தேர்தல் பணி அதிகாரிகள் ரகசிய திட்டம்? ‛கிளப்பில் நடந்த ‛மிட் நைட் கூட்டம்‛| Dinamalar

தேர்தல் பணி அதிகாரிகள் ரகசிய திட்டம்? ‛கிளப்'பில் நடந்த ‛மிட் நைட் கூட்டம்‛

Updated : மார் 23, 2021 | Added : மார் 23, 2021 | |
வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களில் வந்திருந்த தேர்தல் செய்திகளை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, தேர்தல் களம் எப்படியிருக்கு. யாரெல்லாம் ஜெயிப்பாங்க,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''இப்ப, எதுவுமே கணிக்க முடியாத அளவுக்கு, ரொம்பவே கடுமையான போட்டியா இருக்குப்பா. கமல் பிரசாரம் எடுபடாதுன்னு நெனைச்சாங்க. ஆனா, நடுநிலை
சித்ரா_மித்ரா,  தேர்தல் பணி, அதிகாரிகள், ரகசிய_திட்டம்,  கிளப், மிட்நைட், கூட்டம்

வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களில் வந்திருந்த தேர்தல் செய்திகளை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, தேர்தல் களம் எப்படியிருக்கு. யாரெல்லாம் ஜெயிப்பாங்க,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''இப்ப, எதுவுமே கணிக்க முடியாத அளவுக்கு, ரொம்பவே கடுமையான போட்டியா இருக்குப்பா. கமல் பிரசாரம் எடுபடாதுன்னு நெனைச்சாங்க. ஆனா, நடுநிலை வாக்காளர்களும், முதல்முறை ஓட்டுப்போட காத்திருப்பவர்களும், இளைஞர்களும், பெண்களும் கமல் பேச்சை ஆர்வத்தோடு கேட்குறாங்க. திராவிட கட்சிகளை நார் நாறாய் கிழித்து தொங்கப் போடுறதை, ரசிக்கிறாங்க. அதெல்லாம், ஓட்டா மாறுச்சுன்னா, கோட்டைன்னு சொல்லிக் கிட்டு இருக்கறவங்க, அவ்ளோ தான்,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.''என்னக்கா, இப்படிச் சொல்லிட்டீங்க,''''ஆமாப்பா, இப்ப, 'கொரோனா' இரண்டாவது அலை தான் பரவுது; தேர்தலில் எந்த அலையும் வீசலை. மக்கள் அமைதியா, கவனிச்சுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு கட்சியும் வேண்டாம்ப்பா; போங்கப்பா, வெளியேன்னு சொல்லிடுவாங்க, போலிருக்கு,''''அந்தளவுக்கா, கள நிலவரம் இருக்குது,'' என, மித்ரா, அப்பாவியாய் கேட்டாள்.''ஆமாப்பா, தொண்டாமுத்துார்ல, எந்தெந்த ஏரியா 'வீக்'கா இருக்குன்னு 'ஸ்டடி' செஞ்சு, ஒரே நாளில் 'ரிப்போர்ட்' கொடுக்கணும்னு, உளவுத்துறைக்கு நெருக்கடி கொடுத்திருக்காங்க.அவகாசம் கொடுக்காததால, அவுங்களால சரியா தகவல் திரட்ட முடியலையாம். வன்னியர் இட ஒதுக்கீடு பிரச்னையால, குரும்பர், 24 மனை செட்டியார், அருந்ததியினர் சமூகத்தினர் மனக்கசப்புல இருக்காங்களாம்,''''சூலுாரிலும் பிரச்னை இருக்குன்னு கேள்விப்பட்டேனே,''''அதுவா, அ.தி.மு.க., ஊராட்சி தலைவர்கள் ஒவ்வொருத்தரா, தி.மு.க.,வுக்கு தாவிட்டு வர்றாங்க. ஒன்றிய துணை தலைவரும் போயிட்டாரு. இன்னும் அஞ்சு தலைவர்கள் போகப்போறதா பேசிக்கிறாங்க. அதனால, ஆளுங்கட்சிக்காரங்க மத்தியில் கலக்கம் இருக்குது.''வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும், கசமுசா ஏற்பட்டதா சொன்னாங்களே,'' என, இழுத்தாள் மித்ரா.''மித்து, அது, சிங்காநல்லுார் தொகுதியில நடந்தது. வாஜ்பாய், எம்.ஜி.ஆர்., - ஜெ., படங்கள் வச்சிருந்தாங்க.இதுல, வாஜ்பாய் படம் மட்டும் ரொம்ப பெருசா இருந்துச்சு. அதை பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள், 'என்னப்பா, ஜெ., படம் சின்னதா இருக்கு'ன்னு சொல்லியிருக்காங்க. அவுங்க பேசுனது, கூட்டணி கட்சிக்காரங்க காதுல விழுந்ததால, வாஜ்பாய் வயசுல மூத்தவரு; தப்பு ஒன்னுமில்லை; நமக்கு வெற்றிதானே முக்கியம்னு சமாளிச்சிட்டாங்க,''''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''கவுண்டம்பாளையம் தொகுதியிலும் ஏகப்பட்ட கூத்து நடக்குது.வடக்கு மாவட்ட காங்., தலைவரா இருந்தவரு, உள்ளாட்சி எலக்சன் நடந்தப்ப, ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டாரு. இப்ப, தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவா, ஓட்டு கேட்டு போறாரு. அவரை சிக்க வைக்கிறதுக்காக, பழைய வீடியோவை தேடிப்பிடிச்சு, சமூக வலைதளத்துல பரப்பி விட்டுட்டு இருக்காங்க,''''மித்து, அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே,'' என்ற சித்ரா, ''பூத் கமிட்டிக்கு கரன்சி சப்ளை செய்ய ஆரம்பிச்சிட்டதா கேள்விப்பட்டேனே, உண்மையா,'' என, கேட்டாள்.''ஆமாக்கா, தொண்டாமுத்துார் தொகுதியில, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில இருக்குற வார்டுகளுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க. ஆனா, அவிநாசி தொகுதியில பிரச்னை ஓடிட்டு இருக்காம்,''''அவிநாசி, திருப்பூர் மாவட்டம் ஆச்சே,''


''அக்கா, அவிநாசி தொகுதியில இருக்கற அன்னுார் ஒன்றியம் கோவை மாவட்டத்துல இருக்கு. இங்க, ஒரு பூத் கமிட்டிக்கு, 5,000 ரூபாய்தான் கொடுத்திருக்காங்க. அதனால, கட்சிக்காரங்க ரொம்பவே 'அப்செட்'டுல இருக்காங்க,''''அதிலும், 1,000 ரூபாயை ஓட்டுப்பதிவு அன்னைக்கு செலவுக்கு வச்சுக்கிடணுமாம். மீதமுள்ள, 4,000 ரூபாயை, ஆளுங்கட்சிக்காரங்களும், கூட்டணி கட்சிக்காரங்களும் பிரிச்சு செலவு செய்யணுமாம். டீ குடிச்சாலே, 20 ஆயிரம் ரூபாய் ஆகுமேன்னு ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பிட்டு இருக்காங்க,''''தி.மு.க., கூட்டணியை பத்தி எதுவுமே சொல்லலையே,'' என, கேட்டபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''பணம் பட்டுவாடா செய்ய, மேலிடத்துல இருந்து, சிக்னல் வந்திருச்சாம். 'நிதி'யானவர் தேவையான கரன்சி கொடுப்பாராம்; 'அலைக்கற்றை'யில் சிக்குனவரு 'சப்ளை' பொறுப்பாளராம்.கனகச்சிதமா பட்டுவாடா செய்றதுக்கு பக்கவா 'பிளான்' போட்டு வச்சிருக்காங்களாம். அவுங்க, 'ரூட்'டை தெரிஞ்சுக்க கூடாதுன்னு, ஆளுங்கட்சி மேல, ஏதாச்சும் குற்றச்சாட்டு சொல்லிக்கிட்டே இருக்காங்களாம்,''''அதெல்லாம் இருக்கட்டும், அ.தி.மு.க.,வை மீட்போம்னு மார்தட்டுன, தினகரன் கட்சிக்காரங்களை களத்திலேயே காணோமே,''''ஆமாக்கா, வேட்பு மனு செஞ்சிட்டு போனவங்கதான். பிரசாரம் செய்றதுக்கு வீதிக்குள்ள வர்றதே இல்லை. காங்., வேட்பாளர் கூட, அப்பப்ப, ஒவ்வொரு ஏரியாவுல பிரசாரம் செய்றாரு,''''பி.ஜே.பி., வேட்பாளர் வானதிக்கு, ஏற்கனவே, தெற்கு தொகுதியில போட்டியிட்ட அனுபவம் இருக்கறதுனால, ஸ்டெப் ஸ்டெப்பா ஆதரவு திரட்டுறாங்க. வேட்பாளர் அறிமுக கூட்டத்துல, அவுங்க பேசுனதை கேட்டு, ஆளுங்கட்சிக்காரங்க அதிர்ச்சியாகிட்டாங்க, தெரியுமா,''''அப்படி, என்னத்த பேசிட்டாங்க,''''தமிழக அரசை காப்பாத்த, பி.ஜே.பி, உதவியா இருந்துச்சு. அமைச்சர்களை பத்தி விசாரிச்சாங்கன்னு பேசுனதை கேட்டதும், ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் 'ஜெர்க்' ஆயிட்டாங்க,''''ஓ... 'ரூட்' அப்படிப்போகுதா,'' என்ற மித்ரா, ''தெற்குத்தொகுதியில வட மாநிலத்துக்காரங்க எக்கச்சக்கமா வசிக்கிறாங்க. அவுங்க ஓட்டை கவர்வதற்கும், டில்லியில் இருந்து மகளிர் குழுவை அழைச்சிட்டு வந்திருக்காங்க. அவுங்களுக்கு சம்பளம், சாப்பாடு, தங்குறதுக்கு வசதி செஞ்சு கொடுத்திருக்காங்களாம்,'' என்றாள்.''அப்ப, தெற்கில் போட்டி கடுமையா இருக்கும் போலிருக்கே,''''ஆமாக்கா, களப்பணியில, பா.ஜ., முன்னேறி போயிட்டு இருக்கு. கமல் கட்சியில, பில்டிங் 'ஸ்டிராங்க்'கா இருக்கு; 'பேஸ்மட்டம்' வீக்கா இருக்கு. கட்சி தலைவரா, ரொம்பவே மெனக்கெடுறாரு; தொண்டர்களுக்கு தேர்தல் வேலையே தெரியலை. கடைசி நாலு நாள், வீதி வீதியா கமல் பிரசாரம் செய்யப் போறதா சொல்றாங்க. அப்போ, கோயமுத்துாரையே ஸ்தம்பிக்க வைக்கலாம்னு நெனைக்கிறாங்க,''''மேட்டுப்பாளையத்துல, அவரது கட்சி வேட்பாளர் வேட்பு மனுவே தள்ளுபடி ஆயிடுச்சே,''''அதுவா, ஒரு படிவம் பூர்த்தி செஞ்சது தப்புன்னு சொல்லி, துாக்கி எறிஞ்சிட்டாங்க. திராவிடக்கட்சிகளின் வேலையாவும் இருக்கலாம்னு பேசிக்கிறாங்க,''''மேட்டுப்பாளையத்துல கூட்டணி கட்சிக்காரங்களை, தி.மு.க.,காரங்க மதிக்கறதே இல்லையாமே,'' என, கேட்டாள் சித்ரா.''நீங்க சொல்றது சரிதான்! காங்., நிர்வாகிகள் கூட்டத்துல கலந்துக்கச் சொல்லி, தி.மு.க., வேட்பாளருக்கு அழைப்பு விடுத்தாங்களாம்; அவரு கண்டுக்கவே இல்லையாம். கூட்டத்துக்கும் வரலையாம்; பிரசாரத்துக்கும் கூப்பிடுறதில்லையாம். கதர்ச்சட்டைக்காரங்க நொந்து நுாடில்ஸ்சாகி இருக்காங்க,'' என்றபடி, மதிய உணவை, டிபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு, தேர்தல் களத்துக்குச் செல்ல தயாரானாள் மித்ரா.''மித்து, வண்டியை நான் ஓட்டுறேன்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஆன் செய்த சித்ரா, ''போலீஸ் அதிகாரிகளை மாத்தணும்னு, தி.மு.க., தரப்புல, தேர்தல் கமிஷனருக்கு புகார் அனுப்பியிருக்காங்களாமே,'' என, கேட்டாள்.''ஆமாக்கா, தி.மு.க., தலைமைக்கு ஆலோசனை சொல்ற நிறுவனத்துக்கு பக்கபலமா, நம்மூரை சேர்ந்த சிலர் இருக்காங்க. அவுங்க உந்துதல்ல, அஞ்சு போலீஸ் அதிகாரிகளை மாத்தச் சொல்லி, புகார் கொடுத்திருக்காங்க,''''அதுல, போலீஸ் கமிஷனர் பெயரும் அடிபட்டு இருக்கு. கொரோனா பரவல் ஆரம்பிச்சதுல இருந்து, அவரு யாரையுமே ஆபீசுக்குள்ள நுழைய விடுறதில்லை; யாரையும் சந்திக்க அனுமதிக்கிறதும் இல்லை. தனிமையை நேசிக்கிறாராம். வடக்கு லாபியில் தப்பிச்சிட்டு இருக்காராம். தேர்தல் கமிஷன் என்ன செய்யப் போகுதோ,''''அதெல்லாம் இருக்கட்டும். பறக்கும்படையினர் பறிமுதல் செய்றதை பத்தி, எலக்சன் அதிகாரிகள் 'மூச்' விட மாட்டேங்கிறாங்களே, எதுக்கு மறைக்கிறாங்க,'' என, நோண்டினாள் சித்ரா.''அதெல்லாம், பரம ரகசியம்னு, அங்க இருக்கற மூன்றெழுத்து மேடம் சொல்றாங்க. பறிமுதல் பண்ணுற பணம் பத்தி, தேர்தல் கமிஷனே 'டெய்லி' அறிவிக்குது. பறிமுதல் பட்டியல்ங்கிறது அரசாங்க பொது ஆவணம். பொதுமக்களுக்கு வெளிப்படையா தெரியப்படுத்தணும்,''''மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கூட, தேர்தல் தேதி அறிவிச்சதும், நியாயமாவும், நேர்மையாவும், வெளிப்படையாவும் தேர்தல் நடக்கும்னு சொன்னாரு,'''அவரு, அப்படிதான் சொல்வாரு! கொஞ்ச நாளைக்கு முன்னாடி, தேர்தல் பணியில் இருக்கற சில அதிகாரிகள், செட்டிபாளையம் கிளப்புக்கு, நள்ளிரவு நேரத்துல வந்துட்டு போயிருக்காங்க. ஏன் வந்தாங்க; எதுக்கு வந்தாங்கன்னு உளவுத்துறைக்காரங்க குடைஞ்சிட்டு இருக்காங்க,''''அப்படியா,'' என, வாயை பிளந்த சித்ரா, கலெக்டர் ஆபீசை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X