சென்னை :''அ.தி.மு.க., அறிவித்த, ஆறு சிலிண்டர், 1,500 ரூபாய் பணம், வாஷிங் மிஷின் போன்ற இலவசங்களை, நிச்சயம் வழங்குவோம்,'' என, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.
சென்னை, திருவொற்றியூர் தேரடி சந்திப்பில், நேற்றிரவு, அ.தி.மு.க., திருவொற்றியூர் வேட்பாளர் குப்பன், மாதவரம் வேட்பாளர் மூர்த்தி ஆகியோரை ஆதரித்து, ஓ.பி.எஸ்., பிரசாரம் செய்தார்.வடிவுடையம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின், அவர் பேசியதாவது:கடந்த, 2006, தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஐந்தாண்டுகளில் அவர்களால், அதை சரி செய்ய முடியவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற ஒரே ஆண்டில், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி காட்டியவர், ஜெயலலிதா.தற்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வாரி வாரி வழங்குகிறது.
ஒரே ஆண்டில், 11 மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி தந்துள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கியது. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்திற்கு அதிக திட்டங்கள் கிடைத்துள்ளன.இலங்கை போரில், பல லட்சம் உயிர்கள் பறிபோனதற்கு, தி.மு.க., - காங்கிரஸ் தான் காரணம். எனவே, ஸ்டாலினின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது.அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, சொன்னதை செய்வோம்; செய்வதை தான் சொல்வோம். இதுவரை அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேபோல், இந்த தேர்தல் அறிக்கையில், குடும்ப தலைவிகளுக்கு, மாதம், 1,500 ரூபாய் பணம், 'வாஷிங் மிஷின்' ஆறு சிலிண்டர் இலவசம் என, கூறியுள்ளோம்; அவற்றை நிச்சயம் தருவோம்.யார் அராஜக ஆட்சி செய்வர்; யார் நல்லாட்சி தருவர் என்பது, உங்களுக்கே தெரியும். எனவே, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள்.இவ்வாறு, ஓ.பி.எஸ்., பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE