அன்னூர் : அன்னூர் ஒன்றியத்தில் 200 வீடுகளில் மடாதிபதிகள் மற்றும்
துறவியர் விளக்கேற்றும் நிகழ்ச்சி வரும் 18ம் தேதி
நடக்கிறது.குருக்கிளையம்பாளையத்தில் இருதரப்பினருக்கு இடையில் மோதல்
ஏற்பட்டது. இப்பகுதியில் அமைதி ஏற்படுத்துவது குறித்து, இந்து மக்கள் கட்சி
மற்றும் இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் அன்னூரில்
நடந்தது.கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்
பேசியதாவது:
வரும் 18ம் தேதி தீண்டாமை இருள் அகற்றும் தீபத்திருவிழா அன்னூர்
ஒன்றியத்தில் நடக்கிறது. கோவில்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவிலில் காலை
8.00 மணிக்கு துவங்குகிறது. அங்கிருந்து அருகம்பாளையம், பொன்னே
கவுண்டன்புதூர், பிள்ளையப்பம் பாளையம், அச்சம்பாளையம் மற்றும் நல்லி
செட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள காலனிகளில் உள்ள 200 வீடுகளில்
துறவியர், மடாதிபதிகள், காமாட்சி தீபம் மற்றும் திருமறைகளை வழங்கி, அங்கு
தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி,
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, பிள்ளையார் பீடம் மணிவாசக
சுவாமி, மாதம்பட்டி விஜயராகவ சுவாமி, பேரூர் மடம், ஆனைகட்டி ஆசிரமம் உள்பட
பல ஆசிரமங்களில் இருந்து துறவியர்கள், இந்து இயக்கத்தினர்
பங்கேற்கின்றனர். மதியம் அன்னூர் ஓதிமலை ரோட்டில் தெருமுனை பிரசாரமும்,
தாசபளஞ்சிக மண்டபத்தில் சமபந்தி விருந்தும் நடக்கிறது. இவ்வாறு அர்ஜுன்
சம்பத் பேசினார். தீபம் ஏற்றும் விழாவில், கொங்கு இளைஞர் பேரவை, கொங்கு
நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றம்,
ஓதுவார்கள் மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE