமி ஆட்சியில் தான் நீட் வந்துள்ளது. அதேபோல், செல்போன் கொடுப்போம் என வாக்குறுதி கூறினர். இதுவரை யாராவது ஒருவருக்கு செல்போன் கொடுத்திருந்தால் நான் மன்னிப்பு கேட்க தயார். இப்போது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி என சொல்கின்றனர். தமிழகத்தில் 1.97 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அப்படி இருக்கையில் 1.97 கோடி பேருக்கு வேலை கொடுக்க முடியுமா? இப்படி தவறான, பொய்யான வாக்குறுதிகளை தான் முதல்வர் சொல்லி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE