சென்னை:''கோட்டையில் உட்கார்ந்து, கால் ஆட்டியபடி, 'மிக்சர்' சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். ஒரு இடத்தில் கூட, அ.தி.மு.க., ஜெயிக்கக் கூடாது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளுக்கான, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்திரமேரூரில் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:தேர்தல் அறிக்கையில், 'மூன்று வேளாண் சட்டங்களால், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அ.தி.மு.க., குரல் கொடுக்கும்' என, பழனிசாமி., கூறியுள்ளார்.
ஏதோ திடீர் ஞானோதயம் வந்த மாதிரி பேசியுள்ளார்.அடிக்கடி அவர், விவசாயி, விவசாயி என, சொல்லிக் கொள்கிறார். ரவுடி பயல் தான் அடிக்கடி, 'நான் ரடிவு, நான் ரவுடி' என சொல்லுவது வழக்கம். போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி, தரகர்கள், புரோக்கர்கள் என்கிறார். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து, பல திட்டங்களை சாதித்து வருகிறோம் என, அபாண்டமான பொய்யை, முதல்வர் சொல்லி வருகிறார்.
'வர்தா' புயல் சேதத்திற்கு, தமிழக அரசின் சார்பில், 22 ஆயிரத்து, 573 கோடி ரூபாய் கேட்கப் பட்டது; ஆனால், 266 கோடி ரூபாய் தான், மத்திய அரசிடம் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு புயலுக்கும் குறைவான தொகையே வழங்கப்பட்டது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், கோட்டையில் உட்கார்ந்து, கால் ஆட்டிக்கிட்டு, மிக்சர் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே, ஒரு இடத்தில்கூட, அ.தி.மு.க., ஜெயிக்கக் கூடாது.
குடும்ப தலைவிகளுக்கு, மாதம், 1,000 ரூபாய் என, அறிவித்தோம். அடுத்த நாள், 1,500 ரூபாய் என அறிவித்தனர். அதுபோல, இவர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும், ஹெலிகாப்டர் தருவதாக கூட சொல்வர்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE